Published : 02 Oct 2019 12:47 PM
Last Updated : 02 Oct 2019 12:47 PM

இந்தப் பாடம் இனிக்கும் 14:  இவை நம் கலைகள்

ஆதி

தோல் பாவைக்கூத்து

தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளியில் வெள்ளைத் திரைச்சீலையில் பொருத்தி, இயக்கிப் பேசிக் கலையாக நிகழ்த்துவது தோல்பாவைக் கூத்து. தோலில் கதாபாத்திரத்துக்குத் தேவையான பாவைகளை (பொம்மைகள்) உருவாக்கி, நிறம் கொடுத்து, விளக்கொளியின் பின்னணியில் (முற்காலத்தில் அகல் விளக்குகள், தற்போது போகஸ்லைட்) அசைத்து நிகழ்ச்சியை நடத்துவதால் இது தோல்பாவைக் கூத்து எனப்படுகிறது. சினிமாவுக்கு முன்பே அசையக்கூடிய படங்களை திரையில் காட்டிய அரிய கலை இது.

பாவைக்கூத்து நிகழ்ச்சிகளில் முக்கியமானவர் கட்டியங்கரான்-கோமாளி, அதேபோல உச்சிக்குடும்பன், உளுவத்தலையன் ஆகிய கதாபாத்திரங்களும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். காரணம், இவர்கள் நகைச்சுவை செய்வதுதான். ராமாயணம், அரிச்சந்திரன், மயில் ராவணன் கதைகள் நிகழ்த்தப்படு கின்றன. பெரும்பாலும் ஒருவரே அனைத்துப் பாவைகளையும் இயக்கி, குரல் கொடுத்து, அடிப்படை இசையை உருவாக்குபவராக இருப்பார்.

மிமிக்ரி கலைஞர்களைத் தோற்கடிக்கும் விதத்தில் இவர்கள் கண நேரத்தில் குரலையும் பாவனையையும் மாற்றிப் பேசுவார்கள். தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜி காலத்தில் பரவலான இந்தக் கலை தமிழகத்தில் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. சென்னையில் தோல்பாவைக்கூத்து பார்க்க வேண்டுமென நினைத்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தட்சிணசித்ராவில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கலாம்.

பொம்மலாட்டம்

மரத்தால், காகிதக் கூழால் செய்யப்பட்ட பொம்மைகளை நூலால் இணைத்துத் திரைக்குப் பின்னே இருந்து ஆட்டி இயங்கச் செய்வது பொம்மலாட்டம் எனும் கதை நிகழ்வு. பொம்மையை ஆட்டி ஆட்டி நிகழ்ச்சி நடத்தப்படுவதால் பொம்மலாட்டம் எனப்பட்டது. பொம்மையை ஆட்டுபவர் திரைக்குப் பின்னால் இருந்து பொம்மைகளை நூலால் இயக்குவார்.

பொதுவாக எடை குறைந்த கல்யாண முருங்கை மரங்களிலேயே பொம்மலாட்ட பொம்மைகள் செய்யப்படுகின்றன. அரிச்சந்திரன், நந்தனார் கதைகள் முன்பு அதிகம் நிகழ்த்தப்பட்டன. பரம்பரை நாடகங்கள், பெரிய எழுத்துப் புத்தகங்களிலிருந்து பழைய பொம்மலாட்ட நிகழ்ச்சிகளுக்கான கதைகள் உருவாக்கப்பட்டன. கும்பகோணம், மயிலாடுதுறை, சேலம் ஆகிய மாவட்டங்களில் பொம்மலாட்டம் நிகழ்த்துபவர்கள் அதிகம் இருந்தார்கள்.

இன்றைக்கு பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் கோயில்களில் நடத்தப்பட்ட நிலை மாறி, குழந்தை களுக்கான நிகழ்ச்சியாகப் பெருமளவு சுருங்கிவிட்டது. தோல்பாவைக் கூத்தைப் போல இந்தக் கலை அழியும் நிலைக்குச் செல்லாவிட்டாலும், சமீபத்திய ஆண்டுகளில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இல்லை என்பது நிதர்சனம்.

ஸ்பெஷல் நாடகம்

தமிழ் நாடகக் கலைக்கு நெடிய வரலாறு உண்டு. சிலப்பதிகாரத்தில் ‘அரங்கேற்று காதை’ என்று நாடகத்துக்கென தனி பகுதியே உண்டு. தமிழ் நாடக வரலாற்றில் கடந்த நூற்றாண்டில் தோன்றிய நாடக வடிவம் ஸ்பெஷல் நாடகம். சங்கரதாஸ் சுவாமிகள் நடத்திய குழு உள்ளிட்ட சில முன்னணிக் குழுக்களால் நாடகக் கலை புத்துயிர் பெற்றது. இந்தக் குழுக்களில் பயிற்சி பெற்றவர்களே ஸ்பெஷல் நாடக வடிவத்தை உருவாக்கினார்கள்.

ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு அவர்கள் நிகழ்த்தக்கூடிய எல்லா நாடகங்களும் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாடகத்தில் நடிக்க முடியும். பாடுவதும் இந்த நாடகங்களில் முக்கியமான அம்சம்.

கிராமக் கோயில் திருவிழாக்களில் இந்த நாடகங்கள் முன்பு பெருமளவு நிகழ்த்தப்பட்டன. வள்ளி திருமணம், அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி போன்ற கதைகள் அதிகம் நிகழ்த்தப்பட்டன. விடுதலைப் போராட்டக் காலத்தில் எஸ்.எஸ். விஸ்வநாததாஸ், மதுரகவி பாஸ்கரதாஸ் போன்றோர் நாடகங்களில் தேசபக்திப் பாடல்களைப் பாடி எழுச்சி ஊட்டினார்கள்.

தெருக்கூத்து

வட மாவட்ட மக்களின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதது தெருக்கூத்து. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் இணைந்த கலை இது. தென்ஆர்க்காடு, வடஆர்க்காடு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இது நிகழ்த்தப்படுகிறது. பங்குனி முதல் புரட்டாசி வரையிலான காலத்தில் தெருக்கூத்து நிகழ்த்தப்படும். தெருக்கூத்துக் குழு ஜமா எனப்படுகிறது. குழுவுக்குப் பயிற்சியளித்துத் தலைமை வகிப்பவர் வாத்தியார்.

தோள்களில் பெரிய புஜக்கட்டைகள், கிரீடம், மார்புப் பட்டை, கன்னக் கதுப்பு ஆகியவற்றை அணிந்து கூத்தாடுவது கட்டை கட்டி ஆடுவது எனப்படுகிறது. இடுப்பைப் பெரிதாகக் காட்ட சேலைகளை இடுப்பைச் சுற்றிக் கட்டியிருப்பார்கள். கூத்தாடும் கலைஞர்கள் பாடுவது முக்கியமானது. அத்துடன் வசனம் மூலமாகவும் கதையை நகர்த்திச் செல்வார்கள். பாரத விழா, திரௌபதி அம்மன் கோயில் விழாக்களில் தெருக்கூத்து முக்கிய இடம்பெறுகிறது. மகாபாரதத்தில் வரும் பல சம்பவங்கள் கூத்துகளுக்கு அடிப்படைக் கதைகளாக அமைந்துள்ளன.

தெருக்கூத்தில் முக்கிய கதாபாத்திரம் கட்டியக்காரன். இவர் பல்வேறு சிறு கதாபாத்திரங்களில் மாறி மாறித் தோன்றுவார். பார்வையாளர்களுக்குக் கதையை புரிய வைப்பார். நகைச்சுவையும் செய்வார். அரசியல், சமூக நிகழ்வுகளை விமர்சனமும் செய்வார். தெருக்கூத்து முறையைப் பின்பற்றியே சங்கரதாஸ் சுவாமிகள் தமரு என்ற நாடக வடிவத்தை உருவாக்கினார். அதுவே பிற்காலத்தில் ஸ்பெஷல் நாடகமாக உருமாறியது.

இந்த வாரம்:

பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘நிலா முற்றம்’ என்ற இயலின்கீழ் ‘நிகழ்கலை’ என்ற உரைநடை உலகம்
பகுதி.

நன்றி: தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம், அ.கா. பெருமாள், நா. ராமச்சந்திரன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வெளியீடு
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x