Published : 04 Oct 2019 10:03 AM
Last Updated : 04 Oct 2019 10:03 AM

திரைக்குப் பின்னால்: எனக்குள் ஓர் இயக்குநர்! - ஒளிப்பதிவாளர் ரத்னவேல்

முத்து

“எப்போதுமே ஒரு நேரத்தில் ஒரு படம்தான் பண்ணுவேன். ‘ரங்கஸ்தலம்’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிரஞ்சீவி, ராம் சரண் இருவருமே ‘சைரா’ படம் பண்ண முடியுமா எனக் கேட்டார்கள். கதை யைக் கேட்டதுமே ஒப்புக்கொண்டேன். எப்போதுமே சவால்களைத் தேடி ஓடுபவன் நான். ‘சைரா நரசிம்மா ரெட்டி’ அப்படியொரு சவால்தான்” என்ற ரத்னவேலுவின் வார்த்தைகள் அவ்வளவு கலர் ஃபுல். ஒளிப்பதிவு செய்த படங்கள் அனைத்திலும் தனி முத்திரையைப் பதித்த அவரிடம் உரையாடியதிலிருந்து...

வரலாற்றுப் படமான ‘சைரா’வுக்கு எப்படித் தயாரானீர்கள்?

கதையைக் கேட்டவுடன், முன் தயாரிப்புக்கு 2 மாதம் நேரம் கேட்டேன். வரலாற்றுப் படம் என்பதால் லைட்டிங், சூட்டிங் என முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருந்தது. இந்தப் படத்தின் காலகட்டத்தில் லைட்டிங் எப்படி இருக்கும் என்பதற்குச் சான்றுகள் எவையும் இல்லை. நமது கலாச்சாரம் எப்படி என்பதை ஒளிப்பதிவில் கொண்டுவர வேண்டியிருந்தது.

‘சைரா’வுடைய நேர்மறை பக்கம், போர்க் காட்சிகள் என ஒவ்வொன் றுக்கும் வெவ்வேறு கலர் டோன் என முடிவு பண்ணி ஷூட் செய்தேன். முதல் நாள் தொடங்கி கடைசி நாள்வரை படப்பிடிப்பு கஷ்டமாக இருந்தது. படத்தில் பிரம்மாண்டம் மட்டுமல்ல, எமோஷனலும் இருக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்கும்போது இன்றைய இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தை உணருவார்கள்.

போர்க் காட்சிகள் சவாலாக அமைந்திருக்குமே..?

படத்தில் இரண்டு போர்க் காட்சிகள் உள்ளன. இரவில் நடக்கும் போர் ஒன்று உள்ளது. இரவு நேரம் நிறைய ஆட்கள், முன்னணி நடிகர்கள், தீப்பந்தம், குதிரைகள் ஆகியவற்றை வைத்து ஷுட் பண்ணினோம். அந்தக் காட்சிகளுக்கு லைட்டிங் செய்வதே சவாலாக இருந்தது. ஒளி குறைந்த இடத்தில் நிறைய காட்சிகள் தேவைப்பட்டதால் 2 வித்தியாசமான முயற்சிகள் செய்தோம். ‘சைரா’ குரூப்பில் உள்ளவர்களுக்குத் தீப்பந்தத்திலிருந்து வரும் ஒளியை வைத்து ஷூட் பண்ணினேன். வெள்ளைக்காரர்களுக்கு நிலா வெளிச்சத்திலிருந்து வரும் ஒளியை வைத்து ஷூட் செய்தேன்.

ஜார்ஜியாவில் ஒரு போர்க் காட்சி ஷூட் செய்தோம். அதற்கு ‘ஸ்பைடர் மேன்’ படத்தில் உபயோகிக்கப்பட கேமராவைப் பயன்படுத்தினேன். குதிரைகள் வேகமாக ஓடும்போது, அதற்கு மேலே போய் நாம் ஷூட் பண்ணனும். 4 பக்கமும் 200 அடி க்ரேன், அதில் வயர் மூலமாக கேமரா தொங்கும். ரொம்ப வேகமாக குதிரையில் போகும் காட்சிகளை எல்லாம் அனிமேட் ரானிக்ஸ் குதிரையில் ஷூட் பண்ணி மேட்ச் பண்ணினோம். தொழில்நுட்ப வளர்ச்சி இந்தப் படத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. இந்த இரு போர்க் காட்சிகளும் பேசப்படும்.

பெரிய நடிகர்களை ஒரே நேரத்தில் ஷூட் பண்ணிய அனுபவம்?

15 ஷாட்களில் சிரஞ்சீவி வந்தால், அடுத்த காட்சியில் மற்றொரு நடிகருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஷூட் பண்ணினேன். அனைத்தையும் நானும் இயக்குநரும் பேசித்தான் முடிவு பண்ணினோம். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் 20 நாட்கள் நடித்தார். அவருடைய நாட்களில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஷூட் பண்ணினேன். அவரும் பிஸியான நடிகர். தெலுங்கில் முதல் படம் என்பதால் ரொம்பவே மெனக்கிட்டு நடிச்சிருக்கார்.

தொடர் படப்பிடிப்புக்கு இடையே புதிதாக வரும் கேமரா அப்டேட்களை எப்படி அறிந்துகொள்கிறீர்கள்?

புதிதாக என்ன தொழில்நுட்ப சாதனம் வந்தாலும், அதை உபயோகப்படுத்திவிடுவேன். தினமும் ஓய்வின்போது லேப்டாப்பில் கேமரா குறித்து படிப்பது வழக்கம். அப்போது அரைமணி நேரத்தில் மீண்டும் புத்துணர்ச்சி வந்துவிடும். தெலுங்கில் டிஜிட்டல் கேமரா மூலம் பெரிய படங்களை நான்தான் பண்ணத் தொடங்கினேன். தொழில்நுட்ப ரீதியில் எப்போதுமே அப்டேட்டாக இருப்பதே சிறந்தது. தொழில்நுட்பங்கள் வந்து கொண்டேதான் இருக்கும், ஆனால், ஒளிப்பதிவாளர்களின் பார்வைதான் ஒளிப்பதிவில் முக்கியம் என நினைக்கிறேன்.

‘லிங்கா’வுக்குப் பிறகு தமிழில் ஏன் பெரிய இடைவெளி?

‘எந்திரன்’ முடிச்சவுடனே, பெரிய படங்களின் வாய்ப்பு வந்தது. ஆனால், தெலுங்கில் மகேஷ் படம், சிரஞ்சீவி படம், ‘கத்தி’ தெலுங்கு ரீமேக் என அனைத்துமே ஹிட்டாகி நல்ல பெயர் கிடைத்தது. தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்ததால், தமிழில் பண்ண முடியவில்லை. இப்போது ‘இந்தியன் 2’ மூலமாக மீண்டும் தமிழில் வருகிறேன்.

‘இந்தியன் 2’ படம் பற்றி..?

இயக்குநர் ஷங்கருடன் மறுபடியும் இணைந்திருக்கிறேன். கமலைத் தவிர அனைத்து ஹீரோக்கள் படமும் பண்ணிவிட்டேன். ‘இந்தியன் 2’ மூலம் அவருடன் இணைவதில் மகிழ்ச்சி. கதையும் சூப்பராக அமைந்துள்ளது. சமூகக் கருத்துடன் கதை சொல்வது ஷங்கர் பாணி. அது இப்படத்தில் இருக்கிறது.

எப்போது இயக்குநர் ரத்னவேலுவைப் பார்ப்பது?

7 வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டியது. ஒரு படத்தை இயக்கத் திட்டமிடும்போது, ஏதாவது பெரிய படத்துக்கு ஒளிப்பதிவு வாய்ப்பு வந்துவிடு கிறது. இப்போதுகூட ‘ரங்கஸ்தலம்’ முடித்துவிட்டு, படம் இயக்கத் திட்டமிட்டிருந்தேன். அதற்குள் ‘சைரா’ வந்துவிட்டது. ஒளிப்பதிவில் சவால்கள் நிறைந்த படங்கள் தொடர்ந்து வருவதால், படம் இயக்க நேரமெடுக்கும் என நினைக்கிறேன். ஒவ்வொரு ஒளிப்பதி வாளருக்குள்ளும் ஓர் இயக்குநர் இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x