Published : 01 Oct 2019 10:50 AM
Last Updated : 01 Oct 2019 10:50 AM

கரும்பலகைக்கு அப்பால்: கற்பித்தலில் மலர்தல்

ரெ.சிவா

“ஐயா, இன்னைக்கு ஏதாவது கலந்துரையாடலாமா?” ஒன்பதாம் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஒரு குரல் வரவேற்றது. முதலில் எழும் குரலைப் பின்பற்றுவதுதானே வாடிக்கை! பலரும் அதையே கூறினர்.
வாரத்துக்குச் சில பாடவேளைகள் விவாதம் அல்லது கலந்துரை யாடலாக ஆகிவிடும். அதன் பின்வரும் பாடவேளைகளில் மாணவர்கள் புத்துணர்வோடு இருப்பார்கள். “விவாதமா இல்லை கலந்துரையாடலா?” என்று கேட்டேன். கலந்துரை யாடலே இருக்கட்டும் என்று பலரும் சொன்னார்கள்.
தலைப்பை மாணவர்களே பரிந்துரைக்கச் சொன்னேன். சொல்லப்பட்ட பல்வேறு தலைப்பு களுள் ‘ஆசிரியர்’ என்ற தலைப்பு குறித்துக் கலந்துரையாடலாம் என்று தோன்றியது.

இனி நீங்கள்!

”தம்பிகளா, ஆசிரியர் என்ற தலைப்பு குறித்து இப்போது கலந்துரையாடலாம்” என்று சொல்லிக்கொண்டே கரும்பலகையில் ஆசிரியர் என்று எழுதினேன். “ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று மனதில் தோன்றியதைப் பகிர்ந்துகொள்ளுங்கள். தனிப்பட்ட ஆசிரியர்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டாம். ஆசிரியர் இப்படி இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று யோசிங்க” என்றேன்.
தலைப்பு குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மனதுள் ஓர் எண்ணம் எழுந்தது. “தம்பிகளா, இதுவரை கலந்துரையாடல், விவாதங்களை நானே ஒழுங்கு செய்துகொண்டி ருக்கிறேன். இனி நீங்களே செய்யலாம். இன்றைய கலந்துரையாடலை நடத்த யார் வருகிறீர்கள்?” என்று கேட்டேன். உடனே நான் என்று எழுந்த மாணவரை முன்னே அழைத்தேன்.

“தம்பிகளா, அடிப்படை விதிகளை நினைவில் வையுங்கள். வாயை மூடினால் மூளை திறக்கும். ஏதேனும் சொல்ல விரும்புபவர்கள் கையை உயர்த்துங்கள்” என்று சொல்லிவிட்டு சாக்பீசை அந்த மாணவரிடம் கொடுத்தேன். கையை உயர்த்தியபடியே ‘நான் நான்’ என்ற குரலும், சிரிப்பும், எழுந்து ‘இங்கே இங்கே’ என்ற சத்தமும் தங்களுக்குள் சொல்லிச் சிரித்துக்கொள்ளும் ஓசைகளும் வகுப்பறையைக் கலகலப்பாக்கத் தொடங்கின.

ஆசிரியர்-மாணவர் பண்பு

தனது நண்பர்கள் சொல்வதை எழுதிக்கொண்டே சத்தம் அதிகமாகும்போதெல்லாம் ‘கை தூக்குங்க, நான் கேட்பேன்’ என்று சொல்லி ஒருங்கிணைப்பாளர் மும்முரமாக இயங்கினார். உதாரணமாக இருக்க வேண்டும், வழி நடத்த வேண்டும், மகிழ்ச்சியா, நட்பா, நம்பிக்கையா இருக்கணும், எல்லோருக்கும் சம உரிமை தரணும், எங்களைப் புரிஞ்சுக்கணும், பிரச்சினை என்றால் நல்ல தீர்வு சொல்லணும், சந்தேகப்படக் கூடாது, மற்ற மாணவர்கள் முன்னாடி அவமானப்படுத்தக் கூடாது, விடைத்தாள் கொடுக்கும்போது அடிக்கவோ திட்டவோ கூடாது, விளையாட விடணும் போன்ற பல்வேறு எண்ணங்களை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர். “தம்பிகளா, ஆசிரியர் குறித்து நீங்க நிறைய செய்திகளைச் சொல்லியிருக்கீங்க. மகிழ்ச்சி. இப்போ மாணவர்கள் குறித்துச் சொல்லுங்க” என்றேன். இதை நெறிப்படுத்த வேறு ஆளை அழைக்கலாம் என்ற மாணவர்களின் ஆசைப்படி நெறியாளர் மாறினார்.

அன்பாகவும், தன்னம்பிக்கை யோடும், ஒழுக்கமாகவும், மரியாதையாகவும் நடந்துகொள்ள வேண்டும். பொறாமைப்படக் கூடாது. கிண்டல், கேலி செய்யக்கூடாது. கெட்ட வார்த்தை பேசக்கூடாது. பொய், திருட்டுக் கூடாது. சண்டை போடக்கூடாது. உற்சாகமா இருக்கணும். தினமும் பள்ளிக்கு வரணும். கூட இருந்தே குழி பறிக்கக் கூடாது. உதவி செய்யணும். நட்பா பழகணும் என்பவை போன்ற பல்வேறு குணங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
”தம்பிகளா, இன்று நிறைய செய்திகளைப் பகிர்ந்திருக் கீங்க. மகிழ்ச்சி. ஆசிரியர் எப்படி இருக்கணும்னு நீங்க சொல்லியி ருப்பதை நான் பின்பற்றுகிறேனா என்று யோசிக்கிறேன். மாணவர்கள் எப்படி இருக்கணும்னு சொல்லியிருப்பவற்றை நீங்க பின்பற்றுகிறீர்களா என்று அவரவர் யோசித்துப் பாருங்கள்” என்றேன்.

பிடித்தமான ஆசிரியர்

மறுநாள் ‘குறு’ என்ற குறும்படத்தைத் திரையிட்டேன். ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒரு மாணவனுக்கு எவ்வாறு கற்பிக்கிறார் என்பது குறித்த படம். படம் முடிந்ததுமே ‘சாரும் சேர்ந்து விளையாடுவது சூப்பர்!’ என்று பல குரல்கள் மகிழ்ச்சியாக எழுந்தன. அவனுக்குப் பிடிச்ச மாதிரி சார் சொல்லித் தர்றது பிடிச்சிருக்கு என்றார் ஒரு மாணவர்.
தம்பிகளா! ஆசிரியர்களைப் பற்றி உங்களைப் பற்றி நிறைய கலந்துரையாடிவிட்டோம்.

நாளை வரும்போது இதுவரை படித்த வகுப்புகளில் உனக்கும் ஆசிரியருக்கும் இடையே நிகழ்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வை நாட்குறிப்பில் எழுதி வாருங்கள் என்றேன். கல்வியில் மாணவர்களை மலரச் செய்ய வேண்டும் என்றால் ஆசிரியர் கற்பித்தலில் மலர வேண்டும். குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். அவர்களுக்கு ஏற்ற கற்பித்தல் முறையைக் கண்டறியும்போதே ஆசிரியர் மலர்கிறார்.

(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்.

படத்தின் பெயர் : குரு
நேரம் : 6.13 நிமிடங்கள்
Youtube link :

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x