

ஜெ.கு.லிஸ்பன் குமார்
மத்திய அரசின் முன்னணிப் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.-யில் (இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம்) உதவியாளர் பதவியில் 7,871 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.
சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட கோட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் 400 காலியிடங்கள் உள்ளன. உதவியாளர் பதவிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி
வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகளை (ஆன்லைன்வழி) உள்ளடக்கியது.
தேர்வுமுறை
முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதத் திறன், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். தேர்வு 1 மணி நேரம் நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டத் தேர்வான முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இத்தேர்வில் பொது அறிவு, பொருளாதார அறிவு, ஆங்கிலம், கணிதத் திறன், ரீசனிங், கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். இதற்கு விடையளிக்க இரண்டரை மணி நேரம் அளிக்கப்படும்.
உரிய வயதுத் தகுதி உடைய பட்டதாரிகள் எல்.ஐ.சி. இணையதளத்தைப் (www.licindia.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு மையம், தேர்வுக் கட்டணம், கோட்டங்கள் வாரியான காலியிடங்கள், ஊதியம், இதர சலுகைகள், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்படும் இலவசப் பயிற்சி போன்ற விவரங்களை எல்.ஐ.சி. இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
| விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 1 அக்டோபர் 2019 முதல்நிலைத் தேர்வு: 21, 22 அக்டோபர் 2019. ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் தேதிகள்: 15 - 22 அக்டோபர் 2019 |