Published : 05 Oct 2019 10:03 AM
Last Updated : 05 Oct 2019 10:03 AM

பசுமை எனது வாழ்வுரிமை 03: நாங்கள் என்ன தவறு செய்தோம்?

கு.வி. கிருஷ்ணமூர்த்தி

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க அரசு ஜூம் எனப்படும் காட்டெரிப்பு வேளாண் முறையை அழிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, பைகா பழங்குடி மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள் பற்றி 1939-ம் ஆண்டு வெரியர் எல்வின் எழுதிய நூல் விரிவாக விவரிக்கிறது. சிறிய பழங்குடிச் சமுதாயமான பைகா, மத்தியப் பிரதேசத்தின் மண்ட்லா, பாலாகாட், விலாஸ்பூர் மாவட்டங்களின் காடுகளில் வாழ்ந்து வந்தனர்.

இவர்களின் ஜூம் வேளாண்மையை ஒழிக்கும் முயற்சி முதன்முறையாக 1860-களில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது மண்டல முதன்மை ஆணையராக இருந்த சர் ரிச்சர்டு டெம்பிள் என்ற அதிகாரி காட்டிலிருந்து பெறப்படும் அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சியை மேற்கொண்டார். பைகா பழங்குடி மக்கள் ஜூம் வேளாண்மையைக் கைவிட்டுவிட்டு சமவெளிப் பகுதிகளில் உழவு - வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஜூம் பகுதிகளில் மரக்கட்டை கொடுக்கும் மரங்களை வளர்க்க இடம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.

நெருக்கடி அதிகரிப்பு

பைகா இனத்தவர் இதனை வன்மையாக எதிர்த்தபோது, துணை ஆணையர் தலைமையில் அரசுப்படை அங்கே சென்று நன்கு வளர்ந்திருந்த பயிர்களை அழித்தது. இதனால் இந்தப் பழங்குடி மக்களின் போராட்டம் மேலும் வலுவடைந்தது. தொடர்ந்து காலனி அரசு பைகா மக்களின் ஜூம் வேளாண்மையைச் சிறிது சிறிதாக ஒழிக்கத் திட்டமிட்டது. இதன் முதல் நடவடிக்கையாக 1870-ல் அரசுத் தீர்வை அலுவலர் (settlement officer) ஜூம் வேளாண்மையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதற்குப் பதிலாக, அதன் அளவைச் சிறிதுசிறிதாகக் குறைப்பதற்கான ஒரு செயல் திட்டத்தை உருவாக்கினார். இதன் விளைவாக 1890-ல் காலனி அரசு, ஒரு பைகா சாக் (Chak) என்று அவர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட ஒரு காட்டுப் பகுதியை வரையறுத்தது.

இந்தக் காட்டுப் பகுதி 23,920 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மற்ற பகுதிகளில் இந்த வேளாண்மைக்குத் தடை விதித்து, பைகா மக்கள் இங்கு மட்டுமே ஜூம் வேளாண்மை செய்ய வேண்டும் என அரசு வலியுறுத்தியது. பிரிட்டிஷ் அரசு இதனை மிகவும் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டிருந்தது. பழங்குடி மக்களுக்கு இவ்வாறு ஒதுக்கப்பட்ட பகுதிகள், மக்கள் எளிதில் அடைய முடியாத மரக்கட்டை உற்பத்திக்கு முற்றிலும் பயனற்ற பகுதிகளாக இருந்தன. இது பைகா மக்களை ஏறத்தாழச் செயலிழக்கச் செய்து, அவர்களில் சிலரை வேறு பகுதிகளுக்கு இடம்பெயரத் தூண்டியது.

பண்பாட்டு அழிவு

பைகா மக்களின் போராட்டம் பல்வேறு வகைகளில் முன்னெடுக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட்டாரத் தேர்தல்களில் கைகளால் அல்லாமல் கால்களின் மூலம் வாக்களித்தனர். அரசு, அரசு அதிகாரிகளுடன் மோதல்களில் ஈடுபட்டனர்; வரி செலுத்த மறுத்தனர்; தடை செய்யப்பட்ட நாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து ஜூம் வேளாண்மை செய்தனர்.

அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒரு சீரிய பண்பாடு அழிவதன் உணர்வை ஏற்படுத்தின. இது 1892-ல் பைகா பழங்குடி மக்கள் அரசுக்குச் சமர்ப்பித்த மனு ஒன்றில் பின்வருமாறு சுட்டப்பட்டிருந்தது: “ஜூம் வேளாண்மை ஏறத்தாழ நிறுத்தப்பட்ட பின்பு நாங்கள் தினமும் செத்து மடிகிறோம்; எங்களிடம் உணவு தானிய இருப்பு இல்லை; எங்களின் ஒரே சொத்து எங்களுடைய கோடாலி மட்டுமே; எங்களிடம் உடுக்க உடை இல்லை.

எனவே, குளிரான இரவு நேரத்தை நெருப்பு மூட்டி அதற்கருகில் கழிக்கிறோம். எங்களுக்கு வேறு போக்கிடமும் இல்லை, ஏனெனில், அனைத்து இடங்களிலும் பிரிட்டிஷ் அரசு உள்ளது. பிரிட்டிஷ் அரசு தண்டிக்கும் அளவுக்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? குற்றவாளிகளுக்குக்கூடச் சிறையில் போதுமான அளவு உணவு வழங்கப்படுகிறது. அரிசி, கோதுமை போன்ற தானியங்களைப் பயிரிடுபவர்கள்கூட (சாதாரண விவசாயிகள்) அவர்களுடைய சொத்துகளை இழப்பதில்லை. ஆனால், அரசு இங்கு பல சந்ததிகளாக வாழ்ந்து வந்த எங்களுடைய உரிமைகளை எங்களுக்குக் கொடுக்கவில்லை”

(தொடரும்)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x