Published : 01 Oct 2019 10:00 AM
Last Updated : 01 Oct 2019 10:00 AM

இளம் தலைவர்களை உருவாக்கும் திட்டங்கள்!

சாதனா

வழக்கமான கல்வி, பணியைத் தவிரப் புதுமையானவற்றை முயன்று பார்க்கும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? விரும்பிய துறையாக இருந்தும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அதில் தடம் பதிக்க முடியாமல் தவிப்பவரா நீங்கள்? கிடைத்ததைப் படித்தோம், ஏதோ ஒரு வேலை செய்தோம் என்றில்லாமல் தலைவராக உருவெடுக்கத் துடிப்பவரா நீங்கள்? அப்படியானால், உங்களுடைய தேடுதலுக்கு ஊக்கமும் உதவியும் அளிக்கும் பல கல்வித் திட்டங்கள் இந்தியாவில் இருக்கவே செய்கின்றன.

புதிய இளம் இந்தியர்களே!

சிறந்த தலைமைப் பண்பும் அறிவாற்றலும் மிக்க இளைஞர்கள் பலர் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான தளம் கிடைக்கக் காத்திருக்கிறார்கள். அத்தகைய இளைஞர்களுக்குக் கட்டுப்பாடுகள் நிறைந்த கல்வி அமைப்புக்கு அப்பால் பரந்து விரிந்திருக்கும் கல்விப் புலத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் ‘யங் இந்தியா ஃபெலோஷிப்’ (ashoka.edu.in/YIF). டெல்லியைச் சேர்ந்த அசோகா பல்கலைக்கழகம் இத்திட்டத்தை 2011-ல் தொடங்கியது.

ஓராண்டு முதுநிலைப் பட்டயப் படிப்பான இதற்கு ஆண்டுதோறும் துடிப்புமிக்க 300 இளைஞர்கள் நாடு முழுவதிலும் இருந்து சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். விமர்சனப் பார்வையோடும் நுண்ணறிவோடும் தொடர்பாற்றல் திறனோடும் தன்னம்பிக்கையோடும் மிளிரக்கூடிய தலைவர்களாக அவர்கள் செதுக்கப்படுகிறார்கள். பொறியியல், கலைப் படிப்புகள், வணிகப் படிப்புகள் என எந்தப் பிரிவிலும் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சிறந்த கல்வியுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

காந்தியப் பாதையில்

கிராமப்புறங்களைப் புறந்தள்ளிவிட்டு நகரங்களை நோக்கி ஓடுவதுதான் வளர்ச்சி என்று பொதுவில் நம்பப்படுகிறது. ஆனால், கிராமங்களை உயிர்ப்புடன் பாதுகாக்கத் துடிப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பலப்படுத்தவே செயல்பட்டுவருகிறது ‘காந்தி ஃபெலோஷிப் புரோகிராம்’ (gandhifellowship.org/).
கிராமப்புறப் பள்ளிகளின் நிலையை மேம்படுத்தத் தேவையான உதவிகளை இத்திட்டம் வழங்கிவருகிறது. இதில் பங்கேற்கும் இளம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையுடன் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

சட்டமன்ற உதவியாளர் ஆகலாம்!

இந்தியாவின் பெருமைக்குரிய ஊக்கத்தொகைத் திட்டங்களில் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சட்டமன்ற உதவியாளராகும் ‘லேம்ப்’ திட்டம் (prsindia.org/lamp). 11 மாதங்கள் கொண்ட இத்திட்டத்தின்கீழ் நாடாளுமன்ற விவகாரங்களை, சட்டதிட்டங்கள் நிறைவேற்றப்படும் முறையை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்பாக, நாட்டு நிலவரம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தகவல் சமர்ப்பிக்கும் பொறுப்பு வழங்கப்படும். 25 வயதுக்கு உட்பட்ட துடிப்புமிக்க இந்தியப் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதுபோன்று மேலும் பல சிறப்புத் திட்டங்கள் உங்களுடைய தனித்துவத்தை மென்மேலும் மெருகேற்றக் காத்திருக்கின்றன. தேடலும் துடிப்பும் இருந்தால் வழிபிறக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x