Published : 12 Oct 2019 12:27 PM
Last Updated : 12 Oct 2019 12:27 PM

என் வீடு என் அனுபவம்: தேடிக் கண்டடைந்த வீடு

சுபா செல்வகுமார்

வாழ்க்கையில் எல்லாம் எனக்கு அழகாகக் கிடைத்தது. ஆனால், சொந்த வீட்டுக்காக மட்டும் நான் 13 ஆண்டுகள் காத்திருந்தேன். 2002-ல் திருமணம் முடித்த கையுடன் என் கணவர் வேலை செய்யும் ஊருக்குக் கிளம்பிவிட்டோம். அந்த ஊரில் வாடகை வீட்டில் எங்கள் புது வாழ்க்கையைத் தொடங்கினோம். சொந்த வீட்டிலேயே வாழ்ந்து பழகிய எனக்கு வாடகை வீட்டு வாசம் கொஞ்சம் அசெளகர்யமாகத்தான் இருந்தது.

அப்போதே சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற வேட்கை நெஞ்சுக்குள் சுடர்விடத் தொடங்கியது. விரைவிலேயே சொந்த வீடு வாங்கும் படலத்தைத் தொடங்கினோம். தெரிந்த நண்பர்கள் பலரிடமும் சொல்லிவைத்தோம். இதற்காக நாளை ஒதுக்கி வீடுகளைப் பார்க்கத் தொடங்கினோம். வீடு தேடுதல் என்பது பெரும் பயணமாக இருந்தது. பலதரப்பட்ட வீடுகளைப் பார்த்தும் மன திருப்தி இல்லாமல் இருந்தது. பார்த்ததில் சில வீடுகள் பிடித்திருந்தாலும் ஏதோ காரணங்களால் அவை கை நழுவிப் போயின.

மகனுடன் நால்வரானோம்

இதற்கிடையில் கட்டிய வீட்டை வாங்குவது சரியில்லை எனச் சிலர் யோசனை சொன்னார்கள். கட்டிய வீடு நம் வசதிக்கு ஏற்ப இருக்காது. மேலும் அவ்வளது உறுதியை எதிர்பார்க்க முடியாது. இதுபோன்ற பல காரணங்களைச் சொல்லி மனை வாங்கி, வீடு கட்ட நண்பர்கள், உறவினர்கள் சிலர் அறிவுறுத்தினர். ஆனால் பிழைக்க வந்த ஊரில் வீடு கட்டுவது என்பது எங்களுக்கு மலைப்பாக இருந்தது. ஏனெனில், வேலைப் பளுவுக்கு இடையில் என் கணவர் கட்டுமானப் பணிகளைக் கவனித்துக் கொள்வது அவ்வளது எளிதல்ல.

எங்களுக்கு உதவ, உறவினர்கள் யாரும் இந்த ஊரில் இல்லை. அதனால் கட்டிய வீட்டை வாங்கத் தீர்மானித்தோம். அதன் பிறகு அந்த வீட்டில் எங்களுக்குத் தேவையான மாற்றத்தைச் செய்துகொள்ளலாம் என முடிவுசெய்தோம். தேடுதல் வேட்டையும் தொடர்ந்தது.2003-ல் எங்கள் செல்ல மகள் பிறந்தாள். இந்த நேரத்தில் என் மாமனார் சொந்த ஊரில் எங்களுக்கு ஒரு வீடு வாங்கித் தந்தார். 13 செண்டில் அது பிரம்மாண்டமான வீடு. மரங்கள், செடிகள் சூழ்ந்த அழகான வீடு. ஆனால் அந்த வீட்டில் வாழ எங்களுக்கு நேரம் வரவில்லை. வேலையின் பொருட்டு
இருக்கும் ஊரில்தானே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் அந்த வீட்டை நாங்கள் ஒரு சொத்தாகத்தான் பார்த்தோம். அந்த வீட்டை வாடகைக்குத்தான் விட்டிருக்கிறோம்.

கேரளக் கட்டிடக் கலையில் ஒரு வீடு

அடுத்த மூன்று வருடங்களில் எங்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். ஆனால், வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. முதலில் நானும் என் கணவர் என இருவராகத் தேடினோம். பிறகு அந்தத் தேடலில் மகளும் சேர்ந்துகொண்டாள். இப்போது எண்ணிக்கை நால்வர் ஆகிவிட்டது. ஆனாலும், எங்களுக்கான வீடு கிடைத்தபாடில்லை.

வெகு நாட்களுக்குப் பிறகு ஒருவர் மூலமாக ஒரு வீட்டைப் பார்க்கச் சென்றிருந்தோம். அந்த வீடு கேரளக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டிருந்தது. அவ்வளவு அழகாக இருந்தது. வீட்டின் நுழைவில் சிமெண்டால் வாழைப் பூ விளக்கைச் செய்து அதற்குப் பித்தளை வண்ணம் பூசியிருந்தார்கள். அதைக் கடந்து உள்ளே போனால் கேரளக் கட்டிடக் கலையில் சாருபடி அமைத்திருந்தார்கள். இது நமது கட்டிடக் கலையில் காணப்படும் திண்ணைக்கு ஒப்பானது.

மிகுந்த ரசனையுடன் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டை வாங்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. எப்படியோ நீண்ட காலத் தேடலுக்குப் பிறகு ஒரு நல்ல வீட்டைக் கண்டுபிடித்துவிட்டோம் என ஆசுவாசம் அடைந்தோம். அந்த வீட்டைத் தேர்ந்தெடுத்த பிறகு வாங்குவதற்கு முன் ஆவணங்களைச் சரிபார்க்கத் தொடங்கினோம். அங்கு வந்தது புதிய சிக்கல். இவ்வளவு நீண்ட தேடுதலுக்குப் பிறகு கண்டடைந்த அந்த வீட்டின் பத்திரத்தில் சிக்கல் இருந்தது. மிகவும் கஷ்டமாக இருந்தது. சரி என விட்டுவிட்டு மீண்டும் தேடுதலில் இறங்கினோம்.

கண்டேன் வீட்டை

பிறகு ஒரு தரகர் மூலம் ஒரு வீட்டைப் பார்க்கப் போனோம். நாங்கள் சென்று இறங்கியதும் குளிர் காற்று எங்களைத் தழுவியது. நாங்கள் இருக்கும் வாடகை வீட்டில் காற்றே கிடையாது. இவ்வளவுக்கும் சுற்றிலும் மரங்கள் இருக்கும். ஆனால், காற்றில் அசையாமல் அப்படியே இருக்கும். இங்கோ காற்று நன்றாக வீசிக் கொண்டிருந்தது. இந்த ஒரு காரணத்துக்காகவே இங்கு வீடு வாங்க வேண்டியதுதான் எனத் தோன்றியது.

ஆனால், வீட்டைப் பார்த்ததும் ஏமாற்றமாக இருந்தது. மேலும் அக்கம் பக்கத்தில் வீடே இல்லை. வீட்டை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது குழந்தைகள் மாடிக்கு ஏறிச் சென்றுவிட்டார்கள். அவர்களை அழைக்கச் சென்றபோது தூரத்தில் இள மஞ்சள் நிறத்தில் ஒரு வீட்டைப் பார்த்தோம். ஏனோ அதைப் போலதான் எங்களுக்கான வீடு எனத் தோன்றியது. தரகரிடம் அதுபோல் வீடு இருந்தால் காண்பிக்கவும் எனச் சொன்னோம். அந்த வீடு அழகாகவும் இருந்தது. சுற்றிலும் வீடுகள் இருந்தது. இந்தப் பகுதியில் நல்ல காற்றோட்டமும் இருந்தது.

சில நாட்கள் கழிந்து தரகரிடமிருந்து அழைப்பு வந்தது. நாங்கள் மாதிரிக்காகக் காண்பித்த அந்த வீடே விற்பனைக்கு இருப்பதாகச் சொன்னார். உடனடியாகச் சென்றோம். சுற்றிப் பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே அந்த வீடு இருந்தது. பத்தே நாட்களில் பத்திரப் பதிவு முடிந்தது. அந்த வீட்டில் நாங்கள் ஏற்கெனவே, பார்த்து வாங்க முடியாமல் போன கேரளக் கட்டிடக் கலை வீட்டில் கண்ட சில் மாறுதல்களைச் செய்தோம்.

அங்கு பார்த்த சிமெண்ட் வாழைப் பூ விளக்கை வீட்டின் முகப்பில் அமைத்தோம். சாருபடி திண்ணை அமைத்தோம். வீட்டில் எங்களுக்குத் தேவையான சில மாறுதல்களையும் செய்தோம். வீட்டுப் பால்காய்ச்சுக்கு வந்தவர்கள் வீட்டின் வடிவமைப்பைப் புகழ்ந்தார்கள். நீண்ட தேடுதலுக்குப் பிறகு எங்கள் வீட்டைக் கண்டடைந்த மகிழ்ச்சி எங்களுக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x