Published : 11 Oct 2019 12:29 PM
Last Updated : 11 Oct 2019 12:29 PM

இரண்டு பாதுசஷாக்களும் இன்னிசை தான்சேனும் 04:  அவர் ஒரு நவ இசை ராஜ்ஜியம்

டெஸ்லா கணேஷ்

படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டில் படமாக்கப்பட்ட தொடக்க கால வண்ணப்படங்களில் ஒன்று என்ற பெருமை சிவாஜியின் ‘சிவந்த மண்’ படத்துக்கு உண்டு. அந்தப் பெருமையை முந்திக்காட்ட எம்.ஜி.ஆர் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் தொடங்கினார். ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் தனக்காகத் தயாரான திரைக்கதை, தவிர்க்க இயலாத காரணங்களால் ‘சிவந்தமண்’ணாக சிவாஜியிடம் சென்று சேர்ந்துவிட்டது.

அதில் ஏற்பட்ட ஏமாற்றத்தை ‘உலகம் சுற்றும் வாலிப’னால் வென்றுவிடத் தீர்மானித்தார் எம்.ஜி.ஆர். கமர்ஷியல் பிரம்மாண்டங்கள் நிறைந்த படம். அதற்கு உலக இசை வடிவங்களைத் துல்லியமாக உள்வாங்கிப் பிரதிபலிக்கும் வகையிலான இசையை மெல்லிசை மன்னரால் மட்டுமே தர முடியும் என நம்பினார்.

1970-ல் ‘ஜப்பான் எக்ஸ்போ கண்காட்சி’ நடந்தபோது அதன் பின்னணியில் திரைப்படத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த எம்.ஜி.ஆர், மெல்லிசை மன்னருக்கு மிகக் குறைந்த கால அவகாசமே கொடுத்தார். ‘சிவந்த மண்’ணில் ஐரோப்பிய, அரேபிய இசையைச் சிறப்பாகக் கொடுத்த மெல்லிசை மன்னருக்கு ‘உலகம் சுற்றும் வாலிப’னில் ஜப்பான், தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய இசை கலந்த பாடல்களையும் பின்னணி இசையையும் தரவேண்டிய சவால் காத்திருந்தது.

குறைந்தகால அவகாசத்தில் மெல்லிசை மன்னர் போட்ட நூற்றுக்கணக்கான சிறந்த மெட்டுக்களை எம்.ஜி.ஆர். நிராகரித்து இன்றைய டிஜிட்டல் காலத்திலும் உலகெங்கிலும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் வெற்றிப் பாடல்களைத் தேர்ந்தெடுத்தார். எம்.எஸ்.வி. என்ற மகா இசைக் கலைஞரின் எல்லையற்ற திறமைக்கு இந்தச் சான்று ஒன்றேபோதும்.

திரும்பக் கொடுத்த எம்.எஸ்.வி.

‘உலகம் சுற்றும் வாலிப’னுக்காக எம்.ஜி.ஆர். கொடுத்த பிரபலமான பன்னாட்டு இசை ரெக்கார்டுகளை அவரிடமே திருப்பி கொடுத்த எம்.எஸ்.வி., தனதுசொந்த இசை அறிவிலிருந்து அருவியாகப் பொழியும் இசையைத் தந்தார். ஜப்பானிய இசையின் அடையாளமான ‘கோட்டோஹார்ப்’,‘ஷாக்குஹாச்சி ப்ளூட்’, ‘டாய்க்கோ ட்ரம்ஸ்’, ‘ஷாமி சென்பாஞ்சோ’ஆகிய இசைக்கருவிகளையும் உள்ளடக்கி பத்துக்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான பாடல்களோடு புதுமையான தீம் இசைக் கோவைகளையும் அமைத்தார். ஜேசுதாஸும் எஸ்.பி.பியும் பாடல்களில் குழைய எம்.ஜி.ஆர். இன்னும் இளமையானார்.

வெளிநாட்டுக் காட்சிகளுக்கு இணையாக சென்னை ஸ்டுடியோக்களில் கலை இயக்குநர் அங்கமுத்துவின் திறமையால் போடப்பட்ட பிரம்மாண்டமான ‘புத்தர் கோயில்’, ‘ஸ்கேட்டிங் அரங்கம்’ போன்ற அரங்கங்களில் படமாக்கப்பட்டக் காட்சிகளில் படத்தொகுப்பில் எந்த வேறுபாடும் தெரியாத வகையில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசையும் பணியாற்றியது.

1973 திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வெளியிடப்பட்டு எம்.ஜி.ஆரின் கட்சித் தொண்டர்களை உற்சாகத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. ‘உலகம் சுற்றும் வாலிப’னின் மகத்தான கமர்சியல் சாதனைகளில் மெல்லிசை மன்னரின் பங்கு அளவிடற்கரியது. இத்தகைய பணி அழுத்தங்களுக்கு இடையில் நடிகர் திலகத்தின் ‘தங்கப் பதக்கம்’,‘கௌரவம்’ போன்ற திரைக் காவியங்களுக்குப் பணியாற்றினார்.

அதேவேளை காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கும் அடுத்த தலைமுறை கதாநாயகர்களுக்கும் புதுமை இயக்குநர்களுக்கும் தனித்துவமான இசையை வழங்கிக்கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. இத்தகைய நெருக்கடியான பின்னணிகளை நினைக்கும்போது அவரது படைப்புகளைக் கூடுதல் மரியாதையோடு அணுகத் தோன்றுகிறது.

நடிகர் திலகம் கண்ணியமிகு காவல் அதிகாரியாக மிடுக்குடன் நடித்திருந்த படம் ‘தங்கப் பதக்கம்’. அத்திரைப்படத்தில் ஒட்டுமொத்தத் திரைக்கதையின் உணர்வுகளைப் பாடல்களின் இசை வழியே வெளிப்படுத்தினார் எம்.எஸ்.வி. காவல் அதிகாரியின் தத்திச் செல்லும் சிறு குழந்தை தரும் குதூகலத்தை ‘வலஜி’ ராகத்தில் நர்சரி பாடலோடு தந்தார்.

அதில் குழந்தை வளர்ந்து இளைஞன் ஆகி, அவன் தவறான பாதையால் சென்று தாயை நோயாளி ஆக்குகிறான். அக்குழந்தையைப் பெற்று மன அழுத்தத்தால் அவதிப்படும் மனைவியை அரவணைக்கும் காவலரின் கவலையை ‘ஹரிகாம்போதி’ ராகத்தில் ‘சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்’ என்ற பாடலாகத் தந்தார்.

மனைவியின் மரணமும் மடியில் இடியாய் விழுந்த மகன் தரும் துயரமும் இதயத்தை நொறுக்க, ஒருநாளும் கண்ணீர் சிந்தியிராத அக்காவல் அதிகாரி ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ என்று கதறித் தீர்க்கும் வேதனையில் வெளிப்பட்ட எம்.எஸ்.வியின் இசை படம் பார்க்காதவர்களைக்கூடக் கலங்கடித்தது.

முதல் தேர்தல் வெற்றி தந்த ஊக்கத்தில் முதலமைச்சர் நாற்காலியை நோக்கி எம்.ஜி.ஆர். நகரத் தொடங்க, சிவாஜியின் திரைப் பயணத்தோடு இணைந்துகொள்ள அடுத்த தலைமுறை நடிகர்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தயாரானார்கள். இவர்களோடு நாட்டுப்புறத்திலிருந்து பாட்டைச் சுமந்து வந்த அடுத்த பட்டத்து ‘இளையராஜா’வும் சேர்ந்துகொள்ள, எல்லோருக்கும் பதில் சொல்ல அனுபவம் வாய்ந்த எம்.எஸ்.வியின் ஆர்மோனியமும் தயாராகவே இருந்தது.

பொற்காலம் 2

திரையிசையின் இமயமாகக் கருதப்படும் எம்.எஸ்.வி. 950 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். 1960-ல் தொடங்கி 1980-வரை இருபது ஆண்டுகள் எம்.எஸ்.வி - கண்ணதாசன் கூட்டணி தந்த பாடல்களின் காலத்தைத் தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் என வருணிக்கிறார்கள் திரையிசை ஆர்வலர்கள்.

(அடுத்தவாரம் நிறைவடையும்)
தொடர்புக்கு: teslaganesh@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x