Published : 22 Sep 2019 10:43 AM
Last Updated : 22 Sep 2019 10:43 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 24: வனத்துக்குள்ளே திருவிழா

பாரததேவி

வண்டி சத்தம் கேட்டதுமே வனத்துக்குள் உள்ள பளியர்களெல்லாம் ஓடிவந்தார்கள். இப்படி வண்டிகட்டி கோயிலுக்கு வரும் மனிதர்களை பளியர்கள், நாட்டார்கள் என்றுதான் சொல்வார்கள். அவர்களது முகங்களில் மகிழ்ச்சி பூத்துக்கிடந்தது.

தினமும் பழங்களையும் பூமிக்குள் தேடித் தேடி எடுக்கும் கிழங்குகளையும் தின்று தின்று அலுத்துப்போய் இருக்கும் பளியர்களுக்கு நாட்டார்களின் வருகை ரொம்ப சந்தோசத்தைக் கொடுக்கும். ஏனென்றால், வருகிறவர்கள் வயிறு நிறையச் சோறு போடுவார்கள். மிச்சம் மீதி இருக்கும் குழம்பு, சோறு எல்லாவற்றையும் தங்கள் வீட்டுக்குக் கொண்டுபோகக் கூடாதென்பதால் இவர்களுக்கே கொடுத்துவிடுவார்கள்.

நிலக்கடலை, சீனிக்கிழங்கு, எள் என்று கொண்டுபோய்க் கொடுப்பார்கள். ஆனாலும், பளியர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். இவர்களுக்குச் சோறாக்க விறகு, சாப்பிடுவதற்கு இலை, மலைத்தேன், வைரமாய் மரத்தில் விளைந்த ஏர்க்கலப்பை, சாட்டைகளுக்கான கம்புகள் இப்படி ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதுபோல் பலவற்றையும் கொடுப்பார்கள்.

விழித்த ஆடுகள்

வண்டியிலிருந்து எல்லோரும் இறங்க, இவ்வளவு நேரமும் சுமையைத்தாங்கி வந்த காளைகள் பெருமூச்சுவிட்டன. சிறிதாகத் தேங்கிக் கிடந்த சுனையில் காளைகளுக்குத் தண்ணீர்விட்ட ஆண்கள், மாடுகளைக் கயிறு நீளவிட்டுக் கட்டிப்போட்டார்கள். இதற்குள் பளியர் இருவர் இலை, தழைகளோடு புல்லையும் கொண்டுவந்து போட்டார்கள். தங்களைச் சுமந்துவந்த காளைகளைக் கால் வீசி அந்த வனத்தில் கிடக்கும் புல்லை மேயவிடலாம். ஆனால், எந்த விலங்காவது அடித்துக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது?

ஆண்கள் அடுப்புக் கூட்ட, பெண்கள் குளிக்கப் போனார்கள். ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. சில இளவட்டங்கள் மலை உச்சியில் இருக்கும் அருவிக்கே குளிக்கப் போனார்கள். இவர்கள் வண்டியின் பின்னால் கட்டிவந்த ஒன்பது கிடாய்களும் தலை நனைத்து கழுத்தில் மாலையோடு ‘திருதிரு’வென விழித்தவாறு அப்பாவிகளாக நின்றன. அவற்றுக்கு முன்னாலும் கொஞ்சமாகப் புல்லைப் போட்டுவைத்தார்கள் பளியர்கள்.

மாடசாமியின் தயக்கம்

ஆடு வெட்டும் மாடசாமி தன் நெஞ்சுக்கு உரம் ஏற்றியவாறு மீசையைத் திருக்கிவிட்டுக்கொண்டு இருந்தான். இதே ஆடுகள் கறிக்கடையில் நின்றிருந்தால் அவனுக்கு எந்தப் பயமும் கிடையாது. விடியும் முன்பே கொஞ்சம் கள்ளை ஊற்றிக்கொண்டு வீச்சரிவாள் வீசி இருபது ஆடுகள் என்றாலும் வெட்டிவிடுவான். ஆனால், இப்போது அவனுக்குள் கள் இல்லை என்பதால் கொஞ்சம் தயக்கமாயிருந்தது. அதுவும் கோயிலுக்கு வெட்டும் கிடா கொஞ்சம் கை தவறினாலும் ஆடு நன்றாக வெட்டுப்படாமல் தொங்கு கிடாயாகப் போய்விடும்.

அப்படித் தொங்கு கிடாயாகப் போய்விட்டால் மறுவருசம் ஒரு கிடாய்க்கு இரண்டு கிடாயாக வெட்ட வேண்டும். கிடாய்க்காரர்களிடம், “ஒரு கிடாய்க்கு ரெண்டு கிடாயாக வெட்ட வச்சிட்டானே பாவிப்பய. நான் கிடக்கிற கிடையில இன்னொரு கிடா வேற விலைக்கு வாங்கி வளக்கணுமே துட்டுக்கு எங்க போறது?” என்று அங்கலாய்த்துத் தீர்த்துக் கொட்டுவார்கள். அதோடு ஊர் குமரிப் பெண்களிடமும் அவனுக்கு மதிப்பிருக்காது. எங்கேயாவது அவன் சத்தம் கேட்டால் போதும்; “தொங்குகிடா வெட்டுனவனுக்கு வாய்வீச்சப் பாரேன்” என்று பொரணி பேசுவார்கள்.

மாடசாமி நிமிர்ந்து பார்த்தான். குமரிப் பெண்கள் எல்லாம் மஞ்சள் பூசிய முகத்தோடு இவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் அவனுக்குள் வீரம் வந்துவிட்டது. உடலில் பலமேற்றி, கைகளில் நரம்பை இறுக்கிக்கொண்டு வந்தவன் சடார் சடாரென்று அத்தனை கிடாய்களையும் வெட்டித்தள்ளினான்.
சற்றுமுன் அப்பாவிப் பார்வை பார்த்துக்கொண்டிருந்த ஆடுகளெல்லாம் கால்களை விரித்தவாறு வெறித்த கண்களுடன் தரையில் விழுந்துகிடந்தன. வெறும் கட்டாந்தரை இப்போது செம்மண் தரையாக நிறம் மாறிக்கிடந்தது.

சீனியம்மாளின் ஆசை

சீனியம்மாள் பரபரத்துக்கொண்டிருந்தாள். கறியின் ருசிக்காக அவள் நாக்கு அலைந்தது. எல்லோரும் சாவகாசமாக இருப்பதாகவும் தன்னைவிட்டால் இப்போது ஒரே வீச்சில் எல்லா வேலையையும் முடித்துவிடுவோம் என்று இங்கும் அங்குமாக அலைந்தாள். அங்கிருக்கும் பெரிய கல்லைக் காட்டி, “இந்தக் கல்ல எடுத்து அடுப்புக்கூட்ட வச்சிக்கோங்க” என்று சொல்ல, “நீ பேசாம போத்தா.

எந்தக் கல்ல எடுத்து எப்படி அடுப்பக் கூட்டணுமின்னு எங்களுக்குத் தெரியு”மென்று வேட்டயன் கொஞ்சம் எரிச்சலோடு சொல்ல அவள் பேசாமல் போய் உட்கார்ந்துவிட்டாள். வந்ததுமே ஓடுகிற ஆற்றில் மூழ்கி குளித்துவிட்டதால் வனத்தின் அடர்ந்த காற்றுக்கு அவள் மேனி ‘கிடுகிடு’வென நடுங்கியது. ஆற்றில் சுழித்துச் சுழித்து ஓடிய நீரில் மீன்கள் நெருக்கமாய்ச் சலசலத்துக் கரையேறி வெள்ளித் துண்டுகளாய் மின்னி மறைந்தன.

அதைப் பார்க்கப் பார்க்க சீனியம்மாளுக்கு ஆசைக் கயிறு விட்ட பம்பரமாய்ச் சுழற்றி எடுத்தது. அவளுக்கு மட்டும் அந்த ஆற்றில் மீன் பிடிக்கும் அதிகாரம் கொடுத்தால் போதும். தன் சேலை முந்தானையை விரித்து ஒரு ஊருக்கே காணும் அளவுக்கு மீனைப் பிடித்துக் குவித்து விடமாட்டாளா?

ஆனால், ஏனோ தெரியவில்லை. வனங்களுக்குள் இருக்கும் எத்தனையோ கோயில்களுக்கு இவள் போயிருக்கிறாள். எல்லா இடங்களிலுமே ஆறுகள் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அந்த ஆற்று நீரில் மீன்கள் வாலைச் சுழற்றியவாறு நீந்தி அலையும். ஆனாலும், அவற்றைப் பிடிக்கக் கூடாது என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. அந்த மீன்களைப் பிடித்தால் அங்கேயிருக்கும் குலதெய்வம் மீன் பிடித்தவரின் கண்களைக் குருடாக்கிவிடும் என்று சொல்லிவிடுவார்கள்.

சொல்வதோடு மட்டுமல்ல; யாரும் அந்த மீன்களைக் கண்டுகொள்வதுமில்லை. சீனியம்மாளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. ஆற்றில் துள்ளும் மீன்களில் ஒன்றையாவது பிடிக்க ஆசை. ஆனால், அங்கேயிருக்கும் ஆட்கள் இவளைச் சும்மா விடுவார்களா? அவள் தன் ஆசையை அடக்கிக்கொண்டு எரியும் அடுப்பின் முன்னால் வெடவெடக்கும் குளிருக்கு ஒடுங்கியபடி உட்கார்ந்திருந்தாள்.

நெல்லுச் சோறும் கறிக்குழம்பும்

ஒருவழியாகச் சாப்பாடு தயாராகி எல்லோரும் குளித்து முடித்து தேங்காய், பழத்தோடு போய் சாமி கும்பிட்டு வந்தார்கள். எல்லாருடைய நெற்றியிலும் திருநீறு மணந்தது. மண்குடிசையில் சிறுவடிவில் பிடித்துவைத்த சிறு மண் சிலைகளே குலதெய்வங்கள்.

ஆண் தெய்வமாக இருந்தால் இடுப்பில் சிறிய கரையிட்ட பட்டு வேட்டி, திருக்கிய பெரிய மீசை, முதுகுப் பக்கத்தில் பெரிய அரிவாள். பெண்ணாக இருந்தால் அகல சரிகையோடு மஞ்சள் பட்டுச்சேலை, தலையில் பெரிய கொண்டை, மண் வளையல்கள். பந்தியில் வரிசையாய் எல்லாரும் உட்கார்ந்தார்கள். இதற்காகத்தானே சீனியம்மாள் காத்திருந்தாள்? முதல் பந்தியில் முதல் ஆளாக உட்கார்ந்துவிட்டாள்.

ஒரு அகப்பைச் சோற்றை அவள் இலையில் வைக்கும்போதே நெல்லுச் சோற்றுக்குப் பேயாய்ப் பறந்தவள் யாருக்கு வேணும் இந்தச் சோறு என்று ஒதுக்கி வைத்தாள். இலை நிறைய கறியை வாங்கினாள். பட்டையும் பெருஞ்சீரகமும் வைத்து அரைத்ததில் கறி மணந்தது. தன் பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்கிறார் என்றுகூடப் பார்க்காமல் கறியை அள்ளி அள்ளித் தின்றதோடு பக்கத்தில் வைத்திருந்த கலயத்தையும் நிரப்பினாள்.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x