Published : 28 Sep 2019 10:29 AM
Last Updated : 28 Sep 2019 10:29 AM

இதய நோய்களைத் தடுக்கலாம்

கனி

அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்தால், இதய நோய்களைத் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இதய நோய்களுக்கு வயது, பாலினம், குடும்பப் பின்னணி எனப் பல்வேறு காரணிகள் இருந்தாலும் சில அடிப்படையான வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொண்டால் அவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும். இதய நோய்களைத் தடுப்பதற்கான சில ஆலோசனைகள்…

புகைப் பழக்கத்தைக் கைவிடல்

புகைபிடிப்பது, புகையிலை பயன்படுத்துவது ஆகிய இரண்டு பழக்கங்களும் இதய நோய்களை உருவாக்குவதற்கான முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. புகையிலையில் இருக்கும் வேதிப்பொருட்கள் இதயம், ரத்த நாளங்களைப் பாதிப்படையச் செய்யும். இந்தப் பாதிப்பு, நாளடைவில் மாரடைப்பு ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. சிகரெட்களில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவில் மாற்றத்தை உருவாக்கும்.

இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. போதுமான ஆக்ஸிஜன் கொண்ட ரத்தத்தை உடலில் செலுத்த இதயம் கடினமாகச் செயல்பட வேண்டியிருப்பதால் இதயத் துடிப்பும் அதிகரிக்கிறது. இதய நோய்களைத் தடுக்க வேண்டுமென்றால், புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிடுவதுதான் சரியான வழி. எப்போதாவது நண்பர்களுடன் வெளியே செல்லும்போதுதான் புகைபிடிக்கிறேன் என்று சொன்னால் அதுவும் ஆபத்துதான். ஆனால், புகைபிடிப்பதை நிறுத்தியவுடன் இதய நோய்களுக்கான அறிகுறிகள் இயல்பாகவே குறையத் தொடங்கும்.

30 நிமிட உடற்பயிற்சி

அன்றாடம் உடற்பயிற்சி செய்வது இதய நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி. உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான எடை, உணவு போன்ற அம்சங்களை இணைத்துக்கொள்ளும்போது அதனால் கிடைக்கூடிய பலன்கள் அதிகம். உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுவதுடன் ரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து, நீரிழிவு நோய் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த உதவும். ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடல் சீராக இயங்குவதற்கு வழிவகுக்கும்.

உடற்பயிற்சியுடன், தோட்டக்கலை, வீட்டு பராமரிப்புப் பணிகள், உங்கள் செல்லப்பிராணியுடன் நடைப் பயிற்சிக்குச் செல்வது என அனைத்துமே உடற்பயிற்சி செய்வது போலத்தான். அதனால் எடுத்தவுடனே கடுமையான உடற்பயிற்சி முறைகளைத் தேர்ந்தெடுக்காமல் எளிமையான நடைப்பயிற்சி, தோட்டப் பராமரிப்புப் பணிகள் போன்றவற்றிலிருந்து உங்கள் அன்றாட உடற்பயிற்சியைத் தொடங்கலாம்.

ஆரோக்கியமான உடல் எடை

உடல் எடை அதிகமாக இருப்பது இதய நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. உங்கள் உடல் நிறைக் குறியீட்டைத் (Body Mass Index) தெரிந்துகொண்டு, அதன்படி உங்கள் உடல் எடையைப் பராமரிப்பது நல்லது. ஆண்களின் இடுப்பளவு 40 அங்குலத்துக்கு (101.6 செ.மீ) அதிகமாக இருந்தால், அவர் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம்.

அதேபோல், பெண்களின் இடுப்பளவு 35 அங்குலத்துக்கு (88.9 செ.மீ) அதிகமாக இருந்தால் அவர்கள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பொருள். அதிக உடல் எடையுடன் இருப்பவர்கள் 3-லிருந்து 5 சதவீதம் எடையைக் குறைத்தாலும் அது ரத்தச் சர்க்கரை அளவு, நீரிழிவு நோய் அறிகுறிகளைக் குறைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x