Published : 13 Oct 2019 12:06 PM
Last Updated : 13 Oct 2019 12:06 PM

விவாதக் களம்: அரசு விழித்துக்கொள்ள வேண்டும்

குழந்தைப்பேறு வேண்டும் என்பதற்காக 74 வயதில் செயற்கைக் கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எர்ரமட்டி மங்கயம்மா என்பவர் குறித்து செப்டம்பர் 29 அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதியிருந்தோம். கடந்த சில ஆண்டுகளாக 60 வயதைக் கடந்த பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பணயம் வைத்து, செயற்கைக் கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது. குழந்தை பெற்றுக்கொண்டே ஆகவேண்டும் எனப் பெண்கள் மீது ஏற்றி வைக்கப்படும் சுமை குறித்தும் சமூக அழுத்தம் குறித்தும் வாசகர்களிடம் கருத்து கேட்டிருந்தோம். வந்து குவிந்த கடிதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் உங்கள் பார்வைக்கு:

ப்படியாவது குழந்தையைப் பெற்றுவிட வேண்டும் என்ற தீவிர ஆசை அலைபாயும் போது இப்படியெல்லாம் இயற்கைக்கு மாறாகச் செயல்படத் தோன்றும். நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகளும் சிலநேரம் இதுபோன்ற வற்றுக்குத் துணைபோவது வருத்தமே.
சமூக ஆர்வலர்களின் துணையுடன் மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். மாவட்டம்தோறும் ஆலோசனை மையங்களை அமைக்கலாம். செயற்கைக் கருவூட்டல் மையங்களை அரசே நடத்துவதுடன் தனியார் மையங்களின் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும். இது பெரும் சமூக அவலமாக மாறும் முன் அரசாங்கம் விழித்துக்கொள்வது நல்லது.

- சுகுணா ஜெகநாதன், திருநெல்வேலி.

ருவத்தே பயிர் செய் என்பது திருமண வாழ்வுக்கும் பொருந்தும். காலம் கடந்த திருமணங்களும் சில நேரம் குழந்தைப்பேறின்மைக்குக் காரணமாக அமைந்துவிடும். இப்போதெல்லாம் 40-களிலேயே பலருக்கும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. அப்படியிருக்கும்போது 70 வயதுக்கு மேல் குழந்தை பெறுவது ஆரோக்கியமானதா? பெற்றோருக்கே உதவி தேவைப்படும்போது அந்தக் குழந்தைகளை யார் பராமரிப்பது?
வீட்டாரும் சுற்றத்தினரும் தூற்றுவார்கள் எனப் பயந்து உயிரைப் பணயம் வைக்கத் தேவையில்லை. இதில் மருத்துவர்களின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. வயது கடந்த பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையுடன் வருகிறவர்களுக்குத் தகுந்த அறிவுரை சொல்லி வழிநடத்த வேண்டுமே தவிர, பணத்துக்காக அவர்களின் ஆரோக்கியத்தைப் பறிக்கக் கூடாது. திருமண வயதுக்குச் சட்டம் இருப்பதைப் போல் குழந்தைப் பெற்றுக் கொள்ளவும் சட்டம் இருந்தால் தேவையில்லாத அசம்பாவிதங்களைத் தடுக்கலாம்.

- ஜானகி ரங்கநாதன், மயிலாப்பூர்.

74 வயதில் குழந்தை பிறந்ததை மங்கயம்மாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் வேண்டுமானால் சாதனை என்று சொல்லலாமே தவிர மாதவிடாய் நின்றபிறகு தாய்மை அடைவதை மருத்துவ ஆய்வுகள் வரம் என்று சொல்லவில்லை. மங்கயம்மாவுக்குக் கொடுக்கப்பட்ட வீரியமான மருந்து, மாத்திரைகளால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து அவர்களுக்கு முறைப்படி அறிவுறுத்தினார்களா என்பதுகூடத் தெரியாது. வயதான தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகள் பல்வேறு குறைபாடுகளுடனும் ஆட்டிசம், டவுண் சிண்ட்ரோம் போன்ற மரபணு சார்ந்த குறைபாடுகளுடன் பிறப்பதற்கான சாத்தியம் உண்டு. ஆனால், வணிக நோக்கில் செயல்படும் செயற்கைக் கருவூட்டல் மையங்களோ விளம்பரத்துக்காக அப்பாவிப் பெண்களைப் சோதனைக் கருவிகளாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. வயதான பிறகு குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோருக்கு மட்டும் சிரமமல்ல; குழந்தைகளில் எதிர்காலத்துக்கும் சவால்தான். குறிப்பிட்ட வயது கடந்து குழந்தை பிறக்கவில்லை என்றால் ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்கலாம். தத்தெடுக்க விரும்பவில்லை என்றால் தமக்குத் தெரிந்த நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவலாம்.

நம் நாட்டில் சட்டம் என்பது சட்டம் போட்டுச் சுவரில் மாட்டத்தான் என்னும் நிலை நீடிக்கும்வரை வணிக நோக்கில் செயல்படும் கருத்தரிப்பு மையங்கள் புற்றீசல் போலப் புறப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். பெண்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் இதுபோன்ற மையங்களைக் கண்காணிப்பதுடன் குறிப்பிட்ட வயதுக்கு மேல் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை செய்யக் கூடாது என்பதை அவசரச் சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.
குழந்தை பெற்றுக்கொள்வதுதான் பெண்ணுக்கு மரியாதை என்ற மூட நம்பிக்கையை விட்டும் சமூக அழுத்தத்தைக் கடந்தும் பெண்கள் வெளிவர வேண்டும்.

- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

யது கடந்த தாய்மை என்பது மருத்துவச் சாதனையா, பெண்களின் மேல் வைக்கப்பட்டுள்ள சுமைகளில் ஒன்றா? பெண்ணைச் சுமைதாங்கிக் கல்லாகவே சித்தரிக்க முயலும் இந்தச் சமூகத்தின் செயலாகவும் இதைப் பார்க்கலாம். தாய்மை என்பது குழந்தை பெற்றுக்கொள்வது மட்டு மல்ல. அவர்களுக்குச் சொத்து சேர்ப்பதும் பாதுகாவலராக இருப்பதும் மட்டும் அல்ல. குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்வதுதானே தாய்மையின் குணங்களாக இருக்க முடியும்? ஆனால், தாய்மை என்பதைப் பெண்களுடன் மட்டுமே முடிச்சுபோட்டுப் பார்க்கும் அவலமும் நம் சமூகத்தில் நடக்கத்தான் செய்கிறது. குழந்தை வளர்ப்பும் பெண்ணின் மீதே சுமத்தப்படுகிறது.

ஒரு பெண் தாயாகவில்லை என்றால் அது அவளது குற்றமல்ல. பெண் என்பவள் தனிப்பட்ட உணர்வுகள் கொண்ட உயிர் என்பதை இந்தச் சமூகம் எளிதில் மறந்துவிடுகிறது. டப்பாக் களில் அடைத்துவைக்கப்படும் பொருட்களைப் போலவே பெண்ணையும் நடத்துகிறது.

எத்தனை வயதில் வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது தம்பதியின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், அதில் குழந்தையின் நலனும் இருப்பதை மறுக்க முடியாது. ஆரோக்கியத்துடன் வாழ குழந்தைக்கு எல்லா உரிமையும் உண்டு எனும்போது நம் ஆசைக்காக அதைப் பலியிடக் கூடாது. வயது கடந்த தாய்மை குறித்த விழிப்புணர்வும் சட்டங்களும் அவசியம்.

- புகழ் இன்பா, தாம்பரம்.

குழந்தை வேண்டும் என்றால் சட்டரீதியாகக் குழந்தைகளைத் தத்தெடுக்க எவ்வளவோ வழிமுறைகள் உண்டு. அந்த வகையில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் ஆதரவின்றி வாடும் குழந்தைக்கும் நல்லதொரு வாழ்வைத் தரும். மக்களின் குழந்தை மோகத்தைத் தனியார் கருத்தரிப்பு மையங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. மக்களும் அவற்றை நம்பி லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். குழந்தைப்பேறின்மை குறித்த விழிப்புணர்வில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கருவுறாமைக்கான காரணங்களையும் அவற்றைக் களைவதற்கான தீர்வையும் பொதுசுகாதாரத் துறை மூலம் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

- பொன். கருணாநிதி, கோட்டூர்.

ருத்தடையை ஏற்றுக்கொண்டதுபோல் செயற்கைக் கருத்தரிப்புத் தொழில் நுட்பத்தையும் ஏற்கலாம்; தவறல்ல. ஆனால், வயது வரையறை சட்டமாக்கப்பட வேண்டும். 74 வயதில் நடந்த செயற்கைக் கருத்தரிப்பு நிகழ்வு, சாதனையல்ல. வெட்டகப்பட வேண்டிய வேதனை. வணிக நோக்கில் செயல்படும் மையங்களைத் தகுந்த சட்டங்களைக் கொண்டு கண்காணிப்பது அவசியம்.

- க.ரவீந்திரன், ஈரோடு.

தாய்மை என்பது இனப்பெருக்கம் சார்ந்த நிகழ்வாக இருந்தாலும் அதன் முழுப் பொறுப்பும் பெண் மீது மட்டுமே சுமத்தப்படு கிறது. குழந்தையில்லாப் பெண்ணை நோக்கி, “எங்கள் வீடு சுடுகாடு ஆகிவிட்டது” என்று கணவர் வீட்டார் சாடும்போதும் அக்கம் பக்கத்தினர் ஏளனமாகவும் குதர்க்கமாகவும் பேசும்போதும் உயிரைப் பணயம் வைத்தாவது குழந்தை பெற்றுக்கொள்ளத்தானே பெண் மனம் விரும்பும்? உதாசீனங்களும் அவமானங்களும் சேர்ந்துதான், மாதவிடாய் நின்ற பிறகும் செயற்கைக் கருவூட்டலைத் தேடிப்போகச் செய்யும். பெண்களின் இந்தத் தவிப்பைத்தான் தனியார் கருத்தரிப்பு மையங்கள் பயன்படுத்தி, பணத்தைப் பிடுங்குகின்றன. இதில் அரசு தலையிட்டே ஆக வேண்டும். ஒவ்வொரு மாவட்டத் தலைமை மருத்துவமனையிலும் குழந்தையின்மைக்குச் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட வேண்டும். பெண்களின் நலன் கருதி வலுவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

- எம். ராஜா, திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x