Published : 30 Sep 2019 11:15 AM
Last Updated : 30 Sep 2019 11:15 AM

யு டர்ன்: சரிகம - சினிமாவில் மாஃபியா

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

கிராம்கோவைக் கரையேற்றும் பல திட்டங்களை சஞ்சீவ் BIFR - முன் வைத்தார். பல திட்டங்களை நிராகரித்தார்கள். சிலவற்றை ஏற்றார்கள். அவற்றுக்கு நிதி உதவி தந்தார்கள். சஞ்சீவ் பல நகரங்களில், “மியூசிக் வேர்ல்ட்” (Music World) என்னும் பெயரில் சில்லறை விற்பனைக் கடைகள் தொடங்கினார். நோயாளி உடலில் உயிர்த் துடிப்பு ஆரம்பம். முயற்சி செய்வோருக்கு அதிர்ஷ்டமும் உதவும் என்னும் பழமொழி பலிக்கத் தொடங்கியது. கிராம்கோ இசை உரிமை பெற்ற பல படங்களும், அவற்றின் இசையும் மெகா ஹிட்.

சஞ்சீவுக்குச் சந்தோஷத்தைவிட அதிகமான சஞ்சலம். அவருக்குத் தெரியும், இந்த வெற்றிகள் அமாவாசை இரவின் மின்வெட்டு கும்மிருட்டில் தெரியும் டார்ச் லைட் வெளிச்சங்கள். கிழக்கு வெளுக்க இன்னும் நாளாகும். அதற்குள் அவரைச் சந்திக்கக் காத்திருக்கின்றன, பேயாட்டம் ஆடும் பல பூதாகாரப் பிரச்சினைகள். அவற்றுள் முக்கியமான மூன்று - தொழில்நுட்ப மாற்றம், டீ சிரீஸ் வளர்ச்சி, இசை ஒலிப்பதிவில் மாஃபியாக்களின் வரவு.

1990-களின் முற்பகுதியில் மாபெரும் தொழில்நுட்ப மாற்றம் - இசை ஒலிப்பதிவு, காசெட்களிலிருந்து, குறுந்தட்டு என்னும் CD-களுக்கு. பணப் பிரச்சினைகளால், கிராம்கோ இதில் கவனம் செலுத்த முடியவில்லை. 1992 முதல் மியூசிக் CD-க்கள் வரத் தொடங்கின. அப்போது, ஒரு CD விலை 350 ரூபாய். காசெட் விலை 30 ரூபாய். ஆகவே, CD-க்கள் விற்பனை மெதுவாகத்தான் சூடு பிடித்தது. விரைவில் ஏராளமான CD கம்பெனிகள் வந்தன. விலையைக் குறைத்தார்கள். 1998 முதல் காசெட்டுகள் விற்பனையில் வீழ்ச்சி. CD விற்பனை எழுச்சி. முக்கிய போட்டியாளர்களான டீ சீரீஸ் CD-க்களிலும் முதல் இடத்தைப் பிடித்துவிட்டார்கள்.

காசெட், CD, சினிமா தயாரிப்பு என அனைத்திலும் நம்பர் 1. இசை ரசிகர்களின் இதயத் துடிப்பை எப்படியோ சரியாகக் கணித்தார்கள். வெளியிட்ட இந்தி சினிமாப் பாடல்கள் பெரும்பாலானவை சூப்பர் ஹிட். அவர்கள் விற்பனை வருடா வருடம் எகிறியது.
1985 - 20 கோடி.
1991 - 200 கோடி
இதைக் கொண்டாட முடியாமல், டீ சீரீஸைத் தாக்கியது ஒரு பேரிடி. ஆகஸ்ட் 12, 1997. குல்ஷன் குமார் தீவிர சிவ பக்தர். மும்பையின் ஜுஹூ பகுதியில் இருக்கும் சிவன் கோவிலுக்குப் போய்ப் பூஜைகள் முடித்து வெளியே வந்தார். அவருடைய துப்பாக்கி ஏந்திய தனிப் பாதுகாப்பாளார் ஏனோ, அன்று உடன் வரவில்லை. குல்ஷன் காரில் ஏறும் முன் வழி மறித்தார் ஒருவர். குல்ஷன் நெற்றியில் பாய்ச்சினார் குண்டு. கீழே சரிந்தார் குல்ஷன். சுட்டவரோடு வந்தவர்களின் துப்பாக்கிகள் டுமீல், டுமீல், டுமீல். 16 குண்டுகள் குல்ஷன் உடலைத் துளைத்தன. இந்தி சினிமா உலகின் ஒலிப்பதிவு சாம்ராட் படுகொலை. போலீஸ் சந்தேகம் பலர் மேல்.

இந்தி சினிமாவின் அப்போதைய முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்தார்கள் நதீம் - ஷ்ராவண் என்னும் இரட்டையர்கள். இவர்கள் இசையமைத்த ஆஷிக்கி, ஸாஜன், தில் ஹை கி மன்த்தா நஹீன், சதக், தில்வாலே, ராஜா ஹிந்துஸ்தானி, ஃபூல் அவுர் காந்த்தே, தீவானா, பர்தேஷ் அத்தனையும் தொடர் சூப்பர் ஹிட். இந்த வெற்றிக்கு இருவரின் இசை வல்லமையோடு, குல்ஷனின் மார்க்கெட்டிங் திறமையும் முக்கிய காரணம். பல வருடங்களாகக் குல்ஷனின் செல்லப் பிள்ளைகளாக இருந்தார்கள். திடீரென உறவில் விரிசல். இதனால், நதீம் அகில உலக தாதா தாவூத் இப்ராஹிமிடம் பேசி, கூலிப்படையை ஏவினார் என்று ஒரு சந்தேகப் பாதை. இன்னொரு சந்தேகப் பாதையும், தாவூத் மீதுதான். 10 கோடி தருமாறு குல்ஷனை மிரட்டியதாகவும், மறுத்ததால், தீர்த்துக் கட்டியதாகவும்.

* விசாரணையில், நீதிமன்றம் நதீமை விடுதலை செய்தது. அவர் இப்போது லண்டனில் வசித்து வருகிறார். இசை உலகுக்கும் இந்தியாவுக்கும் திரும்பும் திட்டங்கள் மனதில். தாவூதின் கையாள், அப்துல் ராஃப் (Abdul Rauf) - க்கு ஆயுள் தண்டனை. மும்பைச் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான். இசை ஒலிப்பதிவு உலகில் தீவிரவாத கும்பல் வருகை தவிர்க்க முடியாத நிஜம். கிராம்கோவின் பாதையிலும் அவர்கள் குறுக்கிடலாம்.

அவர்களுக்கு இணங்கக் கூடாது. அதே சமயம், பகைத்துக்கொள்ளவும் கூடாது. கத்திமுனை மேல் பயணம். குல்ஷன் மறைந்தவுடன், 19 வயது மகன் பூஷன் குமார் கைகளில் கடிவாளம். இளங்கன்று என்ன செய்யும் என்று அவநம்பிக்கையோடு இருந்தவர்களுக்குப் பிரமிப்பு. அப்பா எட்டடி பாய்ந்திருந்தார். மகன் பதினாறு அடி. 1997-ல் டீ சீரீஸ் விற்பனை ரூ.500 கோடி. 1999-ல் ரூ.600 கோடி.

சஞ்சீவின் நிர்வாகத் திறமையால், 1999 கிராம்கோ லாபப் பாதைக்குத் திரும்பியது. விற்பனை ரூ.146 கோடி. லாபம் ரூ.6 கோடி. ஆனால், பூஷன் ரூ.600 கோடி விற்பனையோடு முன்னால், வெகு தூரம் முன்னால். அவர்களைத் தொட வேண்டுமானால், வேண்டும் கோடிக் கோடியாய்ப் பணம். பிப்ரவரி 2000. கம்பெனியின் 7 லட்சம் பங்குகளைப் பொதுமக்களுக்கு வழங்க சஞ்சீவ் முடிவெடுத்தார். 10 ரூபாய் பங்குகள் 1,785 ரூபாய்க்கு. அமோக வரவேற்பு. கம்பெனி கைகளில் 125 கோடி ரூபாய். துணிச்சலோடு முன்னேற்றத் திட்டங்களில் இறங்கினார். முதல காரியமாக, கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிட்டெட் என்னும் பெயரை சரிகம இந்தியா லிமிட்டெட் என்று மாற்றினார். நாங்கள் இந்திய இசையின் காவலர்கள் என்னும் அறிவிப்பு. மாற்றம் பெயரில் மட்டுமல்ல, அணுகு முறையில், வித்தியாசம் காட்டுவதில், என்று நிரூபித்தன அடுத்து வந்த செயல்பாடுகள்.

லாபம் பார்க்க ஒரு நிறுவனம் என்ன செய்ய வேண்டும்? செலவைக் குறைத்து, வருமானத்தை அதிகமாக்க வேண்டும். முதலில் செலவுக் குறைப்பு. பிரபல தயாரிப்பாளர்களின் சினிமாக்களின் இசை ஒலிப்பதிவு உரிமையை மட்டுமே வாங்குவது என்று சஞ்சீவ் முடிவெடுத்தார். பாரம்பரியப்படி, பேரம் பேசி தொகையை முடிவு செய்யும் முறை இருந்தது. சஞ்சீவ் இதை மாற்றினார். தயாரிப்பாளர்களோடு பேசி, விற்கும் ஒவ்வொரு CD-க்கும் ராயல்டி தரும் முறைக்கு மாறினார். சரிகம, ஏராளமான ஊடகங்களில் விளம்பரம் செய்துகொண்டிருந்தார்கள். இவற்றுள், பலன் தராதவற்றை சஞ்சீவ் வெட்டினார். 56 சதவிகிதச் செலவு மிச்சம். இதேபோல், பேக்கிங் போன்ற செலவுகளில் 10 சதவிகித மிச்சம். விருப்ப ஓய்வு அறிவித்தார்கள். பல நூறு ஊழியர்கள் சம்பளம் மிச்சம்.

வருமானத்தை அதிகமாக்க, முக்கியத் தடைக்கல்லாக இருந்தது, ``பைரஸி.” அதாவது, காப்புரிமை இல்லாதவர்கள் பாடல்களை அனுமதி பெறாமல் ஒலிப்பதிவு செய்து விற்பது. இசை உலகில் பாடல்கள் CD-க்களின் காப்பி எடுப்பது மிக மிக சுலபம். அதிக மூலதனமும் தேவையில்லை. தெருவுக்குத் தெரு காப்பி எடுப்பவர்கள் வந்தார்கள். ஒரிஜினல் CD 120 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தது. இவர்கள் திருட்டு CD-ஐ 30 ரூபாய்க்குத் தந்தார்கள். போலீசில் புகார் கொடுத்தால், போகாத ஊருக்கு வழி. இதை எப்படி எதிர்கொள்ளலாம் என்று சஞ்சீவ் ஆலோசித்தார். 2000–ம் ஆண்டில் வந்தது ஒரு புதுமைத் திட்டம். அது என்ன திட்டம்? அப்படி என்ன புதுமை?

(புதிய பாதை போடுவோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x