Published : 29 Sep 2019 10:48 AM
Last Updated : 29 Sep 2019 10:48 AM

விவாதம்: உயிரைப் பணயம் வைப்பதா தாய்மை?

க்ருஷ்ணி

கடந்த சில வாரங்களுக்கு முன் நாளிதழ்களையும் பலமொழி இணையதளங்களையும் ஆக்கிரமித் திருந்தது அந்தச் செய்தி. ‘உலகிலேயே மிக அதிக வயதில் தாயான பெண்’ என்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எர்ரமட்டி மங்கயம்மாவைப் பற்றி அவை வியந்து எழுதியிருந்தன. 74 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததுதான் மங்கயம்மாவின் சாதனை.

பெண்கள் மீது ஏராளமான புனிதங்களையும் சுமைகளையும் நாம் ஏற்றிவைத்திருக்கிறோம். ‘தாய்மை’யும் அவற்றில் ஒன்று. பெண்மையின் பெருமையெல்லாம் அந்தத் தாய்மைக்குள் அடங்கியிருப்பதாக நாம் நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். பெண்மை என்பதையே கற்பிதம் என்று புரிந்துகொள்ளாதவரை தாய்மையை வியந்துதானே போற்றுவோம்.

இல்லறத்தின் குறிக்கோள் எது?

தாய்மை என்பது இனப்பெருக்கம் சார்ந்த நிகழ்வன்றி வேறல்ல. பிற உறுப்புகளில் ஏதேனும் குறை ஏற்பட்டு அதனால் அவற்றின் செயல்திறன் குறைந்தால் அதை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால், இனப்பெருக்க உறுப்பிலோ அவற்றின் செயல்பாட்டிலோ ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏதாவது குறைபாடு என்றால் சமூகம் ஆணை ஒன்றும் சொல்லாது. காரணம் பெண்ணிடம்தானே கருப்பை இருக்கிறது. அதனால், குழந்தை பிறக்கவில்லையென்றால் அதன் முழுப் பொறுப்பும் பெண்ணை மட்டும்தானே சாரும்.

குழந்தையில்லாத பெண்களை வசவுகளாலும் புறக்கணிப்பாலும் வாட்டி வதைக்கும் இந்தச் சமூகம் அவர்கள் பெண்ணாகப் பிறந்ததே வீண் என்ற தொனியில்தான் அவர்களை நடத்தும். இப்படியான உதாசீனங்களும் அவமானங்களும் சேர்ந்து, மங்கயம்மாவை இப்படியொரு முடிவை எடுக்க வைத்திருக்கலாம். காரணம், குழந்தை பிறந்ததுமே, “எங்களுக்குக் குழந்தை இல்லை என்பதால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஏளனமாகப் பேசினார்கள்.

இப்போது அவர்களால் அப்படிப் பேச முடியாது. நான் தாயாகிவிட்டேன்” என்று மங்கயம்மா சொல்லியிருக்கிறார். குழந்தை பெற்றுக்கொள்வது மட்டும்தான் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த இல்லற வாழ்க்கையின் குறிக்கோளாக அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதில் மங்கயம்மாவையோ அவருடைய கணவர் சீதாராம ராஜாராவையோ குற்றம் சொல்ல ஏதுமில்லை. காரணம், இந்தச் சமூகத்தின் பார்வையில் அவர்களும் வஞ்சிக்கப்பட்டவர்களே.

ஆனால், நாமும் அந்தச் சமூகத்தின் அங்கம் என்பதால் இதில் நமக்குப் பங்கு இருக்கிறது.
வாரிசுரிமை, சொத்துரிமை இவை இரண்டும்தான் எப்படியாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலைக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. ஆண்தன் ஆண்மையைத் தன் வாரிசு மூலம்தான் நிரூபிக்க முடியும் என நம்பவைக்கப்பட்டிருக்கிறான்.

பெண்ணும் அப்படியே. உண்மையில் காலங்காலமாக நம்பப்பட்டு வருவதைப் போல் தாய்மைக்கெனத் தனித்த குணங்கள் எவையுமில்லை. அதுவோர் உடலியல் நிகழ்வு. அதைத் தாண்டி அதில் பெருமிதப்படவும் கொண்டாடவும் ஏதுமில்லை. ஆனால், படித்தவர்கள்கூட இந்தப் புரிதல் இல்லாமல் குழந்தை இல்லாதவர்களைக் குதர்க்கமாகப் பேசுவதும் தங்களுக்குக் குழந்தை இல்லை என்பதைப் பெரும் குறையாக உணர்வதும் நடக்கிறது.

வணிக நோக்கில் செயல்படும் மையங்கள்

இயற்கையாக நடக்க முடியாததைச் செயற்கை முறையில் நிகழ்த்துகிறது நவீன மருத்துவம். தமிழகத்தில் சிறு நகரங்களில்கூடச் செயற்கைக் கருவூட்டல் மையங்கள் முளைத்துவிட்டன. குழந்தை இல்லையே என்ற மக்களின் ஏக்கமும் பயமும்தான் வணிக நோக்கில் செயல்படும் மையங்களின் மூலதனம். இனப்பெருக்கச் செயல்பாட்டில் நிகழும் குறைகளைக் களைந்து, குழந்தைப்பேற்றுக்கான வழிவகைகளை இந்த மையங்கள் செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை.

ஆனால், குழந்தை பெற்றுக்கொள்வதற்காகப் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தையும் உயிரையும் பணயமாக வைப்பதை இந்த மையங்கள் பயன்படுத்திக்கொள்வது எந்த வகையில் நியாயம்? மாதவிடாய் நின்று 25 ஆண்டுகள் கடந்த பிறகு செயற்கைக் கருவூட்டல் முறையில் இரண்டு மகள்களைப் பெற்றெடுத்திருக்கும் மங்கயம்மா, தாயாவதற்காகத் தன் உயிரைப் பணயம் வைத்திருக்கிறார்.

82 வயதாகும் மங்கயம்மாவின் கணவர் ராஜாராவ், குழந்தை பிறந்த மறுநாளே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை வெளியே எடுத்ததால் மங்கயம்மாவும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அப்பா, அம்மா இருவருமே இப்படி மருத்துவமனையில் இருக்க, அந்த இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் என்ன? ஒருவேளை இருவரும் நல்லவிதமாகத் தேறிவிட்டாலும் இரண்டு குழந்தைகளை வளர்க்கும் அளவுக்கு அவர்களுடைய உடல் ஒத்துழைக்குமா?

அன்று நிறைவு, இன்று சோகம்

பஞ்சாபைச் சேர்ந்த தல்ஜிந்தர் கவுர் என்ற 72 வயதுப் பெண் செயற்கைக் கருவூட்டல் முறையில் 2016-ல் குழந்தையைப் பெற்றெடுத்தார். அப்போது அவருடைய கணவருக்கு 79 வயது. குழந்தையைத் தாங்களே வளர்க்கும் அளவுக்கு உற்சாகத்துடன் உணர்வதாக அப்போது கவுர் தெரிவித்திருந்தார். குழந்தை பிறந்த பிறகே தன் வாழ்க்கை நிறைவடைந்ததைப் போல் உணர்வதாகவும் அவர் சொன்னார். ஆனால், தற்போது மூன்று வயதாகும் மகனை வளர்க்க சிரமப்படுவதாக தல்ஜிந்தர் கவுர் தெரிவித்திருக்கிறார்.

“குழந்தை பிறந்த பிறகு உயர் ரத்த அழுத்தமும் மூட்டு வலியும் அதிகரித்துவிட்டன. எந்த டாக்டரிடம் சென்றாலும் மருந்து கொடுத்துவிட்டு நன்றாகச் சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால், அவற்றை என் உடல் ஏற்றுக்கொள்ள வேண்டுமே. நான் நினைத்தபடி குழந்தையை வளர்ப்பது அவ்வளவு எளிதாக இல்லை” என இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கவுர் தெரிவித்திருக்கிறார்.

தல்ஜிந்தர் கவுர் 70 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டதைப் பற்றி அப்போதே சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், “குழந்தை பெற்றுக்கொள்வது ஒருவரது அடிப்படை உரிமை. வயதைக் காரணம்காட்டி நாம் அதை மறுக்க முடியாது” என தல்ஜிந்தருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்திருந்தார். குழந்தை பெற்றுக்கொள்வது பெண்களின் அடிப்படை உரிமை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், குழந்தை பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என அவர்களை நிர்ப்பந்திக்கும் சமூக அழுத்தத்தை நாம் கணக்கில்கொள்ள வேண்டாமா?

அரசுக்கு அக்கறை இல்லையா?

பெண் என்றால் தாய்மை அடைந்தே தீர வேண்டும் என்ற சிந்தனை உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கிறது. அவற்றின் சதவீதம் வேண்டுமானால் நாடுகளுக்கேற்ப மாறக்கூடும். ஸ்பெயினைச் சேர்ந்த மரியா என்பவர் 66 வயதில் செயற்கைக் கருவூட்டல் முறையில் 2006-ல் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதிக வயதில் தாயானவர் என உலக அளவில் பதிவுசெய்யப்பட்ட முதல் நபர் மரியா. அவரைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேல் தாயாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மங்கயம்மாவும் தன் உறவினர்களில் ஒருவர் 55 வயதில் செயற்கைக் கருவூட்டல் முறையில் தாயானதைப் பார்த்துத்தான் இந்த முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பெண்கள் 35 வயதைக் கடந்த பிறகும் குழந்தை பிறக்கவில்லையென்றால் அவர்கள் தத்தெடுத்துக்கொள்வதுதான் சிறந்தது என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஒருவர். ஆனால், பெரும்பாலானோர் செயற்கைக் கருவூட்டல் மையங்களையும் வாடகைத்தாய் முறையையும் நம்பி அவற்றின் பின்னால் செல்கின்றனர். ஆனால், ‘18 வயதுக்குக் கீழ் இருக்கிறவர்களுக்கும் 45 வயதைக் கடந்தவர்களுக்கும் செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது’ என இது குறித்த மசோதாவில் இந்திய மருத்துவக் கழகம் குறிப்பிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் சட்டமாக இயற்றப்படாத நிலையில், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பலர் தங்களுக்குச் சாதமாக்கிக்கொள்கின்றனர்.

பெருகிவரும் செயற்கைக் கருவூட்டல் மையங்களும் 50 வயதைக் கடந்த பிறகும் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களும் இதை நிரூபிக்கின்றனர். பெண்களின் உயிருடனும் ஆரோக்கியத்துடனும் நேரடியாகத் தொடர்புகொண்ட செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்பம் குறித்த மசோதாவைச் சட்டமாக்குவதில் அரசு காட்டும் மந்தத்தன்மை, பெண்கள் மீதான அரசின் அக்கறையின்மையைக் காட்டுகிறது. இனப்பெருக்கம் தொடர்பாகப் பெண்களின் உடல்நலத்தைக் காக்க, சட்டங்கள் எவையும் இல்லாத நிலையில் எப்பாடுபட்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் நாம் யாருக்கு, எதை நிரூபிக்கப்போகிறோம்?

நீங்க என்ன சொல்றீங்க?

மாதவிடாய் நின்ற பிறகும் செயற்கைக் கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள என்ன காரணம்? இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தாய்மை என்ற பெயரால் பெண்களைச் சுரண்டப்போகிறோம்? குழந்தை பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற மக்களின் நோக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு புற்றீசல் போல் முளைத்துவரும் கருவூட்டல் மையங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது? இதில் உங்கள் கருத்து என்ன? எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

‘நவீன சீனக் கட்டிடக்கலையின் தந்தை’ என்று போற்றப்படுபவர் லியாங் ஷிசெங். இவருடைய மனைவிலின் ஹ்யூயின், நவீன சீனத்தின் முதல் பெண் கட்டிட வடிமைப்பாளர். சீனாவின் பண்பாட்டுப் பாரம்பரியத் தலங்களை இருவரும் இணைந்து புதுப்பித்துப் பெரும் பணியாற்றியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x