Published : 12 Oct 2019 11:09 AM
Last Updated : 12 Oct 2019 11:09 AM

மூட்டு நோய்களுக்குப் போடுவோம் பூட்டு!

டாக்டர் சு. முத்துச் செல்லக் குமார்

அக்டோபர் 12: உலக மூட்டழற்சி நாள்

நிற்க, நடக்க, அமர, எழுத, படிக்க, திரும்ப எனப் பல்வேறு செயல்களுக்கும் மூட்டுகள் மிகவும் அவசியம். மூட்டுகளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் நம்முடைய வேலைகள் எல்லாமே முடங்கி விடும். மூட்டுவாதப் பாதிப்பு என்பது பொ.மு.4500 ஆண்டுகளில் வாழ்ந்த மனிதர்களுக்குக்கூட இருந்திருக்கிறது.

உலகெங்கும் பல கோடி மக்கள் பல்வேறு மூட்டழற்சி, மூட்டுவாத நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வீக்கம், வலி, வேதனை, அவற்றை நீட்ட, மடக்க இயலாமை ஆகியவையே இந்த நோய்களின் தொந்தரவுகளாக இருக்கும். இந்தத் தொந்தரவுகள் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே வரும். இவை முடக்கு வாதம், கீல் வாதம், மூட்டு வாதம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வயதாக, வயதாக மூட்டு வாத நோய்கள் அதிகரிக்கும்.

முக்கிய வகைகள்

# கீல்வாதம்
# முடக்கு வாதம்
# பல்வேறு துகள்கள் / பொருட்கள் படிவதால் ஏற்படும் மூட்டழற்சி,
# சோரியாசிஸ் மூட்டு வாதம்.
# தொற்று நோய்க்கிருமிகளால் ஏற்படும் மூட்டழற்சி,
# மூட்டு வாத நோய்களில் மூட்டு மட்டுமல்ல, பல்வேறு தசை, தசைநார், மூட்டுகளின் சவ்வு, இணைப்பு திசு நோய்களும் அடங்கும்.

கீல்வாதம் (Osteoarthritis)

இது முதியவர்களைப் பெரிதும் பாதிக்கும். மூட்டுகள் அமைந்திருக்கும் இடத்திலுள்ள குருத்தெலும்புகள் சிதைவதால் அங்குள்ள எலும்புப் பகுதிகளில் உராய்வு ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய எலும்பு தோன்றும். இதனால் இரண்டு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி குறுகிவிடும். இந்த வகை மூட்டுப்பாதிப்பு பெரும்பாலும் கை, முழங்கால், இடுப்பு, முதுகெலும்பு ஆகியவற்றைப் பாதிக்கும். மூட்டுகளின் உட்பகுதி நலிவடைவதால் ஏற்படும் மூட்டழற்சி, மூட்டுத் தேய்மான பாதிப்பால் ஏற்படும் மூட்டு வாதம்.

அறுவை சிகிச்சையினாலோ அடிபடுவதாலோகூட இத்தகையப் பாதிப்பு ஏற்படலாம். உடல் பருமனாலும் நீரிழிவு, பிற ஹார்மோன் நோய்களினாலும், பிறவி மூட்டு நோய்களினாலும் இத்தகைய மூட்டுப் பாதிப்பு ஏற்படலாம். எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் மூட்டுப் பாதிப்பை உணர்ந்து கொள்ளலாம்.
சில வலி குறைப்பான் மருந்துகளோடு குளுக்கோசமைன், காண்ட்ராய்டின் போன்ற குருத்தெலும்பு கூறு மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவச் சிகிச்சையினால் நிவாரணம் கிடைக்காதவர்கள், மூட்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துகிறார்கள்.

முடக்கு வாதம் (Rheumatoid arthritis)

உடல் எதிர்ப்பாற்றல் புரதங்களால் மூட்டு பாதிக்கப்படுவதால் இத்தகைய வாதம் ஏற்படுகிறது. இந்த நோய் மூட்டுகளை மட்டும் பாதிப்பதில்லை. நுரையீரல், கண், சருமம், இதயம், ரத்த நாளங்கள், நரம்பு என உடலின் பல்வேறு பகுதிகளையும் பாதிக்கும். வலது, இடது என இரண்டு கை, மணிக்கட்டு, முழங்கால் மூட்டுகள் ஒரே நேரத்தில் இதனால் பாதிக்கப்படலாம். வலி குறிப்பாக, காலை வேளைகளில் அதிகமாக இருக்கும். மூட்டிலுள்ள சவ்வும் பாதிக்கப்படும்.

சி-ரியாக்டிவ் புரதப் பரிசோதனை, ஆன்டி நியூக்ளியர் ஆன்டிபாடி பரிசோதனை, ஆன்டி-சைக்ளிக் சிட்ரல்லினேட்டட் பெப்டைடு பரிசோதனை, முடக்குக் காரணி ஆகிய பரிசோதனைகள் மூலம் இந்த மூட்டு வாத பாதிப்பைக் கண்டுபிடிக்கலாம். வலி குறைப்பான் மருந்துகளோடு, ஸ்டீராய்டு, நோயின் தன்மையை மாற்றும் மருந்துகள், புதிய உயிரியல் மருந்துகள் ஆகிய சிகிச்சைகள் இவர்களுக்கு உதவுகின்றன. வலி அதிகமாக இருக்கும் போது ஓய்வும் மற்ற நேரத்தில் உடற்பயிற்சியும் இவர்களுக்குப் பயன் தரும்.

துகள்கள் படிவதால் ஏற்படும் மூட்டு அழற்சி

யூரிக் அமிலம் ரத்தத்தில் அதிகரித்து அது உடலிலுள்ள மூட்டுகளில் படிய ஆரம்பிக்கும். குறிப்பாக,பெருவிரல் காலுடன் சேருமிடத்தில் இந்த படிவுகள் அதிகமாக இருக்கும். யூரிக் அமில வளர்சிதை மாற்றம் அடையும் போது ஏற்படும் சில நொதிகளின் செயல் மாறுதல்களினால் யூரிக் அமிலம் ரத்தத்தில் அதிகரித்துவிடும். குறிப்பாக, யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக உற்பத்தியானாலோ முறையாக வெளியேற்றப்படாமல் போனாலோ, யூரிக் அமிலம் ரத்தத்தில் அதிகரித்து மூட்டுகளில் படிய ஆரம்பித்து விடும். இந்த நோயாளிகளுக்கு மூட்டுப் பாதிப்புடன், சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படும். இவர்களுக்கு யூரேட் கற்கள் சிறுநீரகத்திலும் சிறுநீர் வெளிச் செல்லும் குழாய்களிலும் படியும். இதனால், சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.

இவர்களுக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரித்து இருப்பதுடன், மூட்டு நீரை உறிஞ்சிப் பரிசோதனை செய்தால், அதில் மோனோசோடியம் படிவங்கள் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். இவர்களுக்குத் தற்காலிகமாக வலி குறைப்பான் மருந்துகளைப் பயன்படுத்தலாம். யூரிக் அமிலத்தை ரத்தத்தில் குறைக்கும் மருந்துகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். ஒயின் போன்ற மது வகைகள், இறைச்சி ஆகியவற்றை இவர்கள் தவிர்க்க வேண்டும். சிலருக்குக் கால்சியம் பைரோபாஸ்பேட் படிவங்களும் மூட்டுகளில் படிந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்.

சோரியாசிஸ் மூட்டு வாதம்

சோரியாசிஸ் என்ற தோல் நோய் தோலோடு முடிவதில்லை. அது கை, கால் நகங்களைப் பாதிப்பதுடன் மூட்டுகளையும் பாதிக்கும். எதிர்ப்பாற்றல் புரதங்களின் பாதிப்பினால் தான் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்து, நோயின் தன்மையை மாற்றும் மருந்துகள், எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் மருந்துகள், புதிய புரதத் தடை மருந்துகள், நொதித் தடுப்பு மருந்துகள், புற ஊதா கதிர் சிகிச்சை, லேசர் சிகிச்சை எனப் பல்வேறு சிகிச்சை முறைகள் தோல் பாதிப்புக்கும், மூட்டுப் பாதிப்புக்கும் செய்யப்படுகின்றன.

நுண்கிருமி மூட்டு அழற்சி பாதிப்பு (infectious arthritis)

பல்வேறு நுண்கிருமிகள் நேரடியாகவோ ரத்த ஓட்டத்தின் மூலமாகவோ மூட்டுகளை அடைந்து அங்கு அழற்சி பாதிப்பை ஏற்படுத்துவதுதான் இந்த மூட்டுப் பாதிப்பு. சில வேளைகளில் மூட்டுகளை அடையாமல் கூட மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். நைசீரியா கோனோரியே, ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் ஆகிய நுண்கிருமிகள் இந்த வகை அழற்சிக்கு முக்கியமாக அமைகின்றன. பிற பாக்டீரியா வகைகள், வைரஸ் தொற்று போன்றவற்றா லும் இந்தப் பாதிப்பு ஏற்படும். மூட்டு வலி, காய்ச்சல், மூட்டுகளை அசைக்க இயலாமை ஆகிய தொந்தரவுகள் இதனால் ஏற்படும்.

இவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, மூட்டு நீர் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் நோயைக் கண்டறியலாம். பல வாரங்கள் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படும். இன்று உலக மூட்டழற்சி நாள். ‘தாமதிக்காதீர்கள், இன்றே இணையுங்கள்' என்பதுதான் இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு முழக்கம். மூட்டுப் பாதிப்புகள் இருந்தால் அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், மூட்டு வலிக்குப் போட்டுவிடலாம் பூட்டு.

மூட்டு பாதிப்புகளுக்கான ஆலோசனைகள்

உடலில் உண்டாகும் பிணிகள் 4448 என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதில் வாதம், என்பது 80 வகை என்று வரையறுத்துக் கூறப்பட் டுள்ளது. இவற்றின் குணங்களைத் துல்லியமாக விளக்குகிறது. யூகிமுனி வைத்திய காவியம் என்னும் சித்தர் நூல்.

கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x