Published : 02 Oct 2019 12:47 PM
Last Updated : 02 Oct 2019 12:47 PM

டிங்குவிடம் கேளுங்கள்: உபரி நீர் என்றால் என்ன?

நெருப்பு எரிய ஆக்சிஜன் தேவை. சூரியன் மட்டும் எப்படி எரிந்துகொண்டிருக்கிறது, டிங்கு?

- பா. நவீன், 8-ம் வகுப்பு, குப்புசாமி சாத்ராலயா இலவச மாணவர் விடுதி, போளூர்; அனிஷ் சங்கர், 8-ம் வகுப்பு, கமலாவதி மேல்நிலைப் பள்ளி, சாகுபுரம், தூத்துக்குடி; அக்‌ஷிகா, 4-ம் வகுப்பு, இந்து வித்யாலயா, வெட்டுண்ணிமடம், நாகர்கோவில்.

என்ன இது, இவ்வளவு பேருக்கு இந்தச் சந்தேகம் வந்துவிட்டது! காகிதம், விறகு, துணி எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. தீ என்பது சாதாரண வேதிவினை. ஆனால், சூரியன் இவற்றைப்போல் எரியவில்லை. சூரியன் நெருப்பால் ஆனது அல்ல. சூரியனில் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களே பெருமளவில் இருக்கின்றன. சூரியனில் நடைபெறும் அணுக்கரு பிணைப்பின் மூலம் வெப்பமும் ஒளியும் உருவாகின்றன. அதனால் இங்கே ஆக்சிஜனின் தேவை இல்லை. சூரியனில் அணுக்கரு பிணைப்பு மூலம் ஹைட்ரஜன், ஹீலியமாக மாறும்போது அதிக அளவில் ஆற்றல் உருவாகிறது நவீன், அனிஷ் சங்கர், அக்‌ஷிதா.

சமீபத்தில் உன்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன, டிங்கு?

- ஆர். ஹரிஹரன், 8-ம் வகுப்பு,
எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி.

சமீபத்தில் என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியவர்கள் இருவர். இருவருமே மாணவியர். ஒருவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது கிரெட்டா துன்பர்க். பருவநிலை மாற்றம் தொடர்பாகப் பள்ளியில் போராட்டத்தைத் தொடங்கி, உலகின் பல நாடுகளிலும் மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறார். உலகத் தலைவர்களைச் சந்திக்கிறார். சிறிதும் அச்சம் இன்றி உரையாடுகிறார். ’பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை உங்களால் எடுக்க முடியவில்லை என்றால் ஒதுங்கிக்கொள்ளுங்கள், மாணவர்களான நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்கிறார். தான் கொண்டுள்ள கொள்கைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கிறார்.

இன்னொருவர் நதியா. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மருதவனம் கிராமத்தைச் சேர்ந்தவர். தன் தந்தை மது பழக்கத்தால் தாயிடம் தகராறு செய்துவந்ததால், 8 மாதங்களாகப் பேசாமல் இருந்தார். மகள் பேசாதது தந்தையைக் கஷ்டப்படுத்தியது. என்ன செய்தால் பேசுவாய் என்று கேட்டிருக்கிறார். ‘எங்கள் பள்ளிக்குப் பின்புறம் உள்ள குளத்தைச் சுத்தம் செய்து தர வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்.

அவரும் இனி மது பழக்கத்தைக் கைவிடுவதாகச் சொன்னதோடு, குளத்தையும் சுத்தம் செய்து கொடுத்திருக்கிறார். நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆசிரியர்கள் மூலம் வளர்த்துக்கொண்டதாகச் சொல்லும் நதியா, அப்பா தன்னிடம் கேட்டதும் குளத்தைச் சுத்தம் செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகச் சொல்கிறார். 13 வயதில் தனக்காக எதுவும் கேட்காமல், பொது நலனில் அக்கறை காட்டி வரும் நதியாவும் கிரெட்டா துன்பர்க்கும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள், ஹரிஹரன்.

சூரியன் மறைந்துவிட்டால் செடி, மரங்களில் உள்ள பூக்கள், காய்கள், கனிகளைப் பறிக்கக் கூடாது என்று சொல்கிறார்களே, ஏன் டிங்கு?

- ஜே.எம்.ஆ. ரிபா நபிஹா, அவர் லேடி
மேல்நிலைப் பள்ளி, பிராட்வே, சென்னை.

இரவில் வண்டுகளும் பூச்சிகளும் பூக்களில் தேன் குடிக்க வரலாம். மரங்களில் பறவைகள் ஓய்வெடுக்கலாம். புதர்களில் இருக்கும் பாம்புகள் உணவு தேடி வெளியே வரலாம். என்னதான் விளக்கு வெளிச்சம் இருந்தாலும் பகல் வெளிச்சம்போல் இருக்காது அல்லவா? பூச்சிக்கடி, பாம்புக்கடி போன்றவற்றால் நமக்குப் பிரச்சினை வராமல் இருக்கவும் நம்மால் அவற்றுக்குப் பிரச்சினை வராமல் இருக்கவும் சூரியன் மறைந்துவிட்டால் பறிக்கக் கூடாது என்று சொல்லியிருப்பார்கள், ரிபா நபிஹா.

உபரி நீர் திறந்து விடப்பட்டது என்கிறார்களே, உபரி நீர் என்றால் என்ன? அது எங்கிருந்து வருகிறது, டிங்கு?

- அ. பிரியதர்சினி, 8-ம் வகுப்பு,
சேதுலெட்குமிபாய் பெண்கள் அரசு
உயர்நிலைப் பள்ளி, ராசாக்கமங்கலம், குமரி.

‘உபரி’ என்றாலே தேவைக்குப் போக அதிகமான என்று பொருள். ஒவ்வோர் ஆண்டும் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு குறிப்பிட்ட அளவு நீரை, காவிரியிலிருந்து திறந்துவிட வேண்டும். ஆனால், தங்களுக்கே நீர் இல்லை என்று கூறி கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாமல் இருப்பதால் பிரச்சினை வருகிறது. கர்நாடகத்தில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும்போது, அங்குள்ள அணைகள் எல்லாம் நிரம்பிவிடுகின்றன.

அளவுக்கு அதிகமான தண்ணீர் வரத்தால் அணை உடையும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, கர்நாடகம் தன் தேவைக்குப் போக அதிகமான ’உபரி’ நீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடுகிறது. அதாவது சட்டப்படி வழங்க வேண்டிய நீராக இல்லாமல், வெள்ளப் பாதிப்பு வராமல் இருப்பதற்காகத் திறந்துவிடப்படும் நீர்தான் இந்த உபரி நீர், பிரியதர்சினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x