Published : 13 Oct 2019 11:30 AM
Last Updated : 13 Oct 2019 11:30 AM

பக்கத்து வீடு: மாற்றத்துக்கு வித்திட்ட ‘ப்ளூ கேர்ள்’

எஸ். சுஜாதா

உலகக் கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்குள் 3,500 பெண்கள் தங்களுக்கான டிக்கெட்களைப் பெற்றுக்கொண்டனர்! இந்த நவநாகரிக யுகத்தில் கால்பந்துப் போட்டியைக் காண பெண்கள் வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது? ஆச்சரியம் மட்டுமல்ல; இது ஒரு வரலாற்றுச் சாதனையும்கூட! இது நிகழ்ந்த இடம் ஈரான்.

ஈரானில் பெண்களுக்குக் கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கால்பந்து மைதானத்துக்குள் பெண்கள் நுழைவதற்கு 38 ஆண்டுகளாகத் தடைவிதிக் கப்பட்டிருந்தது. இந்தத் தடையை உடைப்பதற்குப் பெண்கள் நீண்ட காலம் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. சிறைத்தண்டனைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. இறுதியில் ஓர் உயிரைக் காவுகொடுக்க வேண்டியிருந்தது.

கல்லூரிப் படிப்பு, வேலை, வாகனம் ஓட்டுதல், விளையாட்டு என்று பல்வேறு விஷயங்களில் ஈரானியப் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. பிற நாட்டுப் பெண்களுக்கு எளிதாகக் கிடைப்பவற்றைக்கூட, போராட்டங்களின் மூலமே இவர்கள் பெற்றுவருகிறார்கள். 1979-ல் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் கால்பந்து விளையாட்டு மைதானங்களுக்குச் செல்ல பெண்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. சட்டம் எதுவும் இயற்றப்படாமலே இவ்வளவு காலமும் இந்தத் தடை அமலில் இருந்துவந்தது.

எது ஒன்று மறுக்கப்படுகிறதோ அதைப் பெறவே மனித மனம் விரும்பும். 2005-ம் ஆண்டு கால்பந்து விளையாட்டு மைதானத்தின் வாயிலில் நின்று பெண்கள் சிலர் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று போராடினர். பல்வேறு விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்தனர். பெண்களில்கூட கணிசமானவர்கள், எத்தனையோ உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது; ஒரு விளை யாட்டைப் பார்க்க அனுமதி கேட்டுப் போராடுவது அவ்வளவு முக்கியமா என்று கேட்டனர். முக்கியம் இல்லாத சாதாரண விஷயம்கூட மறுக்கப்படும் நிலையில் இருக்கும்போது, அதைப் பெறுவதற்குப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்றார்கள் போராட்டக்காரர்கள்.

ஆண்டுகள் கடந்தன. இன்றைய நம் போராட்டம் நமக்குப் பயன்படா விட்டாலும் எதிர்காலச் சந்ததியினருக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் புதிது புதிதாகப் போராட்டக்காரர்களும் உருவாகிக் கொண்டேயிருந்தனர். அப்படிப் பட்ட போராட்டக்காரர்களில் ஒருவராக சாஹர் கோடயாரியை மாற்றிவிட்டது, கால்பந்து விளையாட்டின் மீதிருந்த ஆர்வம். ஆங்கிலத் திலும் கணினியிலும் பட்டங்களைப் பெற்ற புத்திசாலி.

தொலைக்காட்சியில் பார்க்கும் கால்பந்து விளையாட்டை ஒரு முறை யாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார் சாஹர். பெயரிலேயே சுதந்திரம் என்ற பொருளைக்கொண்ட ‘ஆஸாதி’ மைதானத்துக்குக் கடந்த மார்ச் மாதம் ஆண் உடையில் சென்றார். பாதுகாவலர்களின் பரிசோதனையில் பிடிபட்ட சாஹர், தடையை மீறிய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். மூன்று இரவுகள் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு பிணையில் வெளியே வந்தார்.

ஆறு மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு, செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. தடையை மீறியதன் மூலம் பகிரங்கமாக ஒரு பாவச் செயலைச் செய்தது, ஹிஜாப் அணியாமல் பொது இடத்தில் தோன்றியது, அதிகாரிகளை அவமதித்தது போன்ற குற்றங்கள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும் நாள். நீதிபதி இல்லாத காரணத்தால் தீர்ப்பு வெளியிடவில்லை. ஆனாலும் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று பரவலாகப் பேசப்பட்டது.

ஈரானைச் சேர்ந்த கணிதவியலாளர் மரியம் மிர்ஸாகனி, கணிதத்தின் நோபல் என்று அழைக்கப்படும் ‘ஃபீல்ட் மெடல்’ பெற்ற முதல் பெண். ஹிஜாப் அணியாமல் அமெரிக்காவில் வசித்தவருக்குத் தம் வாழ்நாள் முழுவதும் ஈரானில் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. ஹிஜாப் அணியாத குற்றத்துக்காகப் பல்வேறு பெண்கள் சிறைத்தண்டனையை அனுபவித்திருக்கிறார்கள்; அனுபவித்தும் வருகிறார்கள். மனிதத் தன்மையற்றதாக இருக்கிறது ஈரான் பெண்கள் சிறைச்சாலை. நல்ல உணவோ சுத்தமான குடிநீரோ வழங்கப்பட மாட்டாது. அசுத்தமான சூழலில் குறைந்த இடத்தில் ஏராளமானவர்கள் வசிக்க வேண்டும்.

மோசமான முறையில் விசாரணை என்ற பெயரில் பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை எல்லாம் அறிந்த, தன் அனுபவத்தாலும் உணர்ந்த சாஹர் சட்டென்று அந்தத் துயரமான முடிவை எடுத்தார். நீதிமன்ற வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றி, தீ வைத்துக்கொண்டார். அவரை அள்ளிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஒரு வாரத்தில் சாஹர் என்ற இளஞ்சுடர் அணைந்துபோனது. சாஹர் இட்ட தீ ஈரானியப் பெண் களின் மனத்தில் புதிய எழுச்சியை உண்டாக்கிவிட்டது. சாஹரின் பெயரைப் பயன்படுத்தினால் குற்ற மாகக் கருதப்பட்டதால், அவருக்குப் பிடித்த கால்பந்து அணியின் நீல நிறத்தைக் குறிக்கும் விதத்தில் ‘ப்ளூ கேர்ள்’ என்ற பெயரில் நீதி கேட்டுப் போராட்டம் வெடித்தது. அது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

சர்வதேசக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு, எந்த நிபந்தனையும் இன்றி ஈரானியப் பெண்கள் 2022 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி களைக் காண அனுமதி வழங்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தது. மனித உரிமை ஆணையம் உட்பட உலகின் பல்வேறு அமைப்புகளும் ஈரானிய அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுத்துவந்தன. இதன் விளைவாக சாஹர் இறந்து சரியாக ஒரு மாதத்தில், ஈரானுக்கும் கம்போடியாவுக்கும் நடைபெற்ற கால்பந்து போட்டியைக் காண பெண்களுக்கு அனுமதி வழங்கப் பட்டது. போராட்டம் ஒன்றே உரிமைகளை மீட்டெடுக்க உதவும் என்பதால், பெண் களின் போராட்டங்கள் தொடரட்டும். அதேநேரம் போராட்டத்துக்குப் பலியான கடைசி உயிராக சாஹர் இருக் கட்டும்.

“நடந்து முடிந்துள்ள துயரச் சம்பவங்கள் அனைத்து ஈரானியர் களின் இதயங்களையும் காயப்படுத்தி யிருக்கிறது. நீண்ட போராட்டத்தின் விளைவால் பெண்கள் கால்பந்து மைதானத் துக்குள் நுழைந்ததன் மூலம் ‘ப்ளூ கேர்ள்’ என்றென்றும் நினைவில் இருந்து கொண்டிருப்பார்” என்று சாஹருக்குப் பிடித்த ஈரானிய கால்பந்து அணியின் கேப்டன் வோரியா கஃபூரி தெரிவித் திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x