Published : 14 Oct 2019 13:53 pm

Updated : 14 Oct 2019 15:25 pm

 

Published : 14 Oct 2019 01:53 PM
Last Updated : 14 Oct 2019 03:25 PM

கிரேட்டாக்களை எப்படி புரிந்துகொள்வது?

greta

- ஜெ. சரவணன், saravanan.j@hindutamil.co.in

கிரேட்டா தன்பர்க். இந்தப் பெயர் இன்று உலகப் பிரபலம். கடந்த வாரங்களில் இணையத்தில் கிரேட்டா, அதிபர் ட்ரம்பை முறைத்துப் பார்க்கும் புகைப்படமும் வீடியோவும்தான் வைரலாகிக்கொண்டிருந்தன. ஆனால், கடந்த சில வருடங்களாகவே கிரேட்டா தன்பர்க் பருவநிலை மாற்றம் குறித்த போராட்ட களத்தில் இயங்கிக்கொண்டிருந்தார் என்பது இன்று அவரைக் கொண்டாடும் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

ஐநா சபையில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் கோபம் கொப்பளிக்க பேசிய பிறகுதான் இந்த ‘இளம் போராளி’க்கு ஊடக வெளிச்சமும், உலகத்தின் பார்வையும் கிடைக்கிறது. ஆனாலும் ஒருபக்கம் அவருடைய பின்னணியை அலசி அவர் மீது விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்ப சிலர் தவறவில்லை. சொல்லப்போனால் எச்சரிக்கை தூதர், புத்தி சுவாதீனம் இல்லாத சிறுமி, மூளைச் சலவை செய்யப்பட்டவள், கைப்பாவை என்ற பல பெயர்களை ஒரே நேரத்தில் பெற்றார்.

கிரேட்டா குறித்த விமர்சனங்களைப் பற்றி பார்க்கும்முன், கிரேட்டா முன்வைக்கும் பருவநிலை நீதி போராட்டத்தைப் பற்றி பேசுவோம். ஏனெனில், உலகின் இன்றைய அவசர தேவையான விழிப்புணர்வை மிகப்பெரிய அளவில் கிரேட்டா ஏற்படுத்தியிருக்கிறார். மாணவர்களின் மனங்களில் இயற்கையைப் பற்றிய பிரக்ஞையையும், பருவநிலை குறித்த எச்சரிக்கையையும், கொஞ்சம் அரசியல் பார்வையையும் விதைக்கக் காரணமாக இருந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இம்மாதிரியான போராட்டத்தை முன்னெடுப்பவரின் நம்பகத் தன்மை குறித்து அலசினால், அந்தப் போராட்டமும் நீர்த்துப் போகும் என்பதும் ஒரு முக்கியகாரணம். பருவநிலை மாற்றம் பூமியில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். புவிவெப்பமயமாதல் என்பது ஒரு மாயை என்றோ, இயற்கை தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் என்றோ சொன்னாலும் கூட, இன்றைய சூழலில் பருவநிலை மாற்றம் என்பது மனித குலத்துக்கு அச்சுறுத்தலாகத்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

கிரேட்டாவின் கோபம்

நியூயார்க்கில் உலகத் தலைவர்கள் பங்கேற்ற ஐ.நா. பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் கிரேட்டா பேசியது இதுதான், “உங்கள் வெற்று வார்த்தைகளால் என் கனவுகளையும் குழந்தைப் பருவத்தையும் நீங்கள் திருடிவிட்டீர்கள். மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். செத்து மடிகிறார்கள். ஒட்டு
மொத்த உயிர்ச்சூழலும் சமநிலை இழந்து சிதைந்து அழிந்துகொண்டிருக்கிறது. பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பேசுவதெல்லாம் பணத்தைப் பற்றியும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை பற்றியும் தான். எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு!” என்று அவர் பேசிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

அவருடைய கேள்விகளும், அதிலிருக்கும் கோபமும் முற்றிலும் நியாயமானது. யாரும் மறுக்க முடியாத நீதியைத்தான் அவர் கேட்கிறார். அதனால்தான் அவருடைய போராட்டத்தில் 150 நாடுகளிலிருந்து 60 லட்சம் பேர் தங்களை இணைத்துக்கொண்டார்கள். உலகம் முழுவதும் கிரேட்டாவுக்கு ஆதரவும் கிடைத்தது. உண்மையில் நாம் எல்லோருமே பருவநிலை மாற்றம் தொடர்பாக நம்முடைய பங்கை செலுத்த வேண்டியது அவசியம். ஆனால், அதேசமயம் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கெனவே தீர்மானித்துவிட்ட சிலரின் முகமாக கிரேட்டா இருக்கிறாரா என்பதுதான் மிக முக்கியமான சந்தேகமாக பெரும்பாலானோரை உறுத்துகிறது. ஏனெனில், அவருடைய பேச்சில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறதோ, அதே அளவுக்கு முதிர்ச்சியின்மையும் இருக்கிறது.

நவீன உலகின் சிக்கல்

ரஷ்ய அதிபர் புதின் ‘சிறுமி கிரேட்டா நவீன உலகின் சிக்கல்களைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்’ என்றார். உண்மைதான். பருவநிலை மாற்றத்துக்கான போராளிகள் முன்வைக்கும் பெரும்பாலான தீர்வுகள் இன்றைய பொருளாதார சூழலுக்கு முற்றிலும் பொருந்தாதவை. அதுமட்டுமல்லாமல், பருவநிலை மாற்றம் தொடர்பாக மேற்கத்திய நாட்டின் அறிவியலாளர்கள் முன்வைக்கும் நடவடிக்கைகளும் எந்த வகையிலும் மாற்றத்தைக் கொண்டுவராது. காரணம், நாம் அப்படியான காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

சில மாதங்களாகவே இந்தியாவின் பொருளாதார மந்த நிலை, வளர்ச்சி சரிவு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, கம்பெனிகள் மூடல் போன்ற செய்திகளைக் கடந்து
வந்தபோது நாடே பதறியது. வேலைவாய்ப்பின்மையும், போதுமான வருமானமின்மையும் இன்றைய மிகப்பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த சமூகம் எதிர்பார்க்கும் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும். அதற்கு ஏற்ப உங்களுடைய வருமானம் இருந்தே ஆக வேண்டும்.

இதையெல்லாம் செய்ய நாம் தயாரா?

வளர்ச்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை. ஒரு நாள் லாரிகள் வேலை நிறுத்தம் செய்தால் எத்தனை ஆயிரம் கோடி நஷ்டம், மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிப்பு என்பதையெல்லாம் பார்க்கிறோம். ஒரே ஒரு நாள் பெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்கள் முடங்கினால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கிவிடும். உலகம் முழுவதும் வாகனப் போக்குவரத்தை நிறுத்திவிட்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். பருவநிலை மாற்றத்தைப் பொருத்தவரை கான்கிரீட் கட்டிடங்கள் கூடாது, தொழிற்சாலைகள் கூடாது, வாகனங்கள் கூடாது, காடுகள் அழிப்பு கூடாது, கனிமச் சுரங்கங்கள் கூடாது... இதெல்லாம் தான் நாம் செய்யக்கூடிய நியாயமாக இருக்க முடியும். இதையெல்லாம் செய்ய நாம் தயாரா?

ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் கிரேட்டாவை நோக்கி இவ்வாறு கேட்கிறார்,‘‘நவீன உலகின் அத்தனை சவுகரியங்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் தலைமுறை நீங்கள்தான். விதவிதமான மோட்டார் வாகனத்தில் பயணிக்கிறீர்கள், வீடுகளில் குளிர்சாதனங்கள், கையில் ஸ்மார்ட்போன், வகுப்பில் கணினி என பொருளாதார வளர்ச்சியின் அத்தனை சுகங்களையும் அனுபவிக்கும் தலைமுறை நீங்கள் தான். எனவே பருவநிலை மாற்றம் குறித்து போராடுவதற்கு முன், பள்ளிக்கு நடந்து செல்லுங்கள், ஸ்மார்ட்போனை தூக்கிப் போட்டுவிட்டு புத்தகத்தைப் படியுங்கள், உங்கள் அறைகளில் உள்ள குளிர்சாதனங்
களை நிறுத்திவிடுங்கள்.

பிறகு போராடுங்கள்” என்கிறார். இதற்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது? சைக்கிளில் செல்பவர்கள், காரில் செல்பவர்களைப் பார்த்து ஏங்காமல் இருக்க வேண்டும். காரில் செல்பவர், சைக்கிளில் செல்பவரை ஏளனம் செய்யாமல் இருக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களெல்லாம் நடந்தால்தான் மாற்றம் சாத்தியம். ஆனால், வேலைவாய்ப்பு இல்லாமல், பணப்பெருக்கம் இல்லாமல், வருமானம் இல்லாமல், வறுமையிலும் நோய்மையிலும் செத்து மடிய இனியும் இந்த உலகம் தயாராக இல்லை. இன்னொரு சந்தேகமும் கிரேட்டா விஷயத்தில் எழுப்பப்படுகிறது.

கிரேட்டாவின் ஓராண்டு பயணம்

இயற்கையின் மீது காதல் கொண்ட 16 வயது சிறுமி, உலக நாடுகளின் தலைவர்களை எதிர்த்துப் பேச அவ்வளவு எளிதில் அனுமதிக்கப்பட்டுவிடுவாளா? கடந்த ஆண்டு கிரேட்டா, தன்னந்தனியாக ஸ்வீடன் பாராளுமன்றத்தின் முன் அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினார். We don't have time என்ற முழக்கத்தைப் பயன்படுத்தினார்.

உண்மையில் We don't have time என்பது ஒரு என்ஜிஓ. இந்த என்ஜிஓதான் கிரேட்டாவின் பருவநிலை போராட்டத்தின் பயணத்தை வழிநடத்தியது. அடுத்தடுத்து WWF போன்ற பன்னாட்டு அமைப்புகள் உடன் கைகோர்த்து ஓராண்டில் அவரை ஐ.நா.வரைக் கொண்டுவந்தன. ஐநாவில் பேசிய பிறகுதான் அவர் உலகம் முழுவதும் அறிமுகமானார். பள்ளி புறக்கணிப்பு போராட்டம் முதல், விமானத்தை விடுத்து படகில் பயணித்து அமெரிக்கா வந்து உலகத் தலைவர்களை கோபமாக சீண்டியது வரை எல்லாமே இந்த என்ஜிஓக்களின் மார்க்கெட்டிங் என்கிறார்கள் சில சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள்.

‘பருவநிலை மாற்றம் தொடர்பாக நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது யார் என்பதிலிருந்துதான் பிரச்சினை தொடங்குகிறது’ என்கிறார்கள். கிரேட்டாவை முன்னிறுத்தி அவரை இயக்கும் என்ஜிஓக்களும் அமைப்புகளும் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. பாரிஸ் பசுமை ஒப்பந்தம் நினைவு இருக்கிறதா, அது முழுக்க முழுக்க மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ஒப்பந்தம். அதற்கு பல வளரும் நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன. அந்த ஒப்பந்தத்தை நாடுகள் ஏற்றுக்கொண்டால், குறிப்பாக இந்தியா ஒப்புக்கொண்டால் இன்று பிரதமர் மோடி அறிவித்துள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு மூடுவிழாதான்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் தீர்வுகள், வளரும் நாடுகளைக் குறிவைக்கின்றன. உண்மையில் வளர்ந்த நாடுகள் எந்தவொரு பொருளாதார இயக்கத்தையும் பருவநிலை மாற்றத்தின் நீதிக்காக வேண்டி நிறுத்தப் போவதில்லை. எனவே, வளரும் நாடுகளின் பொருளாதார இயக்கத்தை நிறுத்துவதன் மூலம் ஓரளவுக்கு பருவநிலைக்கு தீர்வு காணலாம் எனத் திட்டமிடுகின்றன.

தன் வீடு சுத்தமாக இருக்க வேண்டுமென பக்கத்து வீட்டில் குப்பையைக் கொட்டுவது போலான திட்டம். இந்த ஒப்பந்தத்தில் wwf அமைப்புக்கும், உலக வங்கிக்கும் பங்குண்டு. இந்த wwf அமைப்புதான் கிரேட்டாவை முன்னிறுத்தி உல
குக்கு பருவநிலை குறித்த எச்சரிக்கையை விடுக்கிறது. கிரேட்டா மூலம் விடுக்கப்படும் எச்சரிக்கை எல்லோரிடத்திலும் பயத்தை ஏற்படுத்தும், உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் இவர்களின் நோக்கம்.

முதலாளித்துவத்தின் நாக்கு

எப்போது முதலாளித்துவம் அதன் விளிம்பு நிலையை நெருங்குகிறதோ, தன்னுடைய எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள உடனடியாக ஒரு நெருக்கடியை உருவாக்கும். நெருக்கடியை உருவாக்கி, அந்த நெருக்கடிக்கு ஏழைகளை பலியாக்கி, மீண்டும் தனது முதலாளித்துவத்தை உயிர்ப்பித்துக் கொள்ளும். அதுதான் எல்லா நெருக்கடி காலத்திலும் நடந்திருக்கிறது. இப்போதும் அதுவே திட்டமிடப்படுகிறது என்கிறார்கள். எனவேதான் கிரேட்டா என்ற போராளியை விடுத்து, அவர் முன்னெடுக்கும் போராட்டத்தை ஆழ்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார்கள்.

போராட்டத்தை முன்னெடுப்பவரை பின்னுக்குத் தள்ளுவதல்ல நோக்கம், போராளிகளையும் போராட்டத்தையும் புரிந்து கொள்வதில் நாம் என்ன தவறு செய்கிறோம் என்பதை உணர வேண்டும். எதற்காக ஒரு போராட்டத்தை ஆதரிக்கிறோம். அந்தப் போராட்டத்துக்கு நாம் என்ன பங்காற்றி இருக்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும்.

ஏனெனில் இங்கு போராட்டங்களுக்கும் போராளிகளுக்கும் பஞ்சமே இல்லை. நாளுக்கொரு போராளிகள் உருவாகின்றனர். ஆனால், அவர்களின் போராட்டம் ஏற்படுத்தும் விளைவு என்ன என்பதுதான் இங்கு மிகப்பெரிய கேள்விக்குறி. எப்போதுமே போராட்டங்களில் முன் நிற்பது யார் என்று பார்ப்பதை விட, போராட்டங்களை இயக்குவது யார் என்று பார்ப்பது தான் அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ளவும் உண்மையான மாற்றத்
தைக் கொண்டு வரவும் உதவும். பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் என்பது கத்தி மீது நடப்பதைப் போன்றது. 200 ஆண்டுகளாக அழித்த பூமியை ஓரிரவில் மீண்டும் புத்துயிர் அடையச் செய்துவிட முடியாது? அதற்கு பல தலைமுறையினரின் ஒத்துழைப்பும் தியாகமும் தேவையாக இருக்கிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

கிரேட்டாகிரேட்டா தன்பர்க்உலகப் பிரபலம்கிரேட்டாவின் கோபம்நவீன உலகம்ஓராண்டு பயணம்முதலாளித்துவம்பருவநிலை மாற்றம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author