Published : 30 Sep 2019 10:44 AM
Last Updated : 30 Sep 2019 10:44 AM

எண்ணித் துணிக: பார்ட்னர்கள் பலவிதம்!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

ஸ்டார்ட் அப் தொடங்க ஐடியா ரெடி, தொழிலுக்கு பார்ட்னர் வைத்துக்கொள்வதா வேண்டாமா என்று குழம்புபவர் கவனத்துக்கு. இக்கேள்விக்கு மந்திர விடை இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். மனைவியை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள் என்று நினைவிருக்கிறதா? அவளை ஏன் சார் ஞாபகப்படுத்தித் தொலைக்கிறீர்கள் என்று ஒரு வேளை நீங்கள் கேட்டால் இவ்வார கட்டுரை உங்களுக்குத்தான்! வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் எத்தனை கவனம் தேவையோ, அத்தனைக்கும் குறைவில்லாதது வியாபார துணையைத் தேர்ந்தெடுப்பதும்.

சற்று அவசரப்பட்டு, பிசகி, உணர்ச்சிவசப்பட்டு தேர்ந்தெடுத்தால் வில்லங்கம், வயித்தெறிச்சல் உத்திரவாதம். ஒத்துவராத மனைவி வாய்த்தால் வாழ்க்கை கசக்கும். ஒத்துழைக்காத பார்ட்னர் இருந்தால் வியாபாரம் வழுக்கும். முதல் முறை தொழில் தொடங்கப் போகிறேன், கூட ஒத்தாசைக்கு ஒருவர் இருந்தால் தேவலை என்பதற்காக பார்ட்னர் தேடாதீர்கள். அது தப்பாட்டம். இதை சொல்லும் போது திருமணம் பற்றிய ஆங்கில வாசகம் ஒன்று நினைவிற்கு வருகிறது: ஒரு புத்தகம் படிப்பதற்கு நூலகத்தையே வாங்கவேண்டுமா!

எதற்கு பார்ட்னர் வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பதை ஆழமாக சிந்தியுங்கள். பேச்சு துணைக்கு அல்லது புது முயற்சி என்பதால் எதற்கும் இருக்கட்டும் போன்ற காரணங்களுக்காக பார்ட்னர் தேடுவது பாவம். அனு பவமில்லாமல் ஸ்டார்ட் அப் தொழில் தொடங்கி அவஸ்தைப்படுவதை விட, தவறான காரணத்துக்கு பார்ட்னர் வைத்து பட்டுக்கொண்டவர்கள்தான் ஏராளம்.

எப்பேர்ப்பட்ட தொழில், அதற்கு தேவையான திறன் உங்களிடம் இருக்கிறதா, பணியாட்கள் மட்டும் வைத்துக்கொண்டால் கூட போதாது என்று நினைக்கிறீர்களா, முடிவெடுத்து முட்டுக்கொடுக்க மேலும் சில கைகள் தேவையா போன்றவற்றை விலாவாரியாக சிந்தியுங்கள். உங்கள் ஸ்டார்ட் அப்புக்கு அத்தியாவசியம் அந்ததிறன்கள் எனில், அது உங்களிடம் இல்லாத பட்சத்தில் அது அபரிமிதமாக இருப்பவரை பார்ட்னராக தேர்ந்
தெடுப்பது பயன் தரும்.

சமயங்களில் ஸ்டார்ட் அப்புக்குத் தேவையான சில திறன்கள் தொழில் தொடங்கும் போது மட்டுமே அதிகம் தேவைப்படலாம். போகப்போக அந்த திறன்கள் தேவைப்படாமலோ அல்லது அதன் தாக்கம் பெரியதாக இல்லா மலோ போகலாம். அதுபோன்ற நிலைகளில் அந்தத் திறன் இருக்கும் ஒருவரை பார்ட்னராக சேர்க்காமல் பணியாளராகவோ அல்லது ஆலோசகராகவோ நியமிப்பது உசிதம். தேவை குறையும் நேரத்தில் கழட்டிவிட சவுகரியம். தனியாய் ஸ்டார்ட் அப் தொடங்கும் அளவுக்கு பணம் இல்லை என்பதற்காக மட்டுமே பார்ட்னர் தேடாதீர்கள்.

சரியான ஐடியாவும் தெளிவான பிசினஸ் பிளானும் இருந்தால் முதலீடு தர வென்சர் கேபிடல் ஃபண்ட் முதல் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் வரை இன்று ஏராளம் பேர் கையில் செக்கோடு அலைகிறார்கள். இன்று தொழில் தொடங்க பணம் ஒரு பிரச்சினையே இல்லை. பணம் மட்டுமே பார்ட்னருக்கான தகுதி என்றாகிவிட்டால் உங்கள் தொழில் பணம் பண்ணத் தொடங்கும்போது அதே பார்ட்னரின் பங்களிப்பு ஏதும் இல்லாதது உங்கள் கண்களை உறுத்தும். வாயும் சும்மா இருக்காது. எதையாவது சொல்லி வைப்பீர்கள்.

வாக்குவாதத்தில் ஆரம்பித்து கைகலப்பு வரை செல்லலாம்! லாபம் என்றதும்தான் ஞாபகத்துக்கு வருகிறது. உங்கள் ஸ்டார்ட் அப் நிறைய லாபம் ஈட்டினால் சந்தோஷமே. குறுகிய காலத்தில் உங்கள் தொழில் பங்கிட்டுக்கொள்ளும் அளவுக்கு லாபம் ஈட்டாது என்று தோன்றினால் பார்ட்னர் தேவையா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துச் செயல்படவும். உலகின் பல பிரச்சினைகளின் நதிமூலம் ரிஷிமூலம் பணம். அதனாலேயே பார்ட்னர் கண்டிப்பாய் தேவை என்னும் பட்சத்தில் அவரோடு அமர்ந்து உங்கள் ஸ்டார்ட் அப்பின் விஷன், மிஷன், குறிக்கோள் ஆகியவற்றை மனம் விட்டு பேசுங்கள். உங்கள் எண்ண ஓட்டத்தோடு ஒத்து போகும் நபர்களை மட்டும் பார்ட்னராக்கினால் உங்கள் ஸ்டார்ட் அப்புக்கு புண்ணியம்.

உயிர் நண்பன் என்பதற்காக மட்டும் ஒருவரை பார்ட்னர் ஆக்காதீர்கள். நட்பு வேறு, பிசினஸ் வேறு. பணம் போனாலும் பரவாயில்லை, தொழிலில் லடாய் வந்தால் நல்ல நட்பை இழக்க வேண்டி வரும். பணத்தை என்று வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும். நல்ல நட்பு இப்பொழுது அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. கிடைத்த நட்பை கிடா வெட்டாதீர்கள். ஏன், நண்பன் தொழிலில் உதவ மாட்டானா என்பதில்லை கேள்வி.

உங்கள் தொழிலுக்குத் தேவையான திறன் உள்ளவரா, அந்த திறன் உங்கள் தொழிலுக்குத் தேவையா, நீங்கள் தவறு செய்யும்போது உங்களைத் தட்டிக்கேட்கும் தைரியமும் உரிமையும் உள்ளவரா என்பது போன்ற கேள்விகளுக்கு மன சாட்சிக்கு விரோதமில்லாமல் பதில் தேடுங்கள். நட்பு உங்கள் கண்களை மறைக்கா வண்ணம் முடிவெடுங்கள். நல்ல நண்பன் நல்ல பார்ட்னராகவும் அமைந்துவிட்டால் ஏற்படும் மகிழ்ச்சியை, மனநிறைவை நான் பார்த்து வியந்திருக்கிறேன். அப்படி உங்களுக்கும் அமைந்தால் நல்லதே!

உங்களைப் போன்ற எண்ணம் ஓட்டம் கொண்டவராக இருப்பவரை மட்டுமே பார்ட்னராக்குவேன் என்று தேடாதீர்கள். அதற்கு பேசாமல் உங்களை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுத்து பக்கத்து சீட்டில் ஒட்டிவைத்து தொழில் தொடங்கலாம். மார்க்கெட் போக்கை அறிந்து, வாடிக்கையாளர் குணாதிசயங்கள் புரிந்து, போட்டியாளர்கள் செயல்கள் தெரிந்து நீங்கள் தவறு செய்யும் போது தட்டிக்கேட்கும் திறனும் தைரியமும் உள்ளவரே நல்ல பார்ட்னர்.

மீண்டும் சொல்கிறேன், பிசினஸ் என்றால் பார்ட்னர் இருக்க வேண்டும் என்ற ஐதீகம் ஏதும் இல்லை. பில் கேட்ஸ் பார்ட்னர் வைத்துக்கொண்டு தொடங்கவில்லையா என்று நீங்கள் கேட்டால் ‘கவின்கேர்’ கம்பெனியை சி.கே. ரங்கநாதன் தனியாகத் தொடங்கி வெற்றி பெறவில்லையா என்று நான் கூறுவேன். தேவையிருந்தால் மட்டுமே தேர்ந்தெடுங்கள். அப்படி தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பார்ட்னர்ஷிப்பை அணுகும் முறை பற்றி அடுத்த வாரம் பேசுவோம். என்ன பார்ட்னர், ஓகேவா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x