Published : 24 Sep 2019 11:21 AM
Last Updated : 24 Sep 2019 11:21 AM

ஆங்கிலம் அறிவோமே – 282: நியாயப்படுத்த ஒரு நியாயம் வேண்டாமா?

ஜி.எஸ்.எஸ்.

கேட்டாரே ஒருகேள்வி

“Oval என்று ஒரு பானத்தைச் சிறுவயதில் குடித்ததுண்டு. இதற்கும் oval வடிவத்துக்கும் தொடர்புண்டா?”
அந்தப் பானத்தின் முழுமையான பெயர் ovaltine. இதன் ஒரிஜினல் பெயர் ovomalt. லத்தீன் மொழியில் ovum என்றால் அது முட்டையைக் குறிக்கும். Malt என்பது மாவு போன்ற ஒரு தானிய வகை. இந்த இரண்டும் கலந்ததால் அந்தப் பானத்தின் பெயர் ovomaltine.

முட்டை வடிவத்தை oval என்பார்கள். பூமிகூட முதலில் தட்டையாகவும், பிறகு கோளமாகவும் கருதப்பட்டு வந்தது. பின்னர் அதைக் கிட்டத்தட்ட oval வடிவம் (நீள் வட்டம்) என்றார்கள்.
லண்டனில் உள்ள ஒரு பிரபல கிரிக்கெட் மைதானத்தின் பெயர் The Oval. அது oval வடிவத்தில் இருக்கும்.

Justification என்பதற்கும், justice என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
Justice என்றால் நீதி. நீதிபதிகளைக் குறிக்கவும் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்.
Justification என்றால் நியாயப்படுத்துதல். ஒரு செயலை நீங்கள் justify செய்தால் அந்தச் செயல் ஏன் நியாயமானது அல்லது தேவையானது என்பதை நீங்கள் விளக்குகிறீர்கள்.

“ஒரே சொல் noun ஆகவும் verb ஆகவும் வெவ்வேறு வாக்கியங்களில் பயன்படும்போது அவற்றுக்கான அடிப்படை அர்த்தம் ஒன்றுதானே. எடுத்துக்காட்டாக, I love you என்பதிலும் Love is a good feeling என்பதிலும் உள்ள love என்பதற்குக் காதல் என்றுதானே அர்த்தம்!”

ஆனால், அப்படித்தான் எப்போதும் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை நண்பரே. கீழே இரண்டு ஜோடி வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு சொல் noun ஆகவும் அடுத்ததில் verb ஆகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அர்த்தங்கள் பெரிதும் மாறுபடுகின்றன இல்லையா?
1) Get into the COACH quickly; it has started moving.
2) I am weak in English. Can you COACH me please?
1) Do you have a box of MATCHES?
2) His horoscope MATCHES with hers.

‘High profile’ என்ற இரண்டு சொற்களுக்கு இடையே hyphen போட வேண்டுமா, பொறுப்பான நாளிதழ்களில்கூட இரண்டு விதமாகவும் பிரசுரிக்கிறார்கள்?’’
High profile என்பதைப் பெயர்ச் சொல்லாகப் பயன்படுத்தும்போது அந்தச் சொற்களுக்கிடையே hyphen தேவையில்லை. பலரது கவனத்தையும் கவரும் ஒரு முக்கியப் பதவி அல்லது நிலை என்று இதைக் கூறலாம். These people have high profile in the community.
மாறாக, adjective ஆகப் பயன்படும்போது இந்த இரண்டு வார்த்தைகளுக்கிடையே hyphen போடுவார்கள். A closely contested high-profile legal battle.

பொதுவாக்கெடுப்பு என்பதைக் குறிக்க 'Plebiscite' , 'Referendum' என்ற இரு சொற்கள் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டுக்கும் என்ன வேறுபாடு ?
Referendum என்பதில் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து நேரடியாகவே வாக்களிப்பார்கள். இதன் காரணமாக ஒரு புதிய சட்டம் அமல்படுத்தப்படலாம். Plebiscite என்பது வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பது.
ஆனால், இந்த இரண்டு சொற்களுக்கான பொருளும் நாட்டுக்கு நாடு கொஞ்சம் மாறுபடுகிறது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை referendum என்பது அதன் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவை மாற்றுவதற்காக நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு. Plebiscite என்பது அரசியலமைப்பைப் பாதிக்காத வேறு விஷயங்கள் தொடர்பானது.

போட்டி எங்கே என்று கேட்டுக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு
– அடுத்த பகுதியில்.
போட்டியில் கேட்டுவிட்டால்
A __________ leader can lead the nation out of economic crisis.
(a) respected
(b) healthy
(c) learned
(d) dynamic
(e) smiling

நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கக்கூடிய தலைவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?
மதிக்கத்தக்கவராக (respected) இருந்தால் அவர் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க வாய்ப்பு உண்டு என்று கூறிவிட முடியாது. உடல்நலம் கொண்டவராகவோ (healthy), கற்றறிந்தவராகவோ (learned), சிரித்த முகம் கொண்டவராக (smiling) ஒரு தலைவர் இருப்பதற்கும் அவரது திறமைக்கும் தொடர்பு கிடையாது.
Dynamic என்றால் முன்னேற்றம் கொண்ட, மாற்றங்களுக்குத் தயாராக இருக்கிறார் என்கிற பொருள் உண்டு. எனவே, இந்தத் தன்மையைக் கொண்டவர் ஒருவரால்தான் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்க முடியும்.
எனவே, A dynamic leader can lead the nation out of economic crisis என்பதுதான் சரியான வாக்கியம்.

சிப்ஸ்

# Night என்பது புரிகிறது. Knight என்றால்?

மறவன் அல்லது போர்வீரன். அரசரால் அல்லது அரசால் இப்படி அங்கீகரிக்கப்பட்டவர்.

# Kangaroo Court என்றால் என்ன?

கட்டப்பஞ்சாயத்து.

# Germination என்றால்?

விதைகள் வளரும் செயல்முறை.

(தொடர்புக்கு -
aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x