Published : 06 Oct 2019 02:53 PM
Last Updated : 06 Oct 2019 02:53 PM

வாசிப்பை நேசிப்போம்: துணிவு தந்த புத்தகங்கள்

எழுபதுகளின் இறுதியில் 25 வயதிலேயே கணவனை இழந்த என் அம்மா ஏழு வயதுக் குழந்தையான என்னைக் கையில் பிடித்துக்கொண்டும், 26 நாட்களே ஆன என் தம்பியைத் தோளில் சுமந்துகொண்டும் நகரத்திலிருந்து என் தந்தையின் பூர்விகக் கிராமத்துக்குச் சென்றார். அன்று வீட்டை விட்டு வாசலருகே வரக்கூட அனுமதியில்லாத என் அம்மாவுக்கு ஆறுதலும் பொழுதுபோக்குமாக அமைந்தவை சிறிய டிரான்சிஸ்டரும் வீட்டுக்கு எதிரில் இருந்த ஊரக அரசு நூலகமுமே.

எழுத்துக் கூட்டி வாசிக்கும் வயதிலிருந்த நான் என் அம்மாவுக்காக நூலகம் செல்ல ஆரம்பித்தேன். லக்ஷ்மி, சிவசங்கரி, சுஜாதா, சாண்டில்யன், இந்துமதி என அந்த வயதில் எனக்கு அறிமுகமில்லாத பெயர்களை நூலகரிடம் சொல்லி என் அம்மாவுக்காகப் புத்தகங்கள் வாங்குவேன். அப்போது நூலகர் எனக்குப் படக்கதைகளை அறிமுகப்படுத்தினார். அந்தக் காலத்தில் சிறுவர்களுக்கான புத்தகங்களை பெரிய பெரிய படங்களுடனும் பெரிய எழுத்துக்களுடனும் இருந்தன. மெல்ல மெல்ல எழுத்து என்னை வசீகரித்தது.

நான் படக் கதையிலிருந்து அம்புலி மாமா, பாலமித்ரா, ரத்னபாலா, பூந்தளிர், கோகுலம் என முன்னேறியிருந்தேன். அந்தக் கிராமத்தில் நூலகம் செல்லும், நூலகத்தில் ஆண்களுக்குச் சமமாக அமர்ந்து புத்தகம் வாசிக்கும் முதல் பெண் பிள்ளை என அறியப்பட்டேன்; விமர்சிக்கப்பட்டேன். என் தாத்தா 103 வயதில் முதுமையின் காரணமாக இறக்கும்வரை வார இதழ்களை அவர் படித்துவிட்டுத் தனக்குப் பிடித்தமான பேத்தியான என்னிடம்தான் கொடுப்பார். பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் அம்மாவின் தயாரிப்பில் நான் முதல் பரிசை வென்றுவர, எழுத்து மீதான மோகம் அதிகரித்தது. வாசிப்பை யாரும் எனக்குக் கட்டாயப்படுத்தவில்லை. வாசிப்புப் பிரியர்களான என்னுடைய தாத்தா, அம்மா என்று மரபாலும் சூழ்நிலையாலும் வாசிப்பு என் வசமானது.

பதின்ம வயதுகளில் தமிழ்வாணன், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், ஜி.அசோகனின் பாக்கெட் நாவல்கள் என என் உலகம் மர்ம நாவல்களால் சூழப்பட்டது. அதன்பின் ரமணிச்சந்திரன் கதைகள் மயக்கமூட்டின. சுபாவின் கதைகள் பரவசமூட்டின. பாலகுமாரன் அறிமுகமானபோது ‘ஹா’வென மனசு பரபரத்தது. சுஜாதாவோ படிக்கப் படிக்க வியப்பூட்டினார். மணியனின் பயணக் கட்டுரைகள் உலகைச் சுற்றும் ஆவலை ஏற்படுத்தின.

அதன்பின் தி.ஜானகிராமன், கல்கி, ஜெயகாந்தன் தொடங்கி முடிவில்லாமல் விரிந்து இன்று வாசிப்பே சுவாசமாகிவிட்டது. ரயில் பயணமோ விமானப் பயணமோ அரசு அலுவலகமோ மருத்துவமனையோ இடம் எதுவாக இருந்தாலும் பையில் தவறாது இடம்பெறுகிறது ஏதேனும் ஒரு புத்தகம். இதை எழுதும் இந்தப் பொழுதில் ‘ஈழம் 87 - வெட்ட வெட்டத் துளிர்க்கிறது மரம்’ என்ற புகழேந்தி தங்கராஜின் நூலுக்காக ஆன்லைனில் பணம் கட்டிவிட்டுக் காத்திருக்கிறேன். தவிர்க்க இயலாத நேரங்களில் அமேசான் கிண்டிலில் வாசிக்கும்போது காகிதத்தைப் புரட்டும் சுகம் அதில் கிடைப்பதில்லை.

புத்தக உலகம் இன்று என்னைப் பல்வேறு நாடுகளுக்குத் துணிச்சலுடன் பயணப்படவும் சர்வதேசக் கருத்தரங்குகளில் புள்ளி விவரங்களை ஆணித்தரமாக முன்வைக்கவும் ஐ.நா. சபையில் தன்னம்பிக்கையோடு பேசவும் வைத்திருக்கிறது. ஆம், குக்கிராமத்திலிருந்த என்னை ஐ.நா. என்ற கோபுரம் நோக்கி பயணப்பட அடிப்படைத் துணிவையும் தன்னம்பிக்கையையும் தந்தது வாசிப்பேதான். ஆசிரியையான நான் இன்று என் பள்ளிக் குழந்தைகளுக்கு வாசிப்பைக் கடத்திக்கொண்டிருக்கிறேன்.

- ர.ரமாதேவி ரத்தினசாமி, சாத்தூர்.

தோழிகளோடு தொடரும் விவாதம்

திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சிற்றூரில் தமிழாசிரியரின் மூத்த மகளாகப் பிறந்தேன். என் அப்பாவைப் போலவே நானும் புத்தகப்புழு. மூன்றாம் வகுப்பிலேயே வாசிப்புப் படலம் தொடங்கிவிட்டது. வீட்டுக்கு வரும் வார, மாத இதழ்களைப் படித்துவிடுவேன். சில வார இதழ்களைச் சிறுவர்கள் படிக்கக் கூடாது எனப் பெற்றோர் தடைபோட்டிருந்தனர். ஆனால், அவர்களுக்குத் தெரியாமல் அவற்றைப் படித்தபோது உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஆறாம் வகுப்புப் படித்தபோது மணியனின் ‘காதலித்தால் போதுமா’ தொடர்கதையைப் பாடப் புத்தகத்தினுள் வைத்து வாசித்த அனுபவம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது.‘எத்தனை கோடி இன்பம், ‘குடை ராட்டினம்’, ‘சுழிக்காற்று’, ‘காணிக்கை’ போன்ற கதைகளின் பிரதிகள் தற்போதும் எங்கும் இருக்காது என நினைக்கிறேன். இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’, ‘கீதமடி நீ எனக்கு’ ஆகிய நாவல்களைத் தோழிகளுடனும் அவர்களுடைய அம்மாக்களுடனும் பேசி மகிழ்ந்த நாட்கள் ஏராளம். சிவசங்கரியின் ‘47 நாட்கள்’, ‘பாலங்கள்’, ‘நதியின் வேகத்தோடு’,
‘நண்டு’ போன்ற கதைகள் ஏற்படுத்திய மனத்தாக்கத்தை மறக்க முடியாது.

எழுத்தாளர் மணியனின் அத்தனை தொடர்கதைகளையும் பயணக் கட்டுரைகளையும் பள்ளிப் பருவத்திலேயே வாசித்து மகிழ்ந்தேன். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் எத்தனை முறை பிரசுரமானதோ அத்தனை முறையும் அந்தப் பகுதியை படித்து, பைண்ட் செய்துவைத்திருக்கிறோம். எந்த இதழ்களில் தொடர்கள் இடம்பெற்றாலும் அவற்றை பைண்ட் செய்துவிடுவது எங்கள் வீட்டின் தனிச்சிறப்பு. கல்கி இதழில் வெளியான கல்கி ராஜேந்திரனின் ‘ஸைக்கோ ஸாரநாதன்’ கதையில் வரும் நாயகியோடு என்னை ஒப்பிட்டுப் பள்ளித் தோழிகள் என்னை கேலிசெய்வார்கள்.

மதிய உணவைச் சாப்பிட வீட்டுக்கு வரும்போதெல்லாம் ராமாயணத்தில் சில பக்கங்களையாவது என் பாட்டிக்குப் படித்துக் காண்பித்துவிட்டுப் பள்ளிக்கு ஓடுவேன். கதைகள், கட்டுரைகள் என வாசித்ததாலோ என்னவோ கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தைத் தேர்ந்தெடுத்தேன். தமிழ்த் துறையில் முதுகலைப் படிப்பில் கல்கியின் ‘அலை ஓசை’, அகிலனின் ‘வேங்கையின் மைந்தன்’, ராஜம் கிருஷ்ணனின் ‘குறிஞ்சித் தேன்’, தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, நா. பார்த்தசாரதியின் ‘குறிஞ்சிமலர்’, புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்று இருந்ததைப் பார்த்து அதற்காகவே முதுகலை வரலாற்றுக்குப் பதிலாகத் தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.

மாடியில் சேமித்துப் பத்திரப்படுத்திய புத்தகங்களை ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் மீண்டும் வாசிப்பேன் சாண்டில்யன், ரமணிச்சந்திரன், காஞ்சனா ஜெயதிலகர், தேவிபாலா, சுபா, வைரமுத்து என படித்துக் களித்த ஆசிரியர்கள் ஏராளம். திருமணத்துக்குப் பிறகு வீட்டுக்கு அருகே உள்ள பொது, வாடகை நூலகங்களில் உறுப்பினராகி வார, மாத, நாளிதழ்களில் இடம்பெறும் கட்டுரைகள், தொடர்கள், கதைகளைப் படித்து ஆனந்தம் அடைகிறேன். இன்றும் மளிகைப் பொருட்களைச் சுற்றிவரும் காகிதத்தைக்கூட வாசித்து மகிழ்கிறேன். மனபாரத்தை வாசிப்பின் மூலம் எளிதாக்கிக்கொள்கிறேன்.

- மீனா ரெங்கநாதன், சென்னை.

வாசிப்பை நேசிப்போம்

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக்கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்கள் ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x