Published : 13 Oct 2019 12:15 PM
Last Updated : 13 Oct 2019 12:15 PM

பெண்கள் 360: பெருமைக்குரிய செல்வி

தொகுப்பு: முகமது ஹுசைன்

முன்னேறும் சவுதிப் பெண்கள்

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்துவருகின்றன. உடலை முழுவதுமாக மூடும் ஆடை அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தன. இந்த நிலையில் முகம்மது பின் சல்மான், சவுதி இளவரசராகப் பதவியேற்ற பிறகு பல்வேறு புதிய சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும், திரையரங்குகளுக்குச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது. சவுதியின் 87-ம் தேசிய தினத்தையொட்டி 2018-ல் பெண்கள் முதன் முறையாக மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் பாதுகாப்புப் படையில் சேரவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான மற்றொரு படி இது. இதன்மூலம் பெண்கள் சார்ஜெண்ட்டாகப் பணியாற்ற முடியும்” என்று பதிவிட்டுள்ளார். சவுதியில் பெண்கள் முன்னேற்றத்துக்காகச் சீர்திருத்தங்கள் நடந்துவருவதை அந்நாட்டில் உள்ள பெண் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

பெருமைக்குரிய செல்வி

திறந்தவெளி கழிப்பறையிலிருந்து பாதுகாப்பான கழிவறையை நோக்கி மக்களைக் கொண்டுசெல்ல வேண்டும் என்கிற நோக்கில், மத்திய அரசால் ‘தூய்மை இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது. அதற்காக நாடு முழுவதும் ஊக்குவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊக்குவிப்பாளர் பணியில் சிறப்பாகச் செயல்பட்டவர் என்ற அடையாளத்துடன் மதுரையைச் சேர்ந்த செல்வி என்பவருக்கு மத்திய அரசு விருது வழங்கிக் கவுரவித்துள்ளது. சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வி, 11-ம் வகுப்புவரை படித்திருக்கிறார். கிராமம் கிராமமாக அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தின் விளைவாக சுமார் ஐந்தாயிரம் கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. செல்வியின் பணியைப் பாராட்டி திருமங்கலம் வட்டார ஊரக வளர்ச்சித் துறையில் தற்காலிகப் பணியாளராக நியமித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பாலியல் புகார் குழு இல்லையா?

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்படி, அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் பற்றி புகார் தெரிவிக்க ஒவ்வோர் அலுவலகத்திலும் ‘உள்ளகப் புகார் குழு’ (ஐசிசி) அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவின் தலைவராகப் பெண் அதிகாரியை நியமிக்க வேண்டும். குழுவின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதத்தினர் பெண்களாக இருக்க வேண்டும். ஒரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவராகவும் பெண்ணுரிமை சார்ந்த விஷயங்களில் செயல்படுகிறவராகவும் இருக்க வேண்டும். பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தால், என்ன வகையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விதிமுறைகளை வகுத்து, அதைச் சுற்றறிக்கையாக அரசுக்கும் அனுப்புவதுடன் அலுவலக ஊழியர்களின் பார்வையில் படும்படி ஒட்டிவைக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறதா எனத் தெரியவில்லை. பெண்களைப் பெருவாரியாக வேலைக்கு அமர்த்தும் தொழில்நகரங்களிலும் இதே நிலை நீடிக்கிறது. இதற்கெனத் தனிக் கண்காணிப்புக் குழு செயல்படாததும் இந்நிலைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. பெண்களின் பணியிடப் பாதுகாப்பு குறித்து அரசு காட்டும் அக்கறை இவ்வளவுதான் என்பதைத்தான் ‘உள்ளகப் புகார் குழு’ இல்லாத அலுவலகங்கள் உணர்த்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x