Published : 14 Oct 2019 01:03 PM
Last Updated : 14 Oct 2019 01:03 PM

லாபம் தரும் அசெட் அலொகேஷன்

எஸ்.சேதுராமன், சிஇஓ,
சுரபி இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ்

நீண்ட கால அடிப்படையில் உங்களது முதலீடுகள் லாபகரமாக செயல்பட வேண்டுமானால், அதை உரிய வகையில் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஒரே திட்டத்தில் முழு முதலீட்டையும் போடுவதற்கு பதிலாக, பல்வேறு திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யும் நடைமுறையை பின்பற்றுவது சிறந்தது. இதன் மூலம் ஒரு நிதித் திட்டம் சரிவர செயல்படாமல் போனாலும் மற்ற நிதித் திட்டங்கள் அதை சரிக்கட்டும்.

இதனால் வருவாயில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் பர்ஸை பதம் பார்க்காமல் பார்த்துக்கொள்ள முடியும். உரிய நேரத்தில் சரியான திட்டங்களில் முதலீடு செய்வதுதான் சரியான திட்டமிடலாகும். சந்தையின் ஏற்ற, இறக்க சுழற்சி அடிப்படையில் பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான காரணிகளால் சில திட்டங்கள் மிகச் சிறப்பாக செயலாற்றி லாபம் தரும்.

முதலீட்டு வழிமுறைகள்: பங்கு (ஈக்விடி) சார்ந்த முதலீடுகளில் அசெட் அலொகேஷன் எனப்படும் பிரித்து முதலீடு செய்யும் முடிவை பங்குகள் விலை குறைவாக இருக்கும்போது மேற்கொள்ள வேண்டும். அதேபோல அவற்றின் விலை உயரும்போது விற்றுவிட வேண்டும்.

முதலீட்டாளர்கள் எப்போதுமே வழக்கமான முதலீட்டு முறைகளிலேயே அதாவது கிடைக்கும் வட்டியில் நிகழும் மாற்றங்களை கணக்கிடாமலேயே முதலீடு செய்கின்றனர். பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்வதை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடானது உணர்வுபூர்வமான முடிவாகத்தான் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக ஆபரணத் தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடு உணர்வு ரீதியிலானதாகத்தான் உள்ளது. பொதுவாக இதுபோன்று உணர்வுபூர்வமாக எடுக்கப்படும் முதலீடுகள் பெரும்பாலும் பயனற்றவையாகத்தான் உள்ளன. தாங்கள் செய்த முதலீட்டுக்கு உரிய பலன் கிடைக்காததை பின்னர் உணரும்போது பிற முதலீட்டு நடவடிக்கைகளை எடுக்க தயங்கி தங்கத்தில் முதலீடு செய்ததற்காக வருந்துவதில் பயனில்லை. மிகவும் சிக்கலான நிதி மேலாண்மையை சிந்தித்து மேற்கொள்வதுதான் சரியான தீர்வாக இருக்கும்.

நிதித் திட்டங்களில் முதலீடு: கடன் பத்திரம், பங்கு பத்திரம், தங்கம் உள்ளிட்டவற்றில் எதில் முதலீடு செய்வது என்பதை தரம் பிரித்து அதில் எந்த அளவுக்கு முதலீடு செய்வது என்பதில் அந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும். இதில் ஒன்றை விட மற்றொன்று எந்த வகையில் சிறந்தது என்பதைத் தெரிந்துகொண்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிதித் திட்டங்களில் முதலீடு மேற்கொள்ளும் முன்பு நிதி மேலாளர் அவற்றின் சந்தை மதிப்பீடுகளை அதாவது பங்கு மற்றும் கடன் பத்திரங்களின் நிலையை ஆராய்வார்.

அத்துடன் கடன் சந்தையில் நிலவும் வாய்ப்புகளையும் ஆராய்வார். இதன்படி ஆராய்ந்து எடுக்கப்படும் முதலீடுகள் மிகச் சரியான விகிதத்தில் இருக்கும். மேலும் கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே மேற்கொள்ளப்படும். நிறைவாக முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட முதலீட்டை மேற்கொள்ள பரி சீலிக்கும்போது குறிப்பாக அதிகபட்ச முதலீட்டை மேற்கொள்ளும்போது பல்வேறு திட்டங்களில் பரந்துபட்டு முதலீடுகளை மேற்கொள்வதே நல்ல லாபம் அடைய வழிவகுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x