Published : 15 Oct 2019 03:05 PM
Last Updated : 15 Oct 2019 03:05 PM

கைவிடாத கானா!

என்.கௌரி

புள்ளிங்கோ என்ற வார்த்தை பிரபலமாகக் காரணமாக இருந்தவர், அந்த வைரல் கானா பாடலை எழுதிப் பாடியவரான ‘கானா’ ஸ்டீபன். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த இவர், பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் படித்திருக்கிறார். “இந்த வீடியோ எடுக்கும்போது அது இந்த அளவுக்கு ரீச் ஆகும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

என் முகம் தெரிஞ்சா போதும் என்ற அளவில்தான் இந்த வீடியோவ எடுத்தேன். கேமரா முன்னாடி முதலில் பாடி நடிக்கவே வரல. கேமராமேன் வெற்றிதான் நடிக்க வரலைனு திட்டினார். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமாதான் கேமரா முன்னால் பாடப் பழகிக்கிட்டேன். இந்தப் பாட்டு எனக்குத் தேடிக்கொடுத்திருக்கிற அங்கீகாரம் ரொம்பப் பெரிசு” என்று நெகிழ்கிறார் ‘கானா’ ஸ்டீபன்.

கடந்த மார்ச் மாதம் இவர் யூடியூப்பில் பதிவேற்றிய ‘கும்பலாக சுத்துவோம்’ என்ற கானா பாடலை இப்போதுவரை நான்கரைக் கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். “கானா அச்சுவின் டியூனில்தான் இந்தப் பாடல் வரிகளை எழுதிப் பாடினேன். இந்த வீடியோவுக்கு பென்னட் இசை அமைத்தார். அந்த வீடியோவில் பயன்படுத்திய பைக், கண்ணாடி போன்ற அம்சங்கள் எல்லாமே கேமராமேன் வெற்றியின் ஐடியா. இந்த வீடியோவுக்காக ‘கானா’ உதயாவும் உதவியிருக்கிறார்” என்கிறார் அவர்.

‘புள்ளிங்கோ மீடியா’ என்ற யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் தற்போது தன் கானா பாடல்களைப் பதிவேற்றிவருகிறார் ‘கானா’ ஸ்டீபன். நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்களுக்காகவே கானா பாடல்களைப் பதிவேற்றியிருக்கிறார். “சின்ன வயசிலிருந்தே கானா பாடல்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். எங்க அப்பா மூராஜ், வானகரம் மீன் மார்க்கெட்டில் வேலைபார்க்கிறார்.

அவர் ஒரு கானா பாடகர். வேலைக்குப் போகாத நேரத்துல கானா பாடல்கள் பாடிக்கொண்டிருப்பார். அவர்தான் கானாவுக்கான முதல் இன்ஸ்பிரேஷன். அவரால கானாவில் சாதிக்க முடியாததை நான் சாதிக்கணும்னு ஆசைப்படுகிறேன். ஆனால், படிப்புதான் முக்கியம்னு தெரியும். நல்லபடியா மேல படிக்கணும் என்ற ஆசையிருக்கிறது” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ஸ்டீபன்.

ஆனால், இந்தப் புள்ளிங்கோ டிரெண்டில் சில வீடியோ மீம்ஸ் தன் மனதை மிகவும் காயப்படுத்தியதாகச் சொல்கிறார் அவர். “புள்ளைங்க என்று பேசுபவர்கள் எல்லாம் ஏதோ இன்டீசன்ட்டான இளைஞர்கள் மாதிரி சில வீடியோ மீம்ஸ் பதிவுசெய்திருந்தார்கள். அது என்னை மிகவும் பாதித்தது. ‘லோக்கல் ஸ்லாங்’கில் பேசுபவர்கள் எல்லாம் இன்டீசன்ட்டானவர்கள் என்ற கருத்து தவறானது. அந்தக் கருத்தை யாரும் சமூக ஊடகங்களில் ஊக்குவிக்கக் கூடாது என்பதைக் கோரிக்கையாகவே முன்வைக்கிறேன்” என்கிறார் அவர்.

ஆராய்ச்சி வேண்டாம்

ஒருபுறம், கானா பாடலைக் கொண்டாடும் ரசிகர்கள் மறுபுறம் பாடல் வரிகளை விமர்சனமும் செய்கிறார்கள். “கானா பாடல் வரிகளைப் பெரிய அளவுக்கு ஆராய்ச்சி பண்ண வேண்டிய அவசியமில்ல. கானா பாடல்களைக் கொண்டாட்டம், பொழுதுபோக்கு என்ற அளவில் எதிர்கொண்டால் போதும். ஆனால், தனிப்பட்ட முறையில் இப்போது கானா பாடல்களை நல்ல கருத்துகளுடன் எழுதுணும்னுதான் முயற்சி பண்றேன்.

குடி, போதைப் பழக்கத்தைக் கொண்டாடுவதற்காக கானாவைத் தவறாகப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், பல நேரத்தில் குடித்துவிட்டு கானா பாடல்களைக் கேட்கவருபவர்கள் தன்னிலை மறந்து, கானா பாடகர்களை மிரட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். அதுபோன்ற தருணங்களை நானும் எதிர்கொண்டிருக்கிறேன்” என்று பகிர்ந்துகொள்கிறார் ஸ்டீபன்.

கானா ஒரு அற்புதமான இசை வடிவம். அதை வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்து அதுக்காக உண்மையாக உழைப்பவர்களை அது ஒருபோதும் கைவிட்டதே கிடையாது என்று சொல்லும் ஸ்டீபன், “அதை மரியாதையாக நாம கையாண்டால் நமக்கான மரியாதை தன்னால கிடைக்கும். கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் கானா பாடகர்கள் பாலா, முத்து எல்லாம் என்னோட சீனியர்ஸ். அவர்களின் பாடல்களைக் கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். இன்று அவர்கள் எல்லாம் எனக்கு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு வாய்ப்பளிக்கிறார்கள். அது ரொம்ப மகிழ்ச்சி” என்று சொல்கிறார். ஸ்டீபன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x