Published : 05 Oct 2019 11:32 AM
Last Updated : 05 Oct 2019 11:32 AM

தக்காளி வீணாவதைத் தடுக்க நடமாடும் இயந்திரம்

த.சத்தியசீலன்

தமிழக அரசின் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை தக்காளியைக் கூழாக்கும் நடமாடும் இயந்திரத்தைக் கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் தக்காளியை மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றி உழவர்கள் கூடுதல் வருமானம் பெறலாம் என்கின்றனர், இத்துறையினர். இந்தியாவில் 2018-19-ம் ஆண்டில் 8.14 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, 202.15 லட்சம் டன் உற்பத்தியாகும் என்று தேசியத் தோட்டக்கலை வாரியத்தின் முதலாம் முன்கூட்டிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகம், தெலங்கானா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாட்டில் தக்காளி உற்பத்தி செய்யப்படும் முக்கிய மாநிலங்கள். தக்காளி உற்பத்தியில் தமிழகம் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே பங்களிக்கிறது.

திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்கள் நம் மாநிலத்தில் தக்காளி சாகுபடி செய்யும் முக்கியப் பகுதிகள். கோவை மாவட்டத்தில் 1,971 ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, 98,565 மெட்ரிக் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. அனைத்துப் பருவங்களிலும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டாலும், ஆடிப் பருவ சாகுபடியை உழவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அறுவடைக்கு முன்பு பூச்சி, நோய்த் தாக்குதல் தக்காளியில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அறுவடைக்குப் பின்னர் 30 முதல் 35 சதவீதம் தக்காளி வீணாகிறது.

அதிகம் விளையும் பருவங்களில், குறைந்த விலைக்குத் தக்காளியை விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். நீண்ட நாட்கள் சேமித்து வைத்து விற்க முடியாத காய்கறி, தக்காளி என்பதால், விவசாயிகள் அறுவடையை முடித்த கையோடு, அதைச் சந்தைப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. இந்நிலையில் அதிக விளைச்சலால் ஏற்படும் விலை வீழ்ச்சி ஏற்படும் தருணங்களில், வேலையாட்களுக்குக் கூலி கொடுக்க முடியாமல், சாகுபடிக்காக முதலீடு செய்த அசல்கூட கிடைக்காத நிலையில், விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர்.

உரிய விலை கிடைக்காததால், அறுவடை செய்த தக்காளியை விவசாயிகள் சாலையோரங்களில் கொட்டிவிட்டுச் சென்ற சம்பவங்கள் கடந்த காலத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், அன்னூர் ஆகிய பகுதிகளில் நடந்துள்ளன. இதைத் தடுக்க தக்காளியை மதிப்புக் கூட்டுப் பொருளாக்கி விற்கும்போது, விலை வீழ்ச்சியால் உழவர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, சாகுபடி வீணாவதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தமிழக அரசின் வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத்துறையின் நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் வழிவகுக்கிறது.

“2017-18-ம் ஆண்டின் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ. 40 லட்சம் மதிப்பில் கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நடமாடும் பேருந்துடன் இணைக்கப்பட்டு இந்த இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் தக்காளியைக் கழுவி, அரைத்துக் கூழாக்கி, பதப்படுத்தி பாட்டில்களில் நிரப்புதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் 1 டன் தக்காளியை உள்ளீடு செய்து, 300 கிலோ மதிப்புக் கூட்டிய தக்காளிக் கூழ் தயாரிக்கலாம். இதைக் கொண்டு கெட்சப், ஜாம், சாஸ் போன்றவை தயாரிக்கலாம். இதற்குச் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

கணிசமான விலையும் கிடைக்கிறது. கூழ் உற்பத்திக்குப் பின்னர் கிடைக்கும் சக்கை நிறமிகள் தயாரிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தில் தக்காளி மட்டுமின்றி கொய்யா, மா, பப்பாளி போன்றவற்றில் இருந்தும் பழக்கூழ் தயாரிக்கலாம். தற்போது இயந்திரத்துடன் கூடிய வாகனத்தைப் பதிவுசெய்யும் பணி நடைபெறுகிறது. விரைவில் உழவர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளது. அதன் பின்னர் உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் அனுப்பப்படும். இதன்மூலம் உழவர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்தவாறே, தக்காளியை மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றிப் பயன்பெறலாம்” என்கிறார், வேளாண் விற்பனை, வணிகத்துறை துணை இயக்குநர் ரா.விஷ்ணுராம் மேத்தி.

தக்காளி இன்றி அமையாது சமையல்

சமையலில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் தக்காளி மிகவும் முக்கியமானது. இதன் புளிப்புத்தன்மை தயாரிக்கப்படும் உணவின் சுவையைக் கூட்டுகிறது. சாம்பார், ரசம், தொக்கு, சட்னி எனத் தயாரிக்கப்படும் உணவு வகைகளுக்கு விதவிதமான சுவையைக் கொடுப்பதில் தக்காளி தனித்துவம் வாய்ந்தது.

சைவம், அசைவம் ஆகிய இருவகை சமையலிலும் தக்காளிக்கு முக்கியப் பங்குண்டு. ‘தக்காளியின்றி அமையாது சமையல்’ என வேடிக்கையாகச் சொல்லும் அளவுக்குத் தக்காளியின் பங்கு முக்கியமானது. பச்சையாகவும், சமைத்தும் உண்பதற்கேற்ற தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள், வைட்டமின்கள் அடங்கியுள்ளன.

அதிலும் குறிப்பாக வைட்டமின் 'ஏ' அதிகமாக அடங்கியுள்ளதால் கண்பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது.அதிக அளவு நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது.

இதேபோல் உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க வல்லது. எலும்பு உருக்கி நோய், நுரையீரல், மார்பகம், புற்றுநோய் ஆகியவை வராமல் தக்காளி தடுப்பதாகவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது எனவும் பல்வேறு மருத்துவக் குணங்கள் தக்காளியில் நிறைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x