Published : 27 Sep 2019 09:34 am

Updated : 27 Sep 2019 09:34 am

 

Published : 27 Sep 2019 09:34 AM
Last Updated : 27 Sep 2019 09:34 AM

டிஜிட்டல் மேடை: செரெங்கெட்டி - கானகத்தில் ஒரு நாடகம்

digital-platform

சு.சுபாஷ்

ஒரு கானகத்தில் நடமாடும் விலங்குகளின் வாழ்க்கையை நெருக்கமாகப் படம்பிடித்து, அவற்றை ஒரு வலைத்தொடருக்கான கதையாகச் செதுக்கினால் எப்படியிருக்கும்? ‘சோனி லிவ்’ செயலியில் காணக்கிடைக்கும் ‘செரெங்கெட்டி’ கானுயிர் தொடரின் அத்தியாயங்கள் அப்படியிருக்கின்றன.


ஆப்பிரிக்க தேசமான தான்சானியாவில் இருக்கிறது செரெங்கெட்டி தேசியப் பூங்கா. தான்சானியாவின் வடக்கில் தொடங்கி கென்யாவின் தென்மேற்கு வரை சுமார் 12 ஆயிரம் சதுர மைல் பரப்பளவில் இது பரவியிருக்கிறது. தான்சானியாவில் செரெங்கெட்டியாகவும் கென்யாவில் மசாய் மாரா என்றும் அழைக்கப்படும், மனிதர்கள் வகுத்த இந்த எல்லைக்கோடுகளை விலங்குகள் சட்டை செய்வதில்லை. ஆண்டுதோறும் செரெங்கெட்டியிலிருந்து மசாய்மராவுக்கு லட்சக்கணக்கிலான பாலூட்டி விலங்குகள் தமது பரிவாரங்களுடன் பல நூறு கி.மீ. பயணம் செய்து இடம்பெயர்கின்றன. உலகின் பத்து இயற்கைப் பயண அதிசயங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் இந்த நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

செரெங்கெட்டி தொடரின் மையமாக இந்த இடப்பெயர்வு இடம்பெற்றாலும், அதனை நேரடியாக விளக்காது விலங்குலகின் சில கதைகளின் போக்கில் தொட்டுச் செல்கிறார்கள். இடம்பெயரும் விலங்குகளின் பாதையில் ஓர் ஆறு குறுக்கிடுகிறது. அரிதாகக் கிடைக்கும் கொழுத்த இரைகளுக்காக சிங்கம், சிறுத்தை, முதலை போன்றவை காத்திருக்கின்றன. பபூன் குரங்குகள், கழுகுகள், கீரிகள், கழுதைப் புலிகள், காட்டு நாய்கள் போன்றவையும் பக்க வாத்தியங்களாகப் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு விலங்குகளின் கூட்டத்திலும் ஊடுருவிச் சில கதாபாத்திரங்களுக்குப் பெயரிட்டு அறிமுகம் செய்வதுடன், அத்தியாயங்கள் நெடுக அவற்றின் கதைகள் வளர்வதையும் அந்தக் கதை நிகழ்வுகள் ஒன்றோடொன்று ஊடுருவிச் செல்வதையும் செரெங்கெட்டி தொடர் பின்தொடர்கிறது. விலங்குகள் கூட்டத்தில் நிகழும் அதிகார மோதல், கூடிக்களிப்பது, வேட்டையாடுவது, குட்டிகளைக் கண்காணித்து வளர்ப்பது, இணையைத் தேர்ந்தெடுப்பது, பற்றிப்படரும் நேசம், முட்டல் - மோதல் - பிரிவு - துரோகம் என ஒரு வலைத்தொடருக்கான சுவாரசியங்களை உரிய திருப்பங்களுடன் கொண்டு செல்கிறார்கள். பின்னணிக் குரலின் விவரிப்பும் வர்ணனையும் கதைசொல்லலும் கானுயிர் வாழ்க்கையைப் விரிவாகப் புரிந்துகொள்ளக் கூடுதலாக உதவுகின்றன.

இதைக் கானுயிர் குறித்த ஆவணப் படமாகவோ குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரும் ரசிக்கும் வலைத்தொடராகவோ விரும்பியவாறு ரசிக்கலாம். புதிதாகக் குட்டிகள் ஈன்ற காளி என்ற பெண் சிங்கத்தைச் சக சிங்கங்கள் குழு விலக்கம் செய்கின்றன. ‘குழுவுக்கு வெளியே இணையைத் தேடி வாரிசுகளை வரிந்துகொண்டதாக எழுந்த சந்தேகமே இதற்குக் காரணமாக இருக்கலாம்’ என்கிறது பின்னணிக் குரல். துரத்தப்பட்ட தனது இணையைப் பின்தொடரும் ஆண் சிங்கம் பிற்பாடு சிங்கக் குட்டிகளுக்காக மனது மாறி காளியுடன் இணைகிறது. இப்படி பபூன் குரங்கு, சிறுத்தை, யானை, வரிக்குதிரை என ஒவ்வொரு விலங்குக் கூட்டத்திலும் இருக்கும் கதைகள் அவற்றுக்கான திருப்பங்களோடு விவரிக்கப்படுகின்றன.

அடர் கானக வாழ் விலங்கினங்களின் விதவிதமான வீடியோ தொகுப்புகளைப் பல்வேறு டிவி சானல்களில் ஏற்கெனவே பார்த்திருப்போம். ஆனால், இந்த விலங்குலகை ஒரு ரசனைக்குரிய கதைத்தொடரின் சட்டகத்துக்குள் அடக்கியதில் ‘செரெங்கெட்டி’ வேறுபட்டு நிற்கிறது. பசு பால் ‘தரும்’; காகம் வடையைத் ‘திருடியது’ என்பதாகவே குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் விலங்குகளை அறிமுகம் செய்திருப்பதற்கு அப்பால், அவர்கள் ஆர்வத்துடன் அறிந்துகொள்ள சுவாரசியமான காட்சிகள் செரெங்கெட்டியில் உண்டு.
‘மனித உணர்வுகளால் விலங்குகளை அலங்கரித்து விபரீதமாகச் சித்தரிக்கப்பட்ட கதை’ எனச் சில விலங்கு ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தபோதும், ஒட்டுமொத்தக் குடும்பத்துக்குமான தொடராகப் பார்வையாளர் மத்தியில் ‘செரெங்கெட்டி’ பிரபலமாகி வருகிறது.

பெரும் பொருட்செலவில் பிபிசி படமாக்கிய ‘செரெங்கெட்டி’ (Serengeti) தொடர் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ‘பிபிசி ஒன்’ வாயிலாக ஜூலையிலும் இந்தியாவில் கட்டண சேனலான ‘சோனி - பிபிசி எர்த்’ மூலமாக செப்டம்பரிலும் ஒளிபரப்பானது. இதையே ‘சோனி லிவ்’ (Sony Liv) செயலி வாயிலாகக் கட்டணமின்றியும் கண்டுகளிக்கலாம்.

செரெங்கெட்டியின் ஆறு அத்தியாயங்களுக்கு நிகராக, அவை படமாக்கப்பட்டதை விளக்கும் வீடியோ தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்த மனித உழைப்புடன், உளவு கேமராக்கள், ரிமோட்டில் இயங்கும் மொபைல் கேமராக்கள், ட்ரோன்கள் எனத் தொழில்நுட்பத்தின் சிறந்த அம்சங்களும் கலந்திருப்பதை இந்தத் தொகுப்பு விளக்குகிறது. ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், இந்தி, தெலுங்கிலும் செரெங்கெட்டி தொடரை ‘சோனி லிவ்’ வெளியிட்டுள்ளது.


டிஜிட்டல் மேடைநாடகம்செரெங்கெட்டிஆப்பிரிக்க தேசம்ஆறு அத்தியாயங்கள்விலங்குகள்விலங்குகளின் வாழ்க்கைதான்சானியாஆவணப் படம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x