Last Updated : 03 Jul, 2015 01:37 PM

 

Published : 03 Jul 2015 01:37 PM
Last Updated : 03 Jul 2015 01:37 PM

இன்னாமா வாய்ஸ் கொடுக்குறாங்க!

வந்தான் வென்றான் படத்துல சந்தானம் கேட்பாரு, “தொண்டை கட்டிப் பேசுனா ரமணா வாய்ஸ் வருன்னா, தொண்டை கட்டாமா பேசுனா தமன்னா வய்ஸ் வருமா. இன்னாபா சொல்ற?” அப்டினு. ஆனா மெய்யாலுமே மிமிக்கிரி அவ்ளோ ஈஸி இல்லம்மா. சங்கீதம்னு கத்துக்கணும்னா ‘சாதானா சர்கம்’ பண்ணனும்னு சொல்வாங்கல்ல, இன்னாபா ‘சாதகமா’? சர்கம் இல்லையா? ஆமாம்பா ‘சாதனா சர்கம்’னா பாட்டுப்பாடுறவங்களாமே.

சரி அதவிடு சங்கீதம்னா, காலை 3 மணிக்கே எந்திரிச்சு தண்ணிக் குள்ள இருந்து சாதகம் பண்ண னும்ல. அது மாதிரி மிமிக்ரிக்கும் பலே வேலைலாம் பண்ணனும்னு. அத கத்துக்கத் தனியா காலேஜ் எல்லாம் இருக்குப்பா.

நாமல்லா இஸ்கூலுக்கே போகமா டபாய்க்கிறவுங்க காலேஜ் போவாமா? இஸ்கூல், காலேஜ் எல்லாம் போகாம ஸ்ட்ரைட்டா மிமிக்கிரில இறங்கிச் சும்மா அதகளப்படுத்துறாங்க நம்ம பசங்க. ரோபோ சங்கர், வடிவேல் பாலாஜி, சிரிச்சா போச்சு அமுதவண்ணன், சென்னை கிரி, அப்புறம் இப்ப ஹீரோவோ மாறிட்ட நம்ம சிவகார்த்திகேயன் எல்லாரும் இப்ப நம்ம ஊரு மிமிக்கிரி கிங்ஸ்.

இவுங்க கைல விஜய்காந்த், சத்யராஜ், ராமராஜன் எல்லாரும் சிக்கிச் சின்னாபின்னாம ஆகுறாங்க. இது இன்னாபா எம்ஜீஆரு, சிவாஜில ஆரம்பிச்சு ரஜினி, கமலுன்னு விஜய் வரைக்கும் இதுல சிக்காத ஆக்டருங்களே இல்லப்பா. இந்த அமுதவண்ணன் அர்ஜுனைக் கூட விட்டுவைக்காம முக்காலா முக்காப்புலாவுக்கு ஆட்டம் போடவைக்கிறாரு.

ரோபோ சங்கரு ஆல் வாய்ஸ்லயும் கலக்குறாரு. ஆனால் அவர் பிகர் சைஸ் வச்சுப் பார்த்த விஜய்காந்த் வாய்ஸ்தான் அவருக்கு பெஸ்ட். ஆனால் சும்மா இன்னாபா எல்லாரும் அண்ணாத்தயே கலாய்க்கிறீங்க. அது செர்லபா. ஃபேஸ்புக்னாலும் சரி வாட்ஸ்-ஆப்புனாலும் சரி நம்ம தலைவரைத்தான் போட்டுத்தாக்குறீங்க. விஜய்காந்த் வாய்ஸை பேசுறது ஈஸிபோல இருக்கு. நிறைய பேரு அவர் வாய்ஸ் மிமிக்கிரி பண்றாங்க. “அதுனால புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்க. அதுதான் நாட்டுக்கும் உங்களுக்கும் நல்லதாக்கும்” தலைவர் வாய்ஸ்லயே சொல்லிட்டேன் அவ்ளோதான்.

சரி மிமிக்ரினு சும்மா லேசுல நினைக்காதீங்கப்பா. மிமிக்ரி வழியா பிரபலம் ஆனவுங்க, ஹீரோ ஆனவுங்க நிறையபேர் இருக்காங்க. நம்ம தாமு, கலாபவன் மணி, சிவகார்த்திகேயன், ஜெயராம் எல்லாம் மிமிக்கிரி வழியா சினிமாவுக்கு வந்தவுங்கதான். மிமிக்கிரி ஆக்டிங்குக்கு ஈக்வலான ஒரு கலை. செரி இத எப்டி கத்துக்கிறது?

ரோபோ சங்கர் அதுக்கு ஒரு கோர்ஸ் சொல்லித்தாரரு. பழைய ரேடியாவை டியூன் பண்ணிப் பார்க்கிறதுபோல. ஒவ்வொரு ஆக்டருக்கும் வேற வேற வாய்ஸ் மாத்திப் பார்க்கலாம் அப்படிங்கிறாரு. இப்ப கமல் வாய்ஸ் வேணும்னா இன்னா பண்ணனும்?

தொண்டைக் கட்டிக்கிச்சுன்னா சுடு தண்ணீய தொண்டைல ஊத்தி, கொப்பளிச்சா எப்படி இருக்கும்? அங்கதான் கமல் வாய்ஸ் இருக்கு. இன்னாபா தொண்டையவே பார்க்கிறீங்க. தொண்டைலய கமல் இருக்காரு. கொஞ்சம் வாய்ஸ் கொடுப்பா. லைட்டா சின்ன மோட்டர் ஸ்டார்ட் பண்ற மாதிரி வாய்ஸ் கொடுங்க. ஆ, அதேதான் கமல் வாய்ஸ். அப்டியே பேச வேண்டியதுதான்.

அப்பால கார்த்திக் வாய்ஸ் சொல்லித்தாரார். a,e,i,o,u அப்படிங்கிற ஐஞ்சு இங்கிலீஸ் எழுத்துலதான் கார்த்திக் டயலாக்கே அப்படிங்கிறாரு. வெத்தல போட்டுக்கிட்டு அத மேவாய்ல வச்சிக்கிட்டு, இப்ப துப்பப் போற மாதிரி, ‘ஏய்’ ‘ஓ’ ‘யூ’ அப்டினு ஆரம்பிச்சு டயலக்க எடுத்துவுட்டீங்கன்னா கார்த்திக் வாய்ஸ் வந்துருங்கிறாரு.

அப்புறமா பிரகாஷ்ராஜ் வாய்ஸுக்கு வாந்திய என்ஜாய் பண்ணி எடுக்கிற மாதிரியே பேசுனா, அவ்ளோதானாம். வாய்ல தண்ணிய வச்சிக்கிட்டு கொப்பளிச்சிக்கிட்டே பேசுனா ராஜ்கிரண் வாய்ஸாம். விடிவி கணேஷ் வாய்ஸ் வேணும்னா தொண்டைகட்டிக்கிட்டுப் பேசணுமாம். சரி தொண்டை கட்டமா பேசுனா யார் வாய்ஸ்னு கேக்றீயா? அது உன் வாய்ஸ்தாம்பா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x