Published : 02 Oct 2019 12:47 PM
Last Updated : 02 Oct 2019 12:47 PM

மாய உலகம்: எதைக் கொண்டு மனிதர்களை இணைப்பது?

மருதன்

காலை வழிபாடு நிறைவடைந்ததும் திரண்டிருந்த அனைவரையும் அமைதியாகப் பார்வையிட்டார் காந்தி. சலனம் ஏதுமில்லை. ஆனால், தன்னை அசைத்துப் பார்க்கத் துடிக்கும் கேள்வி ஒன்று இங்குதான் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதைக் காந்தியால் உணரமுடிந்தது. அது என்ன என்பதைக்கூட அவர் அநேகமாக யூகித்திருக்கலாம். இருந்தும் தானாகவே வெளியில் வந்து விழட்டும் என்று கண்களை மூடிக் காத்திருந்தார்.

எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. உரத்த குரல் ஒன்று காற்றைக் கிழித்துக்கொண்டு வந்து நின்றது. ‘‘காந்திஜி, சுதந்திர இந்தியா உருவாகிவிட்டது. ஆனால், அது நீங்கள் காண விரும்பிய இந்தியா அல்ல. உங்கள் சத்தியத்துக்கும் அகிம்சைக்கும் இங்கே இடமில்லை.

பகையும் வன்முறையும் வெறுப்பும் அடர்த்தியாகப் பரவிக்கொண்டிருக்கிறது. உண்மையில் நீங்கள் தோல்வி அடைந்துவிட்டீர்கள், காந்திஜி. அதை நீங்கள் இன்னமும் உணரவில்லை என்பதுதான் எத்தனை வேதனையானது! நீங்கள் ஏன் அமைதியாக இமயமலைக்குச் சென்றுவிடக் கூடாது?’’காந்தி அந்த இளைஞனை அருகில் அழைத்தார்.

‘‘மகனே, அன்பெனும் மெல்லிய இழை என்னை எங்கும் போக விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் இருப்புக்கும் ஆதாரமாகத் திகழும் இழை அது. புத்தரின் புன்னகையாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது அந்த இழை. அந்த இழையை வளர்த்தெடுத்து தான் உருவாக்கிய பாடலுக்குள் நம் அனைவரையும் கரைத்துவிடமுடியுமா என்று பார்த்தார் கபீர்.

இழையோடு ஒட்டிவந்த சொற்களையே இயேசு ஒரு குன்றின்மீது அமர்ந்து தன் மக்களுக்கு வழங்கினார். அவர் கரம் தீண்டிய இழையின் சாறுதான் மக்களின் வியாதிகளையும் வலியையும் குணப்படுத்தியது. இதே இழையைக் கொண்டு வேறு கரங்கள் உருவாக்கிய கூடுதான் இஸ்லாம்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் திருப்பெயரை ஓர் இஸ்லாமியர் மெய்மறந்து உச்சரிக்கும்போது அவர் முகம் வெளிச்சத்தில் பளிச்சிடுவதைக் கண்டிருக்கிறேன். என் ராமர் அன்பையே இழையாகத் தன் வில்லில் பூண்டிருக்கிறார். அனைவருக்கும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் அளியுங்கள் என்றுதான் ஒவ்வொரு முறையும் அவரிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்லருக்குக் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தேன். ‘அன்பு நண்பர் ஹிட்லருக்கு’ என்றுதான் அதைத் தொடங்கியிருந்தேன். அன்பின் நிழலைக்கூடத் தீண்டியிராத ஒருவரை, நண்பர் என்று எப்படி அழைக்கிறீர்கள் என்று உடன் இருந்தவர்கள் பதறினர். எதிரிகளே இல்லாத எனக்கு அனைவரும் நண்பர்கள்தான் என்று அவர்களிடம் சொன்னேன். ஆம், பிரிட்டனின் ஆதிக்கத்தை நான் எதிர்த்தேன்.

அவர்கள் நம் மக்களுக்கு இழைத்த கொடுமைகளை எதிர்த்தேன். நம்மீது சுமத்தப்பட்ட அடிமைத்தனத்தை எதிர்த்தேன். ஆனால், பிரிட்டனை அதன் மக்களை ஒருபோதும் நான் வெறுத்ததில்லை. என்னை அவர்கள் கைது செய்தபோதும், ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைத்தபோதும் என்னால் அவர்களை வெறுக்க இயலவில்லை. பகைவர்களாகவோ அரக்கர்களாகவோ அவர்களைக் காண முடியவில்லை என்னால்.

ஹிட்லரும் அதே பிரிட்டனைத்தான் எதிர்த்தார். ஆனால், அவரிடமிருந்தது வேறு வகை இழை. மனிதர்களைப் பகைச் சக்தியாகக் கருதி அவர்களைப் பிரித்தெடுக்கும் நஞ்சின் இழை அது. அதைக் கொண்டு வெறுப்பு அரசியல் என்னும் பேரபாயம் விளைவிக்கும் ஆயுதத்தை அவர் வளர்த்தெடுத்தார். எதிரி நாடுகள்மீது அதை அவர் பிரயோகித்தபோது, ஒவ்வொரு மனிதனின் இதயத்துக்குள்ளும் உலகப் போர் ஒன்று வெடித்தது.

தயவுசெய்து உங்களுக்குள் ஆழமாக வேறூன்றி இருக்கும் வெறுப்பைக் களைந்தெடுத்து வெளியில் வீசுங்கள் என்று ஹிட்லருக்கு எழுதினேன். அவர் கேட்கவில்லை. புறப் பகைவர்கள் அனைவர்மீதும் போர் தொடுத்து முடித்த பிறகு, ஹிட்லர் தன் நாட்டுக்குள்ளேயே புதிய பகைவர்களைக் கண்டறிந்து அழிக்க ஆரம்பித்தார். அவர் வளர்த்த வெறுப்பு அவரையே ஆட்கொண்டது.

நான் மீண்டும் மீண்டும் தோற்றுப் போனவன். சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினரிடமிருந்து மீட்க முடியாதபோது தோற்றுப் போனேன். யூதர்களை மீட்க இயலாதபோது தோற்றுப் போனேன். என் ராமரின் வில்லில் நான் பூட்டிய அன்பை அகற்றிவிட்டுக் கூர்மையான அம்பு பூட்டப்பட்டபோது தோற்றுப் போனேன். அருளாளனின் கருணையை அவரைத் தொழுதவர்கள் மறந்தபோதும் அன்பைப் பொழிந்த கிறிஸ்துவின் பெயரால் வாள் சுழற்றப்பட்டபோதும் நான் தோற்றுப் போனேன். புத்தரின் பெயரால் ரத்தம் தெறித்து விழுந்தபோது இன்னொருமுறை தோற்றுப் போனேன்.

என் சொற்கள் கேட்பார் இன்றி உடைந்து விழுந்து துடிக்கின்றன. என் பாடல்கள் வலுவிழந்து காற்றில் மறைகின்றன. என் தேவை முடிந்துவிட்டதாக உங்களைப்போல் பலரும் சொல்லிவிட்டார்கள். நான் நீண்டகாலமாகவே தனிமையில்தான் இருக்கிறேன். என் இருப்பு பலரைத் தொந்தரவுக்குள்ளாக்குவது எனக்குத் தெரியும். ஒரே ஒருவரைக்கூட எதிரியாக்கிக்கொள்ள இயலாத என்னை யாரேனும் ஒருவர் எதிரியாகக் கருதி நாளையே என் உயிரைப் பறிக்கவும் செய்யலாம்.

அப்போதும் நான் அன்பின் இழையை என்னோடு சேர்த்து அணைத்தபடியேதான் இறப்பேன். ஏனென்றால் நான் சுமந்துகொண்டிருப்பது நூற்றாண்டு கால கனவொன்றை. அது என்னில் தொடங்கியது அல்ல என்பதால் என்னோடு அது முடிவடையப் போவதில்லை. நான் கைராட்டையில் ஏந்தியிருக்கும் இழை முடிவற்றது. முகமற்றதும்கூட. அதற்கு மதம் கிடையாது. மொழி கிடையாது. நாடு கிடையாது. நம் ஒவ்வொருவரையும் இன்னொருவரோடு இணைக்கத் துடிக்கிறது அது. இணைத்து முடித்த பிறகு அந்த இன்னொருவரோடு வேறொருவரை அது இணைக்கத் தொடங்குகிறது.

இப்படியே இணைத்துக்கொண்டே போனால் ஒருநாள் ஒட்டுமொத்த மனிதகுலமும் ஓர் இழைக்குள் திரண்டு வந்துவிடும் என்று அது திடமாக நம்புகிறது. நம் ஒவ்வொருவர் மீதும் அளவற்ற நம்பிக்கையை வளர்த்து வைத்திருக்கிறது அன்பின் இழை. எத்தனை முறை விலகினாலும், எத்தனை முறை களைந்தாலும் மீண்டும் மீண்டும் வந்து நம்மை நிறைத்துவிட்டுப் போகிறது அது. நான் உங்களிடமிருந்து ஒரு நொடி விலகினால் என்னிடமுள்ள இழை அறுபட்டுவிடும். நான் எத்தனைமுறை வேண்டுமானாலும் தோல்வியுறலாம். என்னிடமுள்ள இழை ஒருமுறைகூடத் தோற்கக் கூடாது. அதை நாம் அனுமதிக்கவும் கூடாது.’’

சொற்கள் ஏதுமின்றிக் கலங்கி நின்ற இளைஞனின் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் காந்தி. ‘‘என் மக்கள் அனைவரும் இங்கிருந்து விலகி இமயமலையில் குடியேறும்போது, நானும் அவர்களுடன் கலந்துசெல்வேன். அதுவரை அவர்களே விலக்கினாலும் அவர்களைவிட்டு விலக மாட்டேன்.’’

கட்டுரையாளர்,
எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhanv@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x