Published : 30 Sep 2019 11:26 AM
Last Updated : 30 Sep 2019 11:26 AM

வங்கித்துறையின் பிடியில் பொருளாதாரம்

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
karthikeyan.auditor@gmail.com

கடந்த சில வாரங்களாகவே “பொருளாதார மந்த நிலை” என்கிற தலைப்புதான் ஊடகங்களின் பிரதான செய்தியாகவும் விவாதமாகவும் இருந்துவருகிறது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த இரு காலாண்டுகளாக குறைந்துள்ள நிலையில், பெரும்பாலான தொழில் நிறுவனங்களும் இதன் வெப்பத்தை உணர்வதாக கூறிவருகின்றன. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் குறுந்தொழில்கள் வரை இதற்கு விதிவிலக்கல்ல.

உண்மையிலேயே இதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று துல்லியமாக அளவிட முடியாவிட்டாலும், ஊடக மற்றும் பத்திரிகைச் செய்திகள் மூலமாக பொருளாதாரச் சரிவு மக்களை சற்று கவலை அடையச் செய்திருக்கிறது. அது மெல்ல அரசுக்கு அழுத்தத்தையும், நெருக்கடியையும் உண்டாக்கியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை அடைய மக்களின் நுகர்வு அதிகரித்து உற்பத்தி பெருக வேண்டும். இதற்கு தங்கு தடையில்லாத அரசு முதலீடும், தயக்கமில்லாத தனியார் முதலீடுகளும் மிகவும் அவசியம். அதேசமயம் மக்களும் தேவையான செலவுகளைச் செய்ய அஞ்சக் கூடாது.

ஆனால், இவை எல்லாவற்றையும்விட பொருளாதாரத்தின் மிக முக்கிய அங்கம் வங்கிகள் என்றால் அது மிகையில்லை. எப்போது பொருளாதாரம் பணத்தை மையமாகக் கொண்டு தன்னை வரையறுத்துக்கொண்டதோ அப்போதே வங்கிகள் அதன் அதிகார மையமாக மாறிவிட்டன. அதனாலேயே ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் அரசைக் காட்டிலும் வங்கிகள் பிரதான இடத்தை வகிப்பதாக இருக்கின்றன.

மக்களுடைய பணத்தைப் பாதுகாப்பது முதல், இருப்பில் உள்ள பணத்தை மீண்டும் சந்தைக்குள் பாய்ச்சுவது வரையிலும் வங்கிகளுக்கு முழுமையான பங்கு இருக்கிறது. எந்தவொரு நாட்டில் வங்கிகள் சிறப்பாக இருக்கின்றனவோ அந்த நாட்டின் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். நாடு திவால் ஆகப் போகிறது எனில், அது முதலில் வங்கிகள் திவால் ஆவதன் மூலமே வெளிப்படும். இதற்கான நிகழ்கால உதாரணமாக கிரீஸ் திவால் ஆனதை கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.

தொடர்ந்து வெனிசுலா, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலும் வங்கித் துறை திவால் ஆகும் நிலைக்கு ஆளாயின. இந்திய வங்கித் துறையும் சமீப காலங்களில் பல்வேறு சிக்கல்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகிறது. வாராக்கடன், வங்கி நிதி மோசடி, வங்கிகள் இணைப்பு, வங்கி விதிமுறைகளில் மாற்றம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் அரசு பொருளாதாரத்தை ஊக்குவிக்க பல அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும், நடைமுறையில் வங்கிகளால் அவற்றை செயல்படுத்த முடியவில்லை அல்லது செயல்படுத்துவதில் தயக்கம் காட்டப்படுகிறது.

வங்கிக் கடன்களும் தொழில் வளர்ச்சியும்

இந்தியத் தொழில் வளர்ச்சியின் முதுகெலும்பாக இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகள் (SME) உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவீதமும், வேலைவாய்ப்பில் 41 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. இதனால், பெரிய தொழில் நிறுவனங்களில் ஏற்படும் சுணக்கத்தினால் உடனடியாக பாதிக்கப்படுபவர்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகள்தான். மேலும் இந்த நிறுவனங்கள் எல்லாம் வங்கிக் கடனைத்தான் மிக முக்கியமாக சார்ந்துள்ளன. சிறு தொழில் அமைப்புகளுக்கு அரசு ஏற்கெனவே பல்வேறு கடன் வசதிகளையும் சலுகைகளையும் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேக்-இன்-இந்தியா திட்டத்தின்கீழ் எந்தவித பிணைய சொத்தும் (Collateral Security) இல்லாமல் சிறு தொழில் அமைப்புகளுக்கு ரூ. 2 கோடி வரை கடனுதவி (CGTMS), ஸ்டாண்ட்-அப் திட்டத்தின் கீழ் பெண் தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடி கடனுதவி, புதிதாய் தொழில் முனைவோருக்கு முத்ரா திட்டத்தின்படி ரூ.10 லட்சம் கடனுதவி போன்ற ஏராளமான ஊக்குவிப்புகள் நடைமுறையில் உள்ளன. தவிர தற்போதுள்ள பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, நெருக்கடியில் உள்ள சிறு தொழில் அமைப்புகளுக்கு அவற்றின் கடன் பாக்கிகளை 2020 மார்ச் 31-ம் தேதி வரை வாராக்கடன்களாக அறிவிக்காமல் இருக்க வேண்டும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

வங்கிகளின் தயக்கம்

ஆனால், வங்கிகள் கடன் வழங்குவதில் பெரிதும் தயக்கம் காட்டிவருகின்றன. அதுவும் சிறு தொழில் அமைப்புகளுக்கு பிணைய சொத்து (Collateral Security) இல்லாமல் தகுதியின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய ரூ.2 கோடி வரையான கடனை வழங்குவதில் வங்கி அதிகாரிகள் மிகுந்த தயக்கம் காட்டுகின்றனர். காரணம், ஏற்கெனவே விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்களுக்கு கொடுத்த பெரிய கடன் வராமல் போனதில் வங்கியின் மேலதிகாரிகள் பலர் சிபிஐ அலுவலகத்துக்கு நடையாய் நடந்து வருவதால், பல வங்கி மேலாளர்கள் தகுதியான சிறு தொழில்களுக்கும் கடன் வழங்க அச்சப்படுகின்றனர்.

சிறு தொழில் நிறுவனங்கள் வங்கிகளிலிருந்து போதுமான கடன் கிடைக்காததால் அமைப்புசாரா தனியார் நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி தொழிலை நடத்தும் சூழ்நிலைக்கு ஆளாகின்றன. போதாத குறைக்கு இன்று வங்கிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு 12 வங்கிகளாக செயல்படப் போகின்றன என்ற அறிவிப்பால் வங்கி அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தாங்கள் எந்த வங்கிக்குச் செல்கிறோம் என்பது தெரியாததால் எந்தக் கடனையும் கொடுக்க முன்வராமல் முட்டுக்கட்டை போடுகின்றனர். இந்த வங்கி இணைப்பு நடவடிக்கை நீண்ட காலத்தில் பயன் தரக்கூடியதாக இருக்கலாம் என்றாலும், தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில் இந்த நடவடிக்கையை சற்று ஒத்திவைத்திருக்கலாம்.

ரிசர்வ் வங்கி தலையிட வேண்டிய நேரம்

பொதுவாக பொருளாதார மந்த நிலையில் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இணைந்து செயல்பட்டு பணக்கொள்கை (Monetory Policy) மற்றும் நிதிக் கொள்கை (Fiscal Policy) மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடும். தற்போது ரிசர்வ் வங்கியின் செயல்பாடு மிக முக்கியத்துவம் பெறுகின்றது. ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் செயல்படும் வங்கிகள் தேவையான கடனை உரிய நேரத்தில் தொழில் நிறுவனங்களுக்கு வழங்க ஆவண செய்தல் அவசியம்.

தவிர தொழிலமைப்புகளுக்கு நடைமுறை மூலதனக் கணக்கிடுதலில் (Working Capital) பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட முறைகளைத்தான் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அவற்றில் முக்கிய ஒன்று சிறு தொழிலமைப்புகள் அடுத்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் விற்பனையில் 20% நடைமுறை மூலதன கடனாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது ஜிஎஸ்டி அறிமுகம் செய்த பின் பெரும்பாலான நிறுவனங்கள் 18% வரியை முன்னரே செலுத்தி விடுவதால் நடைமுறை மூலதனத்தில் ஓர் அடைப்பு ஏற்படுகிறது. நடைமுறை மூலதனக் கணக்கிடுதலில் மாற்றம் கொண்டு வர, ரிசர்வ் வங்கி தலையிட வேண்டும். குறைந்தபட்சமாக அடுத்த ஆண்டின் விற்பனை எதிர்பார்ப்பில் 30% நடைமுறை மூலதனக் கடனாக வழங்க ரிசர்வ் வங்கி பரிசீலிக்கலாம். நடப்பு நிதியாண்டில் ஆட்சி அமைத்த இந்த அரசு ஜூலை மாதத்தில்தான் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

தாக்கல் செய்த நாள் முதல் தற்போது வரை நிதியமைச்சர் நான்கு முறை பிரதான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கார்ப்பரேட் வரி குறைப்பு, வங்கிகள் சீரமைப்பு, வங்கிகளை இணைத்தல், ஏற்றுமதிக்கான சலுகைகள், ஜிஎஸ்டி எளிமைப்படுத்துதல், வருமான வரித் துறையில் முகமற்ற ஆய்வு (faceless assessment) போன்ற பல்வேறு விதமான பிரதான அறிவிப்புகளை செய்துள்ளார்.

அரசின் அறிவிப்புகள் ஒருபக்கம் சந்தையை ஊக்குவிப்பதாக இருந்தாலும், வங்கிகளின் உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் பொருளாதாரம் மீள்வது என்பது நடக்காத காரியம். எனவே இந்தச் சூழ்நிலையில் வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய கடனுதவிகளில் எந்தத் தொய்வும் இருக்கக் கூடாது. குறிப்பாக சிறு தொழில் அமைப்புகளுக்கு தேவையான கடனை உரிய நேரத்தில் வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்துதல் இந்த காலகட்டத்தில் மிக அவசியமான ஒன்று. அதேசமயம், வங்கிகளின் செயல்பாடுகளில் அதிக கவனமும், நேர்மையும் அவசியம். கடன் வழங்குவதிலும், கடனைத் திருப்பி வசூலிப்பதிலும், கடன் கணக்குகளைக் கண்காணிப்பதிலும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

உரிய நேரத்தில் ஆக்சிஜன் வழங்கி, தேவையான மருந்துகளை வழங்கும் போதுதான் உயிருக்குப் போராடும் நோயாளி பிழைக்கிறார். அதுபோல தேவையான நேரத்தில் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பது மிகவும் அவசியம். அது வங்கிகளின் கடமை என்பதை ரிசர்வ் வங்கி உணர்த்தி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த ஆவண செய்தல் வேண்டும்.

அடுத்த ஆறு மாதங்கள் தொழில் நிறுவனங்களுக்கு மிக முக்கியமான காலகட்டம். இந்த காலகட்டத்தில் வங்கிச் சட்ட நுணுக்கங்களை பார்த்து வந்தால் சில நோயாளிகள் (நிறுவனங்கள்) ஐசியுவுக்குப் போய்விடுவார்கள். சரிவிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்க வங்கித் துறையின் செயல்பாடு மிகவும் அவசியமானது என்பதை வங்கிகள் முதலில் உணர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x