Published : 07 Oct 2019 11:45 AM
Last Updated : 07 Oct 2019 11:45 AM

டட்சன் கோ சிவிடி பக்கா பேமிலி கார்

ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் டட்சன் என்ற பிராண்டில் கோ, கோ ப்ளஸ் என்ற இரண்டு வகை பட்ஜெட் கார்களை 2014-லிருந்து சந்தைக்குக் கொண்டுவருகிறது. கோ ஒரு ஹேட்ச்பேக் மாடல். கோ ப்ளஸ் 7 பேர் அமரக்கூடிய எம்பிவி மாடல். இவை இரண்டும் சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்த நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் அவற்றின் மேம்படுத்தப்பட்ட மாடல் பிரீமியம் தோற்றத்துடன் வெளியாயின. மேற்சொன்ன அம்சங்களில் கோ, கோ ப்ளஸ் இரண்டும் சிறப்பான இடத்தைப் பிடித்திருந்த நிலையில் தற்போது இவை சிவிடி கியர்
பாக்ஸுடன் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கின்றன.

இதில் டட்சன் கோ சிவிடி கார் எப்படியான ஓட்டும் அனுபவத்தைத் தருகிறது என்பதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். தோற்றத்தில் முந்தைய மாடலிலிருந்து பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
உட்புறத்திலும் முந்தைய மாடலிலிருந்து பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் இல்லையென்றாலும், 7.0 அங்குல தொடுதிரை என்டர்டெயின்மென்ட் யூனிட் இதில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புளூடூத் கனெக்டிவிட்டி, ரேடியோ, ஆக்ஸ், யுஎஸ்பி போன்ற அம்சங்கள் வழக்கம்போல் தரப்பட்டுள்ளன.

ஆடியோ சிஸ்டம் சிறப்பாக உள்ளது. ஆனாலும், தொடுதிரையில் வீடியோ பார்க்கும் வசதி, தொடுதிரையிலும் ஸ்டியரிங்கிலும் ஆடியோ கன்ட்ரோலிங் வசதி, வாய்ஸ் கமாண்ட் உள்ளிட்டவை இல்லை. இவையெல்லாம் சேர்த்திருந்தால் இன்னும் அசத்தலாக இருந்திருக்கும்.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வகையில் இதற்கு போட்டியாக டியாகோ, வேகன்ஆர், செலிரியோ மற்றும் சான்ட்ரோ ஆகியவை இருந்தாலும் சிவிடி கியர்பாக்ஸுடன் இதன் செயல்திறன் தனித்து விளங்குகிறது. சென்னையின் எல்லா டிராஃபிக் சூழலிலும் சிறப்பான அனுபவத்தைத் தருகிறது. அந்த அளவுக்கு கியர் ஷிஃப்ட்டிங் ஸ்மூத்தாக இருக்கிறது.

அதேபோல் அதிகபட்ச வேகத்தில் சென்றாலும் எந்தவித அதிர்வும் இல்லை. நெடுஞ்சாலையில் தனது முழு செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் சில நேரங்களில் ஜெர்க் ஆவது, பிக் ஆகாமல் சொதப்புவது போன்ற எந்தப் பிரச்சினையும் இதன் சிவிடி கியர்பாக்ஸில் இல்லை. ஆனாலும், வாகனத்தின் நீடித்த செயல்திறனுக்காக ஆக்சிலரேட்டரை அதற்கேற்ற அளவில் அழுத்துவது நல்லது. கார் நிறுத்தப்பட்ட நிலையில் இருக்கும்போது திடீரென்று 100 கிமீ வேகத்துக்கு ஆக்சிலரேட்டரை அழுத்துவது நல்லதல்ல. ஏனெனில், இதன் கியர் டிரான்ஸ்மிஷன் அதற்குரிய வேகத்தில் செயலாற்றும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

சில சிவிடி கியர்பாக்ஸில் மேனுவல் கியர் மாற்ற வசதியும் தரப்பட்டிருக்கும். ஆனால் இதில் அதற்கான தேவை ஏற்படவில்லை. ஸ்போர்ட் டிரைவுக்குத் தனியாக பட்டன் வசதி தரப்பட்டுள்ளது. ஸ்போர்ட் டிரைவ் ஓட்ட விரும்புபவர்கள் அந்த பட்டனை அழுத்தினால் போதும். வாகனத்தின் செயல்திறன் அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும். இடவசதி தாராளமாக இருக்கிறது.

சீட் பெல்ட் அலாரம், 80 கிலோமீட்டருக்கு மேல் வேகம் தாண்டினால் எச்சரிக்கை ஆகியவை உள்ளன. பாதுகாப்பு அம்சங்களாக ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மைலேஜ் என்று பார்க்கும்போது லிட்டருக்கு 20 கிமீ வரை மைலேஜ் தரக்கூடியதாக இருக்கிறது. ஸ்டியரிங் மிகவும் எளிமையாக, நெருக்கடியான சாலைகளிலும் எளிதாக இயக்கும் வகையில் உள்ளது. டைனமிக் கன்ட்ரோல், டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டிஆர்எல் விளக்குகள் ஆகியவையும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

3788 மீ நீளம், 1636 மீ அகலம் உயரம் 1507 மீ மற்றும் வீல் பேஸ் 2450 மீ என்ற அளவில் உள்ளது. இதில் ஹெச்ஆர்12 டிஇ இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 77 ஹெச்பி பவரையும், 104 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆறு விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ள இதன் போட்டி மாடல்களைக் காட்டிலும் சிறப்பான ஒன்றாக டட்சன் கோ இருக்கிறது. சந்தையில் விற்பனைக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x