

ஜெ.கு.லிஸ்பன் குமார்
மத்திய அரசின் நபார்டு வங்கியில் (தேசிய வேளாண் - ஊரக வளர்ச்சி வங்கி) உதவியாளர் (Development Assistant) பதவியில் 82 காலிப்பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.
இப்பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி
எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் என்றால் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு 18 முதல் 35 வரை. இருப்பினும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வுமுறை
எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் முதல்நிலை, முதன்மை (மெயின்) என இரண்டு தேர்வுகள் இடம்பெறும். இரண்டு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் பொது ஆங்கிலம், அடிப்படைக் கணிதத் திறன், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 கேள்விகளை அப்ஜெக்டிவ் முறையில் கேட்பார்கள். தேர்வு நேரம் 1 மணி. மொத்த மதிப்பெண் 100. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்குத் தகுதிபெறுவர்.
இதில், ரீசனிங், அடிப்படைக் கணிதம், வங்கி, வேளாண்மை, ஊரக வளர்ச்சி தொடர்பான பொது அறிவு, அடிப்படைக் கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 150. இதோடு கூடுதலாக 50 மதிப்பெண்ணுக்கு ஆங்கிலத்தில் விரிவாக விடையளிக்கும் தேர்வும் உண்டு. முதல் தேர்வு பகுதியை ஒன்றரை மணி நேரத்திலும், இரண்டாம் பகுதியை அரை மணி நேரத்திலும் முடிக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 20-ம் தேதி நடைபெறுகிறது. முதன்மைத் தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
வளர்ச்சி உதவியாளர் பதவியில் சேருவோருக்குத் தொடக்க நிலையிலேயே ரூ.32 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும். அதோடு பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அதிகம். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்ட பட்டதாரிகள் நபார்டு வங்கியின் இணையதளத்தைப் (www.nabard.org) பயன்படுத்தி அக்டோபர் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை நபார்டு வங்கியின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.