Published : 06 Oct 2019 02:53 PM
Last Updated : 06 Oct 2019 02:53 PM

இனி எல்லாம் நலமே 26: பிரசவம் என்னும் மறுபிறவி

அமுதா ஹரி

கர்ப்பம் உறுதியானதுமே எப்போது பிரசவமாகும் என்ற உத்தேசமான தேதியை மருத்துவர் சொல்லி விடுவார். மருத்துவர் சொன்ன தேதியிலி ருந்து ஒரு வாரம், பத்து நாட்கள் முன்னே பின்னே ஆகலாம்.
பெண்களில் பலர் பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்கோ வேறு இடத்துக்கோ போக நேரிடலாம். எந்த இடத்தில் பிரசவம் நடக்கப் போகிறதோ அந்த ஊருக்குப் பிரசவத்துக்கு ஒரு மாதம் முன்பாகப் போய்விடுவது நல்லது. மூன்று காரணங்களுக்காக இதைச் செய்ய வேண்டியிருக்கிறது.

1. பிரசவத்துக்குக் குறிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக, இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பாகவே எப்போது வேண்டுமானாலும் வலி வரலாம்.
2. எந்த மருத்துவமனையில் பிரசவம் பார்க்க இருக்கிறீர்களோ, அந்த மருத்துவமனைக்குப் பிரசவத்துக்கு முன் இரண்டு முறையாவது பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்.
3. நீங்கள் அதுவரை பார்த்து வந்திருந்த மருத்துவர் வேறு. இப்போது பார்க்கப்போகும் மருத்துவர்தான் உங்களுக்குப் பிரசவம் பார்க்கப்போகிறார். அதனால், உங்கள் உடல்நிலையைப் பற்றி அவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கும் அவரது அணுகுமுறை பற்றி நல்ல புரிதல் வேண்டும். ஏனென்றால், புது இடம், புது மருத்துவர் குறித்து மன அழுத்தம் இருக்கலாம்.
முன்பே சொன்ன மாதிரி வலி வருவது, பனிக்குடம் உடைந்து நீர் வருவது, குழந்தை அசைவில்லாமல் இருப்பது இப்படி எந்த அறிகுறி தோன்றினாலும் மருத்துவரிடம் செல்ல வேண்டும். கர்ப்பிணிகள் கடைசி இரண்டு மாதங்களிலாவது இந்த விஷயங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

எது பிரசவ வலி?

வலி அதிகமாக இருக்கும். பிறகு வலியே இல்லாத நிலை வரும். சிறிது நேரம் கழித்து மீண்டும் வலிக்கும். வேறு விதமான வலிகள் என்றால் தொடர்ந்து வலித்துக்கொண்டே இருக்கும். ஆனால், பிரசவ வலி விட்டுவிட்டு வரும். கருப்பை சுருங்கி விரிவதால் இப்படி ஏற்படும். ஆரம்பத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வரக்கூடிய வலி, நேரம் ஆக ஆக குறைவான இடைவெளிகளில் வர ஆரம்பிக்கும். நேரம் ஆக ஆக கருப்பை சுருங்கி விரிவதன் வலிமை கூடும். தகுந்த இடைவெளிகளில் வலி வருவதை உணர்ந்த உடனேயே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

சிலர் சிறு வலியைக்கூடப் பொறுக்க மாட்டாமல் சொல்லிவிடுவார்கள். பனிக்குடம் உடைந்தாலும் பயந்து சொல்லிவிடுவார்கள். ஆனால், சிலரோ குழந்தை அசையாமல் இருப்பதைப் பற்றிக்கூடச் சொல்லாமல் விடக்கூடும். ஒரு நாள், இரண்டு நாள்தானே அசையவில்லை; என்ன ஆகிவிடும் என்பதை அவர்கள் உணராமல் இருக்கலாம். வீட்டில் உள்ளவர்களை வீணாகத் தொல்லைப்படுத்த வேண்டாம் என்று நினைத்தும் சொல்லாமல் விடலாம். எனவே, கர்ப்பிணிகள் மேற்கூறிய அறிகுறிகளைத் தெரிந்துகொண்டு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

முக்கியமான மூன்று கட்டங்கள்

பிரசவத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். பிரசவ வலி வந்தவுடன் கருப்பை சுருங்கி விரிந்து, கருப்பையின் வாய் திறக்கும். வலி வந்ததிலிருந்து கருப்பை வாய் 10 செ.மீ. வரை திறப்பது ஒரு கட்டம்.
பனிக்குடம் உடைந்து, குழந்தையின் தலை சரியாகத் திரும்பி, சரியான கோணத்தில் இடுப்பெலும்பு வழியாக வெளியே வருவது இரண்டாம் கட்டம். குழந்தையின் தலை எந்தக் கோணத்தில் குறைவான விட்டத்தில் இருக்கிறதோ, அப்படி வெளியே வந்தால்தான் பிரசவம் சுலபமாக இருக்கும்.

குழந்தைக்காக உருவான நஞ்சுக்கொடி வெளியே வருவது மூன்றாம் கட்டம். இந்த மூன்று கட்ட நிகழ்வுகளின்போது எந்த நேரத்திலும் பிரச்சினை ஏற்படலாம். முதல் கட்டத்தில் வலி வந்து, கருப்பை வாய் திறக்காமல் போகலாம். 14 மணி நேர வலிக்குப் பிறகுகூடச் சிலருக்கு இரண்டு செ.மீ. அளவு மட்டுமே கருப்பையின் வாய் திறக்கலாம். சிலருக்கு வலி சரிவர வராமல் இருக்கலாம். இவை இரண்டும் முதல் கட்டத்தில் நடக்கலாம்.

அதேபோல் எல்லாவற்றுக்கும் முன்னதாக பிரசவ வலியே இல்லாதபோது பனிக்குடம் உடைந்துபோகலாம். பனிக்குடத்தில் இருந்து திரவம் வெளியேறிவிடுவதால் பிரசவம் ஈரப்பதமற்றதாகிவிடும். அதாவது, பனிக்குடத்தில் தண்ணீர் இருக்கும்போதுதான் குழந்தை நகர்ந்து திரும்புவதற்கான இடம், நழுவி வருவதற்கான ஈரப்பதம் எல்லாம் இருக்கும். பனிக்குட நீர், தொற்று பரவுவதைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி கொண்டது. பனிக்குடம் உடைந்து ஓரிரண்டு நாட்களாகிவிட்டால் நோய்த்தொற்று ஏற்படக்கூடும். எனவே, பனிக்குடம் உடைந்து பிரசவ வலி எடுக்கா விட்டால்கூட வலி எடுப்பதற்கான ஊசியைப் போட்டாவது பிரசவத்தை நடத்த வேண்டும்.

கடைசி நேர சிக்கல்கள்

குழந்தை பிறந்தவுடன் பிரசவம் முடிவதில்லை. குழந்தை வெளியே வந்த பிறகு குழந்தையின் தொப்புள் கொடியை நீக்கிய பிறகு, நஞ்சு தானாக வெளியே வந்தால்தான் சுகப்பிரசவம் என்று அர்த்தம். குழந்தை வெளியே வரும்போழுது 100 சதவீத வலி இருந்ததென்றால் கருப்பையை விட்டு நஞ்சு வெளியேறும்போது 20 சதவீத வலிவரும்.
குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் நஞ்சு வெளியே வந்துவிட வேண்டும். அப்படி வெளியே வந்தவுடன் கர்ப்பப்பை சுருங்கி, ரத்தம் வெளியேறுவது நின்றுவிடும்.

சிலநேரம் நஞ்சு வந்தபிறகும் கருப்பை சுருங்கி விரியாவிட்டால் ரத்தம் அதிகமாக வெளியேறும். சிலநேரம் நஞ்சு வெளியே வராமல் கருப்பையோடு போய் ஒட்டிக்கொள்ளும். இந்த நேரத்திலும் ரத்தம் அதிகமாக வெளியேறும். இது தாயின் உயிருக்கேகூட ஆபத்தை விளைவிக்கலாம். மருந்து கொடுத்தோ ஊசி போட்டோ ரத்தப்போக்கை நிறுத்துவார்கள். இவை எல்லாம் சரியாக நடந்தால்தான் சுகப்பிரசவம் என்கிறோம். அதனால்தான் பிரசவத்தை ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் மறுபிறவி என்கிறோம்.


(நலம் நாடுவோம்) கட்டுரையாளர்,
மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x