Published : 11 Oct 2019 11:41 AM
Last Updated : 11 Oct 2019 11:41 AM

தரமணி 04: அடூரின் கண்கள்!

ஆர்.சி.ஜெயந்தன்

எழுபதுகளின் மலையாள சினிமாவைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது அந்தத் திரைப்படம். யதார்த்தத்தின் பாதையில் அழுத்தமான அடியை எடுத்துவைத்து ஓர் அலையாக மாறுவதற்குக் காரணமாக அமைந்த அந்தப் படத்தின் தொடக்கக் காட்சி ஐந்தரை நிமிடங்கள் நீண்டது. ஆனால் அலுப்புத் தட்டவில்லை. தங்கள் பெற்றோரின் விருப்பங்களுக்கு எதிராக, சுயமாக முடிவெடுத்து திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியான விஷ்வமும் சீதாவும் தங்கள் சொந்த ஊரைவிட்டு ‘வாழ்ந்து காட்டுவோம்’ என்ற வைராக்கியத்துடன் மாநகரம் ஒன்றுக்குப் பேருந்தில் பயணிக்கிறார்கள்.

பின்னணி இசை இல்லை, பேருந்தின் இன்ஜின் எழுப்பும் இரைச்சல், இறங்குகிறவர்களின் நிறுத்தம் வருகையில் கயிற்றை இழுத்து நடத்துநர் அடிக்கும் ‘கிளிங்’ மணியோசை, பேருந்துக்கு வெளியே சாலையில் விரையும் வாகனங்கள் எழுப்பும் ஹாரன் சத்தம் என நிகழ்விடத்தில் இயல்பாகப் பதிவுசெய்யப்பட்ட ஒலிகளுடன் நகரும் காட்சி. பேருந்தின் உள்ளிருந்து ரகசியம் ஏதுமற்ற, பார்வையாளர்களின் கண்களாக அந்த இளஞ்ஜோடியை நோக்கியபடி வருகிறது கேமரா. இடையிடையே சக பயணிகளையும் நோக்கினாலும் பேருந்தின் ஜன்னல் வழியாக விஷ்வம் - சீதா ஆகிய இருவர் மீதும் படரும் இயற்கை ஒளியின் மூலம், அவர்களது முகங்களில் மின்னும் எதிர்காலக் கனவை, நமது கண்களுக்குள் இடம்மாற்றி வைத்து, அக்காதாபாத்திரங்களைப் பின்தொடர வைத்துவிடுகிறது அந்த ஒளிப்பதிவு.

அந்தப் படம், இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் தொடர்ந்து கௌரவங்களைப் பெற்றுத் தந்த, அடூர் கோபால கிருஷ்ணன் எனும் அசலான படைப்பாளியை இயக்குநராக அறிமுகம் செய்த ‘சுயம்வரம்’. 1972-ல் வெளியான கருப்பு வெள்ளை மலையாளப் படம். அதற்கு ஒளிப்பதிவு செய்தவர் மங்கட ரவி வர்மா. அன்று அரசின் பிலிம் டிவிஷனின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை, தரமணி திரைப்படக் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் ஒளிப்பதிவு பயின்ற மாணவர். கடந்த 2010-ல் அவர் மறைந்துவிட்டாலும் இன்றைக்கும் மலையாளத் திரையுலகினரால் ‘ரவியேட்டன்’ என்று நேசம் நிறையக் குறிப்பிடப்படும் தற்கால ஒளிப்பதிவாளர்கள் பலரின் மானசீக ஆசான்.

ரவியேட்டனின் ஒளியும் நிழலும்

கேமராவில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் என்பதை மறக்கடிப்பதுதான் மங்கட ரவி வர்மா எனும் மேதை பின்பற்றிய ஒளிப்பதிவு பாணி. அனைத்தும் நம் கண்முன்னால் நிகழ்பவை, திரையில் அல்ல என்ற உணர்வை உருவாக்கிவிடுவதில் வித்தகர் அவர். அவரது பரிசோதனை முயற்சிகளும், காட்சியின் சட்டகத்தில், கதாபாத்திரங்களின் உடல் மீதும், அவற்றின் முன்னாலும் பின்னாலும் (foreground and background) தலைக்கு மேலும் விழும் அல்லது படரும் ஒளி, நிழல் ஆகியவற்றின் மூலம் காட்சி நிகழும் சூழலையும் கதாபாத்திரங்களின் மனவோட்டத்தையும் எளிதில் கடத்தில் விடுபவர்.

திரையில் உலவும் உருவங்கள் மீது படரவிடப்பட்ட ஒளி – நிழல் வழியாக அவர் உருவாக்கிய உணர்வுகள், யதார்த்தத்தின் முழுமையைப் பார்வையாளர்கள் உணரும்படிச் செய்தன. அதேநேரம் ஒளி ஓவியம் என்று கூறிவிடாதவாறு தனது காட்சியின் சட்டகம் இலக்கண அழகியலுக்குள் தேங்கி நின்றுவிடக் கூடாது என்பதிலும் அவர் கவனம் செலுத்தினார்.

“இயற்கையாகக் கிடைக்கும் ஒளியோடு நாங்கள் விளையாடினோம். குறைந்த ஒளியில் என்றால் எந்தவொரு ஒளிப்பதிவாளரும் படப்பிடிப்பை நிறுத்துவிடுவார். ஆனால் குறைந்த ஒளியையே எனக்கான களமாக ஆக்கிக்கொண்டேன். கருப்பு - வெள்ளையில் காட்சியின் சலனங்களை உருவாக்க இயற்கையான குறைந்த ஒளியே எனக்குப் போதுமானதாக இருந்தது. தொடக்கத்தில் நான் ஆவணப்படங்களில் பரிட்சித்துப்பார்த்த அனைத்தையும் திரைப்படங்களுக்கான ஒளிப்பதிவில் எடுத்தாண்டேன். அதற்கு என்னுடன் பணியாற்றிய அரவிந்தன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பார்வையும் ஒத்த மனவோட்டமும் காரணம்” என்று அல்சைமர் நோயினால் பீடிக்கப்பட்ட பெரு முதுமைக்குமுன் பேட்டியளித்திருக்கிறார் மங்கட ரவி வர்மா.

சென்னை வாழ்வு தந்த தாக்கம்

மங்கட ரவி வர்மா ஒளிப்பதிவில் செய்த சாதனைகளுக்கு சென்னையுடனான அவரது தொடர்பு முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கிறது. கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மங்கட என்ற கிராமத்தில் 1926-ல் பிறந்த ரவி வர்மா ஒரு பட்டதாரி. சென்னை அரசுத் திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்த பின் பல ஆவணப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியவர் மலையாள இலக்கிய ஆளுமையான எம்.கோவிந்தன். தாம் வகித்த அரசுப்பணியின் பொருட்டு, சென்னையில் சுமார் 15 ஆண்டுகள் வசித்த மலையாளக் கவிஞரும், வாழ்க்கை மீதான விசாரணையை சுயபார்வையுடன் அணுகிய மாபெரும் சிந்தனையாளருமான எம்.கோவிந்தனின் சென்னை இல்லம் ஹாரீஸ் சாலையில் இருந்தது.

எழுத்தாளர்கள், கலைஞர்கள் கூடி, கவிதையையும் இலக்கியத்தையும் இயல்களையும் விவாதிக்கும் களமாக கோவிந்தனின் இல்லம் இருந்தது. தரமான சினிமா குறித்த தேடல் கொண்டவர்களும் அங்கே வந்தார்கள்.
தனது 30-வது வயதில் எம்.கோவிந்தனைச் சந்தித்த மங்கட ரவி வர்மா, அவரது சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். கோவிந்தன் சென்னையில் இருந்துகொண்டு ‘சமீக்‌ஷா’ என்ற மலையாளச் சிற்றிதழை நடந்தி வந்தார். கேரளத்தில் இலக்கிய, அரசியல், திரைப்பட விமர்சகர்கள், வாசகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டிருந்தது அந்தச் சிற்றிதழ். அதில் கோவிந்தனின் அறிவுரைப்படி சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒரு ஒளிப்பதிவு மாணவனாகத் தான் பார்த்த அயல்நாட்டுத் திரைப்படங்களைப் பற்றியும் அவற்றின் ஒளிப்பதிவு குறித்தும் மங்கட ரவி கட்டுரை எழுதினார்.

அக்கட்டுரை இடம்பெற்றிருந்த இதழை திருச்சூரில் வாங்கி வாசித்தார் புனே திரைப்படப் பள்ளி மாணவரான அடூர் கோபால கிருஷ்ணன். வாசித்தபின் ‘கட்டுரையைத் தொடரும்படிக் கேட்டு’ மங்கட ரவி வர்மாவுக்கு கடிதமும் எழுதினார். தான் இயக்கும் முதல் படத்துக்கு ரவி வர்மாதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று திடமாக எண்ணிக்கொண்ட அடூர், 1970-ல் தனது ‘சுயம்வரம்’ திரைக்கதையை எழுதி முடித்ததும் அதை ரவி வர்மாவுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படத்தில் தொடங்கிய அடூர் - ரவி வர்மாவின் பயணம் ஒன்பது படங்களில் தொடர்ந்தது.
“ ‘சுயம்வரம்’, ‘கொடியேற்றம்’ படங்களைப் படமாக்கியபோது 25 ஆண்டுகள் பழமையான கேமராவைத்தான் எங்களால் வாடகைக்கு எடுக்க முடிந்தது. நல்ல லென்ஸ் கிடையாது. அவ்வளவு ஏன்..

ஒரு நல்ல கேமரா ‘ட்ரைபாட்’ கூடக் கிடையாது. மிகக் குறைந்த வசதிகளோடுதான் முதல் மூன்று படங்களை ஒளிப்பதிவு செய்தோம். ‘எலிப்பத்தாயம்’ படத்தின் ஒளிப்பதிவின்போது ஒரு சீக்குவென்ஸில் இருந்த காட்சிகளை வரிசையாகப் படமாக்கவேண்டும் என்றேன். அவரோ, ‘அவற்றை ஏன் நாம் ஒரே ஷாட்டாக எடுத்துவிடக் கூடாது? ’ என்றார். எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் அவர் சொன்னபடியே அதை எடுத்துவிட்டார். அது, ஒளிப்பதிவு வரலாற்றில் ஒரு மைல்கல். நாங்கள் இணைந்து பணிபுரிந்தவற்றில் ‘நிழல் கூத்து’ படத்தில் ரவியேட்டனின் ஒளிப்பதிவை தனிப்பட்ட முறையில் நான் வியந்திருக்கிறேன்” என்று வியக்கிறார் உலகை வியக்க வைத்த அடூர்.

அவரின் கண்களாக இருந்த மங்கட ரவி வர்மா, அடூரைவிட 15 வயது மூத்தவர். மங்கட ரவியின் வாசிப்பும் அனுபவங்களும் அரவிந்தன், அடூர் உட்பட அவருடன் பணிபுரிந்த வெகுசில இயக்குநர்கள் தங்கள் படங்களைப் படைப்புகளாகக் கொடுக்கப் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. தன்னை உருவாக்கிய தமிழகத்துக்கு நன்றி கூறும்விதமாக சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ‘திக்கற்ற பார்வதி’ தமிழ்ப் படத்துக்கு மங்கட ரவி வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தனது பார்வையையும் சிந்தனைகளையும் விரிவாக்கிய கவிஞர் எம்.கோவிந்தனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது கவிதை ஒன்றை அடிப்படையாக வைத்து ‘நோக்குகுத்தி’ (Nokkukuthi) என்ற திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி, தேசியவிருது பெற்றார். மங்கட ரவி வர்மா, திரையுலகில் இயங்கிய நான்கு பத்தாண்டுகள் பணிபுரிந்தது பதினைந்தே படங்களுக்கு மட்டும்தான். தரமான திரையாக்கத்துக்காக அன்றி அவரது விரல்கள் கேமராவின் விசையை முடுக்கியதில்லை.

தனது திரையுலக அனுபங்கள் சார்ந்து ‘சித்திரம் சலச் சித்திரம்’ என்ற ஒளிப்பதிவுத் தொழில்நுட்ப நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் மங்கட ரவி வர்மா. கேரள மாநில அரசின் விருது பெற்ற இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியவற்றுள் ஒன்று.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x