Published : 22 Sep 2019 10:43 AM
Last Updated : 22 Sep 2019 10:43 AM

வாழ்ந்து காட்டுவோம் 24: பெண்கள் தங்கும் விடுதிகள் பாதுகாப்பானவையா?

ருக்மணி

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக, விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், பெண் குழந்தைகள், வளர்இளம் பெண்கள், பணிபுரியும் பெண்கள் ஆகியோரின் பராமரிப்புக்காகவும் பாதுகாப்புக்காகவும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

பொது விதிமுறைகள்

# கட்டிடங்களுக்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டிடங்களில் மட்டுமே விடுதி / காப்பகம் / அமைவிடம் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் விடுதி / காப்பகம் / அமைவிடம் போதிய பாதுகாப்பு, உரிய தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடியதாக இருக்க வேண்டும்.
# ஆண்/ பெண் குழந்தைகள் தங்கும் அமைவிடமாக இருப்பின் மாணவர்களுக்குத் தனியாகவும் பெண் குழந்தைகளுக்குத் தனியாகவும் கட்டிடங்கள் அமைய வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் மாணவரும் மாணவியரும் ஒரே கட்டிடத்தில் தங்க நேர்ந்தால் தனித் தனி அறைகளில் தங்க வைக்கப்பட வேண்டும்.
# வளரிளம் பெண்கள், பெண்களுக்கான விடுதி / காப்பகம் / அமைவிடங்களில் விடுதிக் காப்பாளர் / பொறுப்பாளர்களாகப் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
# 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக் காப்பாளர் இருக்க வேண்டும்.
# விடுதிகளில் தங்குகிறவர்களின் பாது காப்பு, நலன் கருதி தேவைக்கேற்ப 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
# ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருந் தால் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
# 50-க்கும் மேற்பட்டோர் இருக்கும் இல்லங்கள் / தங்குமிடங்களின் வாயில்களில் சிசிடிவி கேமரா, டிவிஆர் பொருத்தப்பட வேண்டும்.
# விடுதிக் காப்பாளர் / பாதுகாவலர், முன் அனுமதி பெறாமலோ மாற்று ஏற்பாடு செய்யாமலோ பணிக்கு வராமல் இருக்கக் கூடாது. இவர்கள் பணிக்கு வராத நேரத்தில் உரிய பொறுப்புள்ள ஆட்களை நியமிப்பதைச் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். விடுதிக் காப்பாளர் அல்லது துணை விடுதிக் காப்பாளர் எந்த நேரத்திலும் விடுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
# மேற்கண்ட அமைவிடங்களில் உள்ள பாதுகாவலர்கள், அவசர காரணமேதுமின்றிக் குழந்தைகள், வளரிளம் பெண்கள், பெண்கள் தங்கியுள்ள விடுதி கட்டிடங்களுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது. நுழை வாயிலின் அருகே அமைந்துள்ள அவர்களுக்கென அமைக்கப்பட்ட அறைகளில் மட்டுமே இருக்க வேண்டும்.
# அமைவிடங்கள் நான்குபுற சுற்றுச்சுவர்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும், உள்ளே - வெளியே செல்லும் வாயில்களில் தாழ்ப்பாளுடன் கூடிய கதவுகள் அமைக்கப்பட வேண்டும்.
# விடுதியில் தங்கியிருப்பவர்கள், விடுதியை விட்டு வெளியில் செல்லும் நேரம், விடுதிக்குத் திரும்பும் நேரம் ஆகிய வற்றைத் தினசரி வருகைப் பதிவேட்டில் விடுதிக் காப்பாளர் பதிவுசெய்ய வேண்டும். மேலும், விடுதியில் தங்கியிருப்பவர்கள் தூங்கச் செல் வதற்கு முன்பு கணக்கெடுக்கப்பட வேண்டும்.
# தங்கியிருப்பவர்களைச் சந்திக்க பார்வை யாளர்களாக அவர்களுடைய பெற்றோரையும் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
# நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வரவேற் பறையில் மட்டுமே பார்வையாளர்களைப் பாதுகாப்பாளர்களின் கண்காணிப்பில் அனுமதிக்க வேண்டும்.
# வெளி நபர்கள் கட்டிடத்தினுள் நுழைவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும்.
# இளம் குழந்தைகள், வளரிளம் பெண் களைக் காண வரும் பார்வையாளர்களின் சந்திப்பு கண்டிப்பாக விடுதிக் காப்பாளர் கண்காணிப்புக்கு உட்பட்டு நடைபெற வேண்டும்.
# சிறு வயது ஆண், பெண் குழந்தை களையும் வளரிளம் பெண்களையும் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு அனுப்பும் போது, அவர்களுடைய பெற்றோர் / பாதுகாப்பாளரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். தனியாகவோ வெளியாட்களுடனோ அனுப்பக் கூடாது.
# விடுதிக் காப்பாளர் / பாது காவலர், பார்வையாளர்களை விடுதிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.

1. பார்வையாளர் புத்தகம் விடுதிக் காப்பாளரால் பராமரிக்கப்பட வேண்டும்.
2. பார்வையாளர் புத்தகத்தில் பெயர், முகவரி, உறவு முறை, சந்திப்புக்கான நோக்கம் ஆகியவை பதிவுசெய்யப்பட்டு பார்வையாளர் கையொப்பம் இட வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவரால் மேலொப்பம் இட வேண்டும்.
3. விடுதிக் காப்பாளர், பாதுகாவலர் ஆகியோருக்குப் படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
4. பெற்றோர், அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களுக்கும் படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
5. விடுதிக் காப்பாளர், பாதுகாவலர்களது தொலைபேசி எண், முகவரி ஆகியவை காப்பகத்தின் வாயிலில் எளிதில் காணக் கூடிய வகையில் வைக்கப்பட வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

1. விடுதி / இல்லம் / அமைவிடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவுசெய்வதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
2. பதிவானவற்றின் பட்டியல் முறையான ஆய்வு, கண்காணிப்புக்காக மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்ப டைக்கப்பட வேண்டும். காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணியில் இத்தகைய அமைப்புகளை, குறிப்பாக இரவு நேரத்தில் கண்காணிக்க மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். மாதத்துக்கு ஒரு முறை யேனும் ரோந்துப் பணி பதிவேடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
3. மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாதாந்திர சட்டம் - ஒழுங்கு கூட்டத்தில் இவற்றின் பாதுகாப்பு, நலன் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்..
4. விடுதிகள் / காப்பகங்கள் / அமைவிடங் களின் உரிமையாளர்களுக்குப் பாதுகாவலர் நியமனத்தில் உதவிடும் வகையில், மாவட்டத்தில் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் பட்டியலைக் காவல் துறை தயாரிக்க வேண்டும்.
5. அரசால் வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கண்ட இல்லங்கள் பின்பற்றுகின்றனவா என்பதைக் குழந்தைகள் நலக் குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
6. விடுதிகள் / இல்லங்கள் / அமைவிடங் களில் தங்கியிருப்பவர்கள் உடல்ரீதியாகவோ உளரீதியாகவோ பாதிக்கப்படுவதைத் தடுப்பது கண்காணிப்பு அதிகாரிகளால் உறுதி செய்யப்பட வேண்டும்.
7. பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய நிலையைக் கருத்தில்கொண்டு, மாவட்ட ஆட்சியரால் இந்த இல்லங்கள் வகைப்படுத்தப்பட்டுத் தேவையான கண்காணிப்பு இயக்கமுறை வடிவமைக்கப்பட வேண்டும்.

செப்டம்பர் 24, 1862: அமெரிக் காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்; அமெரிக்காவில் கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற இரண்டு முதன்மைகளுக்குச் சொந்தக்காரரான வினிஃப்ரெட் எட்கெர்டன் மெர்ரில் பிறந்தநாள்.

(உரிமைகள் அறிவோம்)
கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x