Published : 27 Sep 2019 09:12 AM
Last Updated : 27 Sep 2019 09:12 AM

தரமணி 02: ஒரு சினிமா பேராசிரியரின் நினைவுகள்

ஆர்.சி.ஜெயந்தன்

இந்தியத் திரைக்கு தரமணி இன்ஸ்டிடியூட் அளித்த தரமான ஆளுமைகளின் பட்டியல் பெரியது. புனே திரைப்படப் பள்ளியில் படித்து, இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்தவர் மலையாள புதிய அலை சினிமாவின் தந்தையான அடூர் கோபாலகிருஷ்ணன். அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளரான மான்கட ரவிவர்மா, தமிழில் புதிய அலை சினிமாவின் தொடக்கமாக அமைந்திருக்க வேண்டிய ‘அவள் அப்படித்தான்’ படத்தின் இயக்குநர் ருத்ரய்யா தொடங்கி, பாலிவுட் படவுலகம் இன்றைக்கும் இவரது தேதிகளுக்காகக் காத்திருக்கும் ஒளிப்பதிவாளர் வி.மணிகண்டன் வரை, அழுத்தமாகத் தடம் பதித்தவர்களின் சுவடுகள் தொடங்கிய இடம், 64 ஏக்கரில் தரமணியில் இன்று பரந்து விரிந்து கிடக்கிறது. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சினிமாட்டோகிராஃபியும் சவுண்ட் இன்ஜினியரிங்கும் பயிற்றுவிக்கப்பட்ட ‘மெட்ராஸ் டிரேட் ஸ்கூல்’ இயங்கியது ஒரு வாடகைக் கட்டிடத்தில்!

பிரிட்டிஷ் அரசாங்கம் அளித்த மாநில சுயாட்சியின்கீழ், 1946-ல் மதராஸ் மாகாணத்துக்கு நடந்த இரண்டாம் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று, டி.பிரகாசம் முதல்வர் ஆனார். அவர்தான் பிராட்வேயில் நடத்தப்பட்டுவந்த ‘மெட்ராஸ் ட்ரேட் ஸ்கூல்’ தொழிற்கல்வி நிறுவனத்தில் ஒரு ‘டிரேட்’ படிப்பாக ‘டிப்ளமோ இன் சினிமாட்டோகிராஃபி, அண்ட் சவுண்ட் இன்ஜினியரிங்’ (LC and SE ) என்ற மூன்றாண்டு பாடப் பிரிவைத் தொடங்கி வைத்தவர். இந்தச் செய்தியை 20.10.1946 அன்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

சுதந்திரத்துக்குப் பின்னர், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சிப் பணிகளில் ஒன்றாக, சென்னை அடையாறு பகுதியின் பக்கிங்காம் கால்வாயின் கரையில் அமைந்திருந்த தரமணி என்ற கிராமத்தில் ஒருங்கிணைந்த தொழிற்கல்வி வளாகம் உருவாக்கப்பட்டது. அதில் அமைந்ததுதான் ‘சென்ட்ரல் பாலிடெக்னிக்’ கல்லூரி. அந்தத் தொழிற்கல்லூரியில் ஒரு பாடப்பிரிவாக இணைக்கப்பட்டது ‘லைன்சென்ஸ் இன் சவுண்ட் இன் சினிமாட்டோகிராஃபி அண்ட் சவுண்ட் இன்ஜினியரிங்’ படிப்பு. 1959-ல் தொழில்நுட்ப கல்வித்துறையுடன் இத்தொழிற் கல்லூரி இணைந்தபோது ஒவ்வொரு முக்கியப் பொறியியல் பிரிவிலும் பல கிளைத்துறைகள் வளர்ந்து நின்றன. இதனால், ஒவ்வொரு முக்கியப் பொறியியல் தொழில் பிரிவின் கீழும் பல புதிய தொழில் படிப்புகள் உருவாக்கப்பட்டன.

அதன் விளைவாக, அவை தனித்தனி தொழில்நுட்பக் நிறுவனங்களாக அதே தரமணி வளாகத்தில் தனிக் குடித்தனம் சென்றன. அப்போது சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து பிரிந்து சென்று உருவானதே ‘இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் பிலிம் டெக்கனாலஜி’(IFT). ‘டிப்ளமா இன் பிலிம் டெக்னாலஜி’ (D.F.Tech -Diploma in Film Technology) என்ற புகழ்பெற்ற படிப்பின் கீழ், முக்கிய சினிமாத் தொழில்நுட்பங்களை தனித்தனி பட்டயப் படிப்புகளாக வழங்கத் தொடங்கிய இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் பிலிம் டெக்கனாலஜியின் (IFT) இன்றைய பெயர், ‘எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்’.

ஒரு முதுபெரும் மாணவர்

சமூகக் காணொலி வழியே எப்படிப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படை அறிவையும் இன்று பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தைச் செயல்முறை பயிற்சி மூலம் மட்டுமே முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட செயல்முறைப் பயிற்சியைத் தரும் தரமணி இண்ஸ்டிடியூட், காலத்துக்கு ஏற்ப, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, பல புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கியும், கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் தொழில்நுட்பப் படிப்புகளை வழியனுப்பியும் வைத்திருக்கிறது. இப்படிக் காலம்தோறும் தன்னை புதுப்பித்துக்கொண்டு வந்திருக்கும் இந்தத் திரைப்படக் கல்லூரியில் பயின்று, பின்னர் அதிலேயே சேர்ந்து சுமார் 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய ஒரு முன்னாள் மாணவருக்குத் தற்போது 88 வயது.

அவரது பெயர் பத்மநாபராஜா. சென்னை, தியாகராய நகரில் வசித்துவரும் அவரைச் சந்தித்து, அந்நாட்களின் தரமணியைப் பற்றிக் கேட்ட போது ஆச்சரியம் விலகாத கண்களுடன் வரவேற்றார். “இருட்டறையில, ஃபிலிம் ரோலை ஆசிட் தண்ணியில கழுவி உருத் துலக்குவோம். அப்போ கொஞ்சம் கொஞ்சமா பொம்மைத் தெரியத் தொடங்கும். மனசுல அப்போ ஒரு சந்தோஷம் வரும் பாருங்க. அது மாதிரி ஒரு சந்தோஷம் நீங்க என்னைத் தேடி வந்ததுல இருக்கு” என்று கூறி நினைவுகளை அசைபோடத் தொடங்கினார் பத்மநாபராஜா.

“நான் படிச்சப்போ அது சென்ட்ரல் பாலிடெக்னிக். அப்புறம் 1964-ல் புதுக் கட்டிடங்கள் கட்டி கம்பீரமா ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஆச்சு. லால் பகதூர் சாஸ்திரி வந்து திறந்து வைத்தார். புனே, கல்கத்தா இன்ஸ்டிடியூட்டுகளுக்கு இல்லாத பெருமை நம்ம இன்ஸ்டிடியூட்டுக்கு உண்டு. 1960-ல் இந்தியாவிலேயே முதன்முறையாகப் படச்சுருள் பதனிடுதல் படிப்பை ரொம்பவே துணிச்சலா தரமணியில தொடங்கினாங்க. அந்தத் துறையில விரிவுரையாளராகச் சேர்ந்து அப்புறம் பேராசிரியர், தலைவர் என்று 30 வருடங்கள் வேலை செய்தேன்.

நான் படிச்சு, பணியாற்றிய கல்லூரிங்கிறதால, இந்தியால இருக்கிற மற்ற இரண்டு கல்லூரிகளைவிடத் தரமணிதான் பெஸ்ட் என்று நான் சொல்லக் கூடாது. இங்கு படித்துவிட்டுப் போய் இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் மாணவர்களின் படைப்புகளும் அவர்களது திறமையும் சொல்லணும்” என்றவர், “அன்றைக்கு வாஹினியும் ஜெமினியும்தான் லேப் வைத்திருந்தன. அவர்களே பல சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள இன்ஸ்டிடியூட்டுக்குத்தான் வருவார்கள். பின்னாளில் பிரசாத் தனியாக ஃபிலிம் லேப் தொடங்கியபோது தொழில்நுட்ப உதவி செய்தது தரமணி இன்ஸ்டிடியூட்தான்.” என்றவர், இன்று ஃபிலிம் சுருள் இல்லாமல் போன சோகத்தில் மூழ்கியபடி தொடந்து பேசினார்.

அரசின் கடமை

“கலைஞர் ஆட்சியிலும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் சரி, பாரபட்சம் இல்லாமல் தரத்தில் உயர்ந்துகொண்டே வந்தது தரமணி கல்லூரி. படச்சுருள் பதனிடலைக் கற்றுக்கொள்ள வட இந்தியாவிலிருந்து தரமணி கல்லூரிக்கு வந்து போயிருக்காங்க. இங்க படிச்சவங்க காஷ்மீர் வரைக்கும் போய் வேலை செய்றாங்க. இன்றைக்குப் படச்சுருளும் இல்லை; பதனிடலும் இல்லை. ஆனால், மீண்டும் ஒரு நாள் படச்சுருள் வரும்னு நினைக்கிறேன். அதிலே இருக்கும் தனித்தன்மையை எந்தத் தொழில்நுட்பமும் ஈடு செய்ய முடியாது.

மெட்ராஸ்ல இருந்த சினிமா லேப் எல்லாத்தையும் இன்னைக்கு மூடிட்டாங்க. தரமணி இன்ஸ்டிடியூட்ல இருந்த புராசஸிங் பிளான்டையும் மூடிட்டாங்க. லேப் நடத்துற முதலாளிகள் அப்படிச் செய்யலாம். அது அவங்க தொழில் விவகாரம். ஆனால், அரசாங்கம் அந்தத் தொழில்நுட்பத்தைக் காப்பாற்றி வெச்சிருக்கணும்னு நினைக்கிறேன். உலகத்துல எங்காவது ஒரு மூலையில் படச்சுருள் தயாரிப்பு நிச்சயமா இருக்கும். அவங்ககிட்ட ஃபிலிம் ஸ்டாக் வாங்கி வந்து மாணவர்கள் தயாரிக்கிற டிப்ளமா படங்கள்ல ஒன்றையாவது ஃபிலிம்ல தயாரிக்கணும்.

ஃபிலிம் புராசசிங், ஃபிலிம் பிரிண்டிங், ஃபிலிம் சவுண்டிங் தொழில்நுட்பம் வர்ற தலைமுறைக்கு தெரியணும். இது மாதிரி எடுக்கப்படுற படங்களை ஸ்கிரீன் பண்ண, அரசாங்கம் ஒரு தியேட்டரையாவது சென்னையில விட்டு வெச்சிருக்கணும். பழைய புரொஜெக்டர்களை எல்லாம் தூக்கி காயலாங் கடையில போட்டுடக் கூடாது” என்று உள்ளம் திறந்து கொட்டிக்கொண்டிருக்கும்போதே அவரது கண்கள் கலங்கி, நா தழுதழுக்கிறது.

அவரது நினைவுகளின் தடத்தை மெல்ல மடைமாற்றுவதற்காக ‘நீங்கள் இன்ஸ்டிடியூட்டில் படித்த நாட்களைப் பற்றிக் கூறுங்கள்’ என்றதும் உற்சாகமாக ஐம்பதுகளின் தரமணி பற்றியும் அன்று ‘ஜெமினி ஸ்டுடியோவைத் தாண்டி கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டுக்குச் செல்லாதே! மீறிப்போனால் இலுப்பைக் காட்டுக்குள் ஒளிந்திருக்கும் வழிப்பறித் திருடர்களிடம் மாட்டிக்கொள்வாய். அப்புறம் உயிரோடு திரும்ப முடியாது’ என்று அவரது அப்பா எச்சரித்ததையும் பற்றியும் சுவாரசியமாகப் பகிரத் தொடங்கினார் பத்மநாபராஜா. அவரது நினைகளின் தொடர்ச்சியில் அந்நாள் தரமணியின் தருணங்களை அடுத்த வாரமும் காணலாம்.

(தடம் தொடரும்)
தொடர்புக்கு:jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x