

கோபால்
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜயா தஹில்ரமானி மேகாலய உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட விவகாரம் நீதித் துறை சார்ந்த சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து நீதிபதிகளை நியமிப்பது, பணியிட மாற்றம் செய்வது, அவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கும் உச்ச நீதிமன்ற கொலீஜிய நடைமுறை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
கொலீஜியம்- அமைப்பு, பணிகள், அதிகாரம்
உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளையும் உயர் நீதிமன்றங்களின் இதர நீதிபதிகளையும் நியமிப்பது, பணியிட மாற்றம் செய்வது, பதவி உயர்வு அளிப்பது ஆகியவற்றுக்கான இறுதி அதிகாரம் படைத்த அமைப்பே கொலீஜியம். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நான்கு மூத்த நீதிபதிகளையும் சேர்த்து ஐந்து உறுப்பினர்களைக் கொண்டது கொலீஜியம் அமைப்பு.
இவர்கள் ஐவரும் கலந்தாலோசித்து வாக்கெடுப்பு நடத்தி, அதிக வாக்கைப் பெறும் முடிவுகளே கொலீஜியத்தின் முடிவாக அறிவிக்கப்படுகின்றன. நாட்டின் குடியரசுத் தலைவர்தான் நீதிபதிகளை நியமிப்பார் என்றாலும், கொலீஜியத்தின் இறுதிப் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவரால் நீதிபதிகளை நியமிக்க முடியும். நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் தொடர்பான கொலீஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசுக்குக் தலைமை நீதிபதி அனுப்புவார்.
மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளின் பின்னணி, தகுதி ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களை நீதிபதிகளாக நியமிப்பது குறித்த தனது ஏற்பு அல்லது மறுப்பையும் தெரிவித்து கொலீஜியத்தின் பட்டியலைத் திருப்பி அனுப்பும். அப்படி அனுப்புகையில் அரசு புதிதாகச் சில நீதிபதிகளின் பெயரைப் பரிந்துரைக்கலாம். ஆனால், இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொலீஜியத்துக்குத்தான். கொலீஜியம் அந்தப் பட்டியலை மீண்டும் அரசுக்கு அனுப்பியபின், குடியரசுத் தலைவர் அதைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும். அதேநேரம் அரசு தன் முடிவுகளைத் தெரிவிக்க காலக் கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்பதால் நீதிபதிகள் நியமனம் தாமதமடைய வழி உண்டு.
வித்திட்ட மூன்று வழக்குகள்
உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும்போது, தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால், நடைமுறையில் நீதிபதிகள் நியமன, பணியிட மாற்ற விவகாரங்களில் மத்திய அரசின் கை ஓங்கியிருந்தது. 1975-ல் நெருக்கடி நிலையின்போது அரசை எதிர்த்த நீதிபதிகளைத் தண்டிக்க பணியிட மாற்ற அதிகாரம் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் நியமன விவகாரத்தில் தலைமை நீதிபதிக்கும் அவர் வழியாக நீதித் துறைக்கும் முதன்மை அதிகாரம் இருக்க வேண்டும் என்ற கருத்து உருவானது.
இதைத் தொடர்ந்து 1982-ல் ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீதிபதிகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு இறுதி அதிகாரத்தை வழங்கியது. 1993-ல் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு தலைமை நீதிபதிக்கு இறுதி அதிகாரம் வழங்கும் தீர்ப்பை அளித்தது. 1993-ல் குடியரசுத் தலைவர் ’தலைமை நீதிபதியிடம் ஆலோசனையைப் பெற வேண்டும்’ என்பதற்கு விளக்கம் அளிக்கையில், தலைமை நீதிபதியின் இறுதி அதிகாரத்தை உறுதி செய்தது. இந்த மூன்று வழக்குகளும்1998-ல் இன்றைய கொலீஜியம் நடைமுறை உருவாகக் காரணமாக அமைந்தன.
மாற்றத்துக்கான முயற்சிகள்
கொலீஜிய நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லாததையும் கொலீஜிய நீதிபதிகள் தங்களுக்கு அணுக்கமானவர்களையே நீதிபதிகளாக நியமிக்கும் ஆபத்து இருப்பதையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்படப் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த விமர்சனங்கள் வலுவடைந்ததை அடுத்து 2014-ல் மத்திய அரசு, நீதிபதிகளை நியமிப்பதற்கு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் என்ற அமைப்பை உருவாக்குவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த ஆணையத்தை அமைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று 2015-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, தன் இறுதி அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டிக்கொண்டது.