Published : 06 Oct 2019 02:51 PM
Last Updated : 06 Oct 2019 02:51 PM

அன்றொரு நாள் இதே நிலவில் 26: செடிகளின் மேலே நெருப்புத்துண்டுகள்

பாரததேவி

மழைக்காலங்களில்தான் காடுகளிலும் வயல்களிலும் நிறைய வேலை இருக்கும். அப்போதுதான் கிழக்கு வானில் மழைமேகங்கள் கூட்டுசேர்ந்து கூட்டுசேர்ந்து மக்களைப் பயமுறுத்திவிட்டுப் போகும். அவ்வப்போது கிழக்குத் திக்கமாய் இடியும் மின்னலும் முழங்க, காடுகளில் வேலைசெய்யும் ஆண்களும் பெண்களும் பயந்துபோவார்கள்.

அதிலும் முக்கியமாக ஆடு மேய்ப் பவர்களில் ஒருவன் இடி மின்னலைப் பார்த்துவிட்டு, “ஏலேய் ஈழமும் (தென்கிழக்கு) கொங்கையும் (வடமேற்கு) எதுத்து மின்னுது. பெரிய மழைவரும் போலிருக்கு. பள்ளத்தில் கிடக்க கூட்டைத் தூக்கி மேட்டுல போட்டு அதுக்குள்ள இருக்க குட்டிகள காப்பாத்துங்கடா” என்று சொல்ல ஆட்டுக்காரர்கள் கூடுகளைத் தூக்க ஓடுவார்கள்.

தரையெங்கும் பரவும் பூச்சிகள்

காடுகளில் வேலைசெய்யும் பெண்கள் வீட்டை நோக்கி ஓடுவார்கள் அல்லது தங்கள் பிள்ளைகளை முடுக்கிவிடுவார்கள். திண்ணையிலோ களத்திலோ காயப்போட்ட தானியங்களை அள்ளவும் இரவு சோறாக்க விறகு எடுத்துவைக்கவும் இரவு பிள்ளைகள் ஒண்ணுக்கிருந்ததால் நனைந்திருந்த சாக்குகள், பழஞ்சேலைகள், பாய்கள் அனைத்தையும் இன்று படுப்பதற்காகக் காய்ந்துகொண்டிருக்கும் படுக்கைகளை எடுப்பதற்காகவும் ஓடுவார்கள். சிலநேரம் இவர்கள் ஓடும் முன்பே மழை அனைத்தையும் நனைத்துவிடும்.

காலைநேரம் பிஞ்சைக்குப் போகும் போதே வாய்க்காலிலும் வரப்புகளிலும் அடர்ந்திருக்கும் புற்களில் பனித் துளிகள் சிறு சிறு கிரீடத்தோடு வீற்றிருக்கும். அந்தப் பனித்துளிகளில் கூடப் பல வண்ணங்கள் சேர்க்கைக் கூட்டத்தோடு அமர்ந்திருக்கும். வெயில் காலத்தில் இல்லாத பலவிதப் பூச்சிகள் நிலமெங்கும் பரவியிருக்கும். கூடு சுமந்த நத்தைகள், வெல்வெட்டுத் துணியைப் போல் தொட்டால் மென்மையாய்க் கையில் ஒட்டிக்கொள்ளும் அழகிய சிவப்புப் பாப்பாத்திப் பூச்சி, தொட்டால் சுருண்டுகொள்ளும் துட்டுப் புழுக்கள், குன்னான் என்று நிறையப் பூச்சிகள் இருக்கும். இந்தக் குன்னான்கள் விசித்திரமானவை. இவை சிறு குழியைத் தோண்டி அதனுள் இருக்கும். ஒரு குன்னானைப் பிடித்து நூல்கட்டி இன்னொரு குன்னான் குழியில் விட்டால் அந்தக் குழிக்குள் இருக்கும் குன்னானையும் கூட்டி வந்துவிடும். இவற்றுடன் தட்டான்கள், ஈசல்கள் என்று நிறைய பூச்சிகளும் புழுக்களும் அலையும்.

ருசிக்கத் தூண்டும் ஈசல்

வாசல்களிலும் காடுகளிலும் கண்ணாடிச் சிறகுகளோடு நிறையத் தட்டான்கள் அலைந்தால் பூமி செழிக்க மழை பெய்யும் என்பது பெரியவர்களின் வார்த்தை. சிலர் பள்ளத்தில் தண்ணீரைத் தேக்கிவைத்து தீப்பந்தத்தை வைத்து ஈசல்களைப் பிடிப்பார்கள். தீயில் கருகும் ஈசலின் மணமே ருசி கொடுப்பது போலிருக்கும். அதற்காகவே சிலர் ஈசலைப் பிடித்துச் சோளத்தோடு வறுத்துத் தின்பார்கள். மழைக்காலத்தில் மரங்கள் எல்லாம் பச்சைப் போர்வைகளைப் போர்த்திக்கொண்டு இருக்க, பறவைகளுக்குச் சந்தோஷம் தாங்காது.

விதவிதமான பறவைகள் விதவிதமான கூடுகளைக் கட்டி மரங்களையே அலங்கரித்துவிடும். இரவு நேரத்தில் தீப்பொறிகளை அள்ளி வீசியதுபோல் மினுக்கட்டான் பூச்சிகள் பயிர்கள், செடிகளின் மேற்பரப்பில் நெருப்புத் துணுக்குகளாய் அலையும் காட்சி கொள்ளை அழகாய் இருக்கும். மழைக்காலத்தில் நிலாவும் சூரியனும் இரவிலும் பகலிலும் கருத்துத் திரண்ட மேகங்களோடுதான் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்குமே தவிர வெளிச்சத்தையோ வெயிலையோ கொடுக்காமல் முரண்டு பிடிக்கும்.

அடுப்புடன் நடக்கும் மல்லுக்கட்டு

மனிதர்கள்தாம் பாவம். வீடு நிறைய பிள்ளைகளை வைத்துக்கொண்டு பசியாற்ற முடியாமல் தவித்துப்போவார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் வெயில் காலத்திலேயே வரகு, சாமை, குதிரைவாலி என்று தானியங்களைக் குத்தி அரிசியாக்கி, அடுக்குப் பானைகளில் பத்திரப்படுத்திக்கொள்வார்கள். மழைக்காலத்தில் இந்தத் தானியங்களைக் காயப்போட இடமிருக்காது. பகலில் வெயிலே அடிக்காது. அப்படியே சில நேரம் வானம் திறந்து சூரியன் வெளியே வந்தாலும் வாசல் களமெல்லாம் ஈரம் சாடிக்கிடப்பதால் தானியங்களைக் காயப்போட முடியாது. காயப்போடாமல் இந்தத் தானியங்களைக் குத்தி அரிசியாக்கவும் முடியாது.

மழைக்காலத்தில் அடுப்பைப் பற்றவைப் பதும் சவாலான வேலை. என்னதான் விறகுகளை எடுத்துப் பத்திரப்படுத்தினாலும் ஈரக்காற்றில் விறகு பதத்துப்போய்தான் இருக்கும். காய்ந்த ஓலைகளையும் சருகுகளையும் போட்டுக் கொஞ்சம் மண்ணெண்ணெய்யை ஊற்றி, பத்துத் தீக்குச்சிகளையாவது பற்றவைக்க வேண்டும். அப்படியே பற்றினாலும் ஊதுகுழலைக் கொண்டு நெஞ்சு, வயிறு வலிக்க ஊதினால்தான் அடுப்பு ஏதோ தர்மம் செய்வதுபோல் மெல்ல நிதானமாக விறகுகளில் பிடித்து எரியும். ஒருவர் வீட்டில் அடுப்பு எரிந்தால்போதும் ஊருக்குள் எல்லோரும் அவர்கள் வீட்டில் நெருப்பு எடுத்துவந்துதான் அடுப்பைப் பற்றவைப்பார்கள்.

வீடு சேருமா வெள்ளாமை?

இந்த மாதிரி நேரத்தில் கூலி ஆட்களுக்குத்தான் ரொம்ப கிராக்கியாக இருக்கும். வேலைக்கு ஆள் கூப்பிடப் போனால், அவர்கள் சுரண்டி இல்லை அரிவாள் இல்லை என்று சாக்குப்போக்கு சொல்வார்கள். சிலர் புள்ளைகள் எல்லாம் பட்டினி கிடக்குக; யாரு கிட்டயாவது நாழி கேப்பைய வாங்கித் திரிச்சி அதுகளுக்குக் கூழுகாய்ச்சி ஊத்திட்டுதேன் வரணும் என்பார்கள். காட்டுக்காரர்களோ நமக்கு வேலைக்கு ஆள்வந்தால் போதுமென்று கூலிக்காரர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்து, கெஞ்சி கெதறி கூட்டிக்கொண்டு போவார்கள்.

கருது விளைந்துவிட்டால் ஏழு, எட்டு நாளைக்குள் அறுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் மழையின் சிறு தூறலுக்குக்கூடத் தட்டையிலேயே முளைத்துவிடும். அப்படி முளைத்துவிட்டால் அவ்வளவுதான்; அனைத்தும் நட்டமாகிவிடும். அப்படி அறுத்துக்கொண்டு வந்தால் கருதைக் காயப்போட களம் கிடைக்க வேண்டும். களம் கிடைத்தாலும் அதை அடிக்கப் பிணையலுக்கான மாடு வேண்டும். அல்லது அடிப்பதற்கு ஆட்கள் வேண்டும். ஆக, இந்தக் கருதுகள் எல்லாம் தானியமாக வீடு வந்து சேர்ந்தால்தான் விவசாயிகளுக்கு நிம்மதி.

முருகனும் செந்தியும்

தைப் பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது. அதற்காகவே எல்லோரும் நெல்லை அவித்து வீட்டுக்குள் காயப்போட்டிருந்தார்கள். பிள்ளைகளின் கால் மிதியில் சில புழுங்கல்கள் வெளியேபோக அங்கே இரைபெறக்கிக்கொண்டிருக்கும் கோழிகளுக்கும் சேவல்களுக்கும் கொண்டாட்டம்தான். அன்றைய தினம் மழை விழுந்துகொண்டே இருந்தது. முருகனுக்கும் செந்திக்கும் முதல் கவலை கஞ்சி கவலையாகத்தான் இருந்தது. அண்டியும் சவலையுமாக அஞ்சாறு பிள்ளைகள். எழுந்திரிக்கும் போதே, “அம்மா எனக்குப் பசிக்கு” என்றுதான் எழுந்திருப்பார்கள்.

இதனாலேயே பிள்ளைகள் மத்தியானம்வரை தூங்கினால் நல்லது என்று செந்தி நினைப்பாள்.
இப்போது வீட்டில் ஒரு தானியமில்லை. பொங்கலுக்காக அவித்த நெல்தான் இன்னும் ஈரப் புழுங்கலாக வீட்டுக்குள் காய்ந்து கொண்டிருந்தது. முருகனுக்கு ஒரு குருக்கம் காடு இருந்தது. அதில்தான் விவசாயம் செய்துகொண்டிருந்தான். அவனால் நல்ல துடிப்பான காளைகளை வாங்க முடியாததால் எப்போதும் வத்தலும் தொத்தலுமான, நடக்கவே தடுமாறும் காளைகளைத்தான் வாங்கி வருவான். அதை வைத்துத்தான் விவசாயம் செய்வான். இப்படி விவசாயம் செய்கிறவன் வீட்டில் தானியம் குமிந்தா கிடக்கும்? ஒரு பிடி தானியம்கூட இல்லாமல் அடுக்குப்பானைகள் எல்லாம் வெறுமையாகக் கிடந்தன.

இப்போது கடனாகத் தானியம் வாங்கினாலும் பானைக்குள் கிடக்கும் தானியம் ஈரப்பதத்தில் ‘குளு குளு’ வென்று இருக்கும் குத்தி அரிசியாக்கவும் முடியாது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தார்கள். கடைசியாக முருகன் எழுந்து, “செந்தி, நானு மாடுகள அவுத்துக்கிட்டு உழவுக்காகப் போறேன். நீ ஒண்ணும் ரோசிக்காத. வீட்டுக்குள்ள கெடக்க புழுங்கல அள்ளிக் குத்திக் காய்ச்சி புள்ளைகளுக்கும் ஊத்தி எனக்கும் இம்புட்டுக் கஞ்சி கொண்டுவா. ஈர உழவுதேன். முடியு மட்டும் நானு உழுதுக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லிவிட்டு காளைகளோடு பிஞ்சையை நோக்கி நடந்தான்.

ஞெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் நெஸ்ட்லே நிறுவனம் புதுமையான திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்தியிருக்கிறது. ஜப்பானில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் ‘கிட்கேட்’ சாக்லேட்டுகள் ஞெகிழி உறைக்குப் பதிலாக ஓரிகாமி கொக்கு செய்யும் முறையுடன் அச்சிடப்பட்ட காகித உறையால் சுற்றப்பட்டு விற்கப்படுகின்றன.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x