Published : 05 Oct 2019 09:49 AM
Last Updated : 05 Oct 2019 09:49 AM

டிஸ்லெக்சியா எனும் வாசிப்புக் குறைபாடு

டாக்டர் எம். எஸ். தம்பிராஜா

அக்.4: உலக டிஸ்லெக்சியா விழிப்புணர்வு நாள்

“இவன் புத்திசாலியான ஒரு பையன், அறிவுத்திறனைப் பொறுத்தவரையில் இவன் யாருக்கும் சளைத்தவன் அல்ல. அவனது பேச்சும் சரளமாக உள்ளது. ஆனால், அவனால் வாசிக்க மட்டும் இயலாமல் உள்ளது. இவன் எழுத்திலும் எழுத்துப் பிழைகள் மிகையாக உள்ளன. எடுத்துக்காட்டாக, Percy என்ற தன் பெயரை Precy என்றும், carefully, peg என்ற சொற்களை முறையே carfuly, pag என்றும் எழுதுகிறான். இவனால் 7 என்ற எண்ணை வாசிக்க முடியும், ஆனால் அதையே Seven என்று சொல் வடிவில் எழுதினால் வாசிக்க முடியவதில்லை. இவனுக்குக் கண் பார்வையில் கோளாறு எதுவுமில்லை”.

இது, பிரிங்கல் மோர்கன் (Pringle Morgan) என்ற பொதுநல மருத்துவர் ஒருவர் தான் பார்த்த பெர்சி என்ற 14 வயதுப் பையனைப் பற்றி 1896-ல் British Medical Journal என்ற பிரித்தானிய மருத்துவ ஆய்விதழில் எழுதிய அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் புகழ்பெற்ற வாசகங்கள்.

பாதிக்கப்படும் வாசிப்புத் திறன்

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மிகத் தீவிரமாக ஆராயப்பட்டு வந்துள்ள ஒரு வளர்ச்சிக் குறைபாடு டிஸ்லெக்சியா. இது குழந்தைகளில் காணப்படும் ஒரு மன வளர்ச்சிக் குறைபாடு. ஆனால், அறிவுத்திறன் குறைபாடு (முன்னாளில் இது மனவளர்ச்சிக் குறைபாடு என்று கருதப்பட்டது) என்ற வளர்ச்சிக் குறைபாட்டுக்கும் டிஸ்லெக்சியாவுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. டிஸ்லெக்சியா வாசிப்புத் திறனை மட்டுமே பாதிக் கிறது என்பதுதான் நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி.

இது மனநோய் அல்ல!

வாசிப்பதில் மட்டும் உள்ள குறைபாடா? இது எப்படிச் சாத்தியமாகும் என்ற வியப்பு பலருக்கு ஏற்படுவதுண்டு. சில மருத்துவர்களும் ஆசிரியர்களும் கூட டிஸ்லெக்சியாவைச் சரிவரப் புரிந்துகொள்வது இல்லை. அப்படி ஒரு குறைபாடே கிடையாது என்று வாதிடுபவர்களும் உண்டு. இந்தப் பாதிப்பு உள்ள குழந்தைகளின் நுண்ணறிவு (Intelligence) சராசரி அளவில் இருக்கும். பல அறிஞர் களுக்கு இந்த டிஸ்லெக்சியா பாதிப்பு இருந்ததாக அறியப்படுகிறது.

டிஸ்லெக்சியா ஒரு மன நோய் அல்ல என்பதையும் வலியுறுத்திக் கூற வேண்டும். டிஸ்லெக்சியாவுடன் எண்கணிதக் குறைபாடும் எழுத்துக் குறைபாடும் ஒட்டி வருவதுண்டு. இதனால் இதைக் கற்றல் குறைபாடு (LD; Learning Disability) என்று பொதுவாக அழைப்பதுண்டு.

ஒலியே பிரச்சினை

டிஸ்லெக்சியாவைச் சரிவரப் புரிந்துகொள்வது முக்கியம். (காண்க பெட்டிச் செய்தி). அன்றாடப் பேச்சு மொழியில் உள்ள சொற்களின் ஒலிகளைச் சரியாக அடையாளம் காண இயலாமையே டிஸ்லெக்சியா வில் உள்ள அடிப்படைக் குறைபாடு. அதாவது இவர்கள் ஒரு பேச்சுச் சொல்லின் ஒலியன்களைப் பிரித்துச் சொல்லச் சிரமப்படுகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, கப்பல் என்ற சொல் /க/ /ப்/ /ப/ /ல்/ என்ற நான்கு ஒலியன்களைக் கொண்டது. ஆனால், இவர்களுக்கு அதை ஒலி பிரித்து அறிய முடிவது இல்லை.

எனவே, தாம் வாசிக்கும் சொல் என்னவாக இருக்கும் என்று ஊகித்துக் கூறுகிறார்கள். இதனால் இவர்கள் தப்புத் தப்பாக வாசிக்கிறார்கள், தயங்கித் தயங்கி வாசிக்கிறார்கள், மெல்ல மெல்ல வாசிக்கிறார்கள். “ஒரு வரியை வாசிக்க இவனுக்கு ஒரு நாள் ஆகும்” என்று ஆசிரியர்கள் அலுத்துக்கொள்வது உண்டு.

பாதிப்பை எப்படி அறியலாம்?

இவர்களின் எழுத்திலும் எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கும். இது ஒன்றே ஒரு மாணவனுக்கு டிஸ்லெக்சியா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப் போதுமானது. டிஸ்லெக்சியா மொழி சார்ந்த ஒரு குறைபாடு என்பதால் எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற மருத்துவச் சோதனைகள் தேவை இல்லை. மாறாக, வாசிப்பு - எழுத்துச் சோதனைகள் வழியாகவே இது அடையாளம் காணப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட ஒரு சோதனை வழியாக உறுதிசெய்ய முடியாது. டிஸ்லெக்சியாவுக்கு என்று முறைப்படியான தனி சோதனை இல்லை. பலவிதமான வாசிப்புத் திறன் சோதனைகளைக் கொண்டே டிஸ்லெக்சியா ஒருவருக்கு உண்டு என்று உறுதிபடக் கூற முடியும்.

அந்நியமாய் உணரும் மாணவர்கள்

சிறப்பு ஆசிரியர்களுக்கு இந்தச் சோதனைகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளிடையே ஏறத்தாழ 10 சதவீதம் அளவில் டிஸ்லெக்சியா காணப்படுகிறது என்று பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இன்றைய கல்வியில் வாசிப்பு பெரும் பங்காற்றுகிறது. எனவே, வாசிப்புக் குறைபாடு உள்ளவர்கள் கல்விச் சாலைகளில் இருந்து விலக்கப்படுகிறார்கள் அல்லது தானாக விலகிக்கொள்கிறார்கள்.

ஒலிவழிக் கற்றல் மட்டுமே தீர்வா?

நாள் போகப்போக டிஸ்லெக்சியா தானாக மாறிவிடும் என்று பலர் நினைப்பதுண்டு. இது தவறு. இவர்களுக்கு உள்ள வாசிப்புக் குறைபாடானது வாழ்நாள் பூராகவும் நீடிக்கும் தன்மை கொண்டது. ஆனால், முறையான சிறப்பு வாசிப்புப் பயிற்சி வழியாக டிஸ்லெக்சியாவை வெற்றிகொள்ள முடியும். இதில் ஒலிவழிக் கற்பித்தல் முறையே சிறந்தது என்று ஆராய்ச்சி கள் நிறுவியுள்ளன. இதுவே டிஸ்லெக்சியா நாளை ஒட்டி பெற்றோர்கள் அறிந்துகொள்ள வேண்டிய நற்செய்தி.

* டிஸ்லெக்சியா ஒரு வளர்ச்சிக் குறைபாடு. இது வாசிப்புத்திறனையும் எழுத்துத் திறனையும் மட்டுமே பாதிக்கிறது; இவர்களின் நுண்ணறிவு சராசரி அளவாக அல்லது அதற்கும் கூடிய அளவில் இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட பலர் பேராசிரியர்களாகவும் மேதைகளாகவும் திகழ்கிறார்கள்.


* வாசிப்புக் குறைபாடு எல்லா மொழி பேசும் குழந்தைகளிடமும் காணப்படுகிறது; உலகில் ஏறத்தாழ 10 சதவீதக் குழந்தைகளுக்கு டிஸ்லெக்சியா உண்டு என்பதே ஆராய்ச்சிகள் கூறும் செய்தி.

* இது மூளை சார்ந்த ஒரு குறைபாடு, படிப்பில் அக்கறையின்மையாலோ பெற்றோர்களின் கவனக் குறைவாலோ ஏற்படுவது அல்ல;
* மூளை வளர்ச்சியின்போது நரம்பு வலைப் பின்னல்களில் ஏற்படும் குளறுபடிகளால் உண்டாகிறது.

* இதை ஆரம்பப் பள்ளியின் போதே அடையாளம் காண முடியும். தப்புத் தப்பாக, தயங்கித் தயங்கி, மெதுவாக வாசிப்பது, மிகையான எழுத்துப் பிழைகள் ஆகியவையே இதன் முக்கிய அறிகுறிகள்.

* டிஸ்லெக்சியாவுக்கு மருத்துவச் சோதனைகள் இல்லை. கல்வி சார்ந்த வாசிப்பு - எழுத்துச் சோதனைகள் வழியாகவே அடையாளம் காணப்படுகிறது.

* சொற்களை ஒலி பிரித்து வாசிக்கக் கற்றுக்கொடுப்பதே டிஸ்லெக்சியாவை வெற்றிகொள்ளும் வழி என்பதே ஆராய்ச்சிகள் கூறும் செய்தி. இவ்வாறு மொழியை ஒலிவழிக் கற்பிப்பதற்குச் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை.

* தன் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா பாதிப்பு இருப்பதாகச் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் பெற்றோர்கள் முதலில் ஆசிரியர்களுடன் பேசி சொல் வாசிப்புச் சோதனைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

* டிஸ்லெக்சியாவில் காணப்படும் மொழிசார் குறைபாடுகளை முழுமை யாகத் தீர்க்க இயலாவிட்டாலும், கணிசமான அளவு நிவர்த்தி செய்ய முடியும்.

கட்டுரையாளர்,
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x