Published : 22 Sep 2019 10:43 AM
Last Updated : 22 Sep 2019 10:43 AM

அங்கீகாரம்: வாழ்வு இனிது - தமிழ் மரபுக்கு மரியாதை

மிது கார்த்தி

தமிழக ஊர்கள் சிலவற்றின் பெயரைக் கேட்டதுமே அந்த ஊர்களின் தயாரிப்புகள் மனத்திரையில் தோன்றும். அப்படியான நான்கு தயாரிப்புகளுக்கு அண்மையில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காரைக்குடி கண்டாங்கிச் சேலை, திண்டுக்கல் பூட்டு, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, பழநி பஞ்சாமிர்தம் ஆகிய நான்கு பாரம்பரிய தயாரிப்புகளுக்குப் ‘புவிசார் குறியீடு’ வழங்கப்பட்டிருக்கிறது.

காரைக்குடி கண்டாங்கிச் சேலை

‘கண்டாங்கி... கண்டாங்கி... கட்டி வந்த பொண்ணு...’ எனத் திரைப் பாடல்கள் தொடங்கிக் கவிதைகள்வரை கண்டாங்கியைப் புகழாதவர்கள் குறைவு. தமிழகத்தைத் தாண்டி இந்தியாவின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. செட்டிநாடு எனப்படும் காரைக்குடிதான் இந்தச் சேலையின் பிறப்பிடம். கண்டாங்கிச் சேலையின் வயது 300 எனச் சொல்கின்றன செவிவழித் தகவல்கள். கண்டாங்கிச் சேலையின் தனித்த அடையாளம் இரு பக்கங்களிலும் உள்ள ‘பெரிய பார்டர்’களே. ‘கண்டாங்கி பார்டர்’ என்றே இதற்குப் பெயர்.

‘கெண்ட அங்கி’ (கெண்டைக்கால் அங்கி) என்று அழைக்கப்பட்டுப் பின்னாளில் ‘கண்டாங்கி’ என்று மருவியதாகக் கூறப்படுகிறது. சேலையின் நடுவே விதவிதமான கட்டங்கள், கோபுரம், மயில் போன்ற டிசைன்கள் இந்தச் சேலையை அழகாகக் காட்டும். தடித்த பருத்தியில் தரமாக நெய்யப்படுவதே இந்தச் சேலையின் தனிச்சிறப்பு. காரைக்குடியில் மட்டுமே புகழ்பெற்றிருந்த இந்தச் சேலைகள் நகரத்தார் சமூகத்தினர் மூலம் ஊரெங்கும் புகழ்பெற்றன. வேதிப்பொருள் கலப்பின்றிக் கண்டாங்கிச் சேலைகள் நெய்யப்படுவதும் இதன் பெருமைகளுள் ஒன்று. தமிழகத்தின் பாரம்பரிய சேலைகளுள் ஒன்றாகிவிட்ட இந்தச் சேலையை, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ்ப் பெண்களும் விரும்பி அணிகின்றனர்.

திண்டுக்கல் பூட்டு

திண்டுக்கல் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருபவை பூட்டும் பிரியாணியும்தான். பிரசித்திபெற்ற திண்டுக்கல் பூட்டை வைத்து அந்த ஊரை ‘லாக் சிட்டி’ என்றும் அழைப்பார்கள். குண்டு மாங்காய் வடிவிலான திண்டுக்கல் பூட்டை ஒரு காலத்தில் எல்லோர் வீட்டிலும் பார்க்க முடிந்தது. திண்டுக்கல் பூட்டு நூற்றாண்டுப் பாரம்பரிய பெருமைகொண்டது.

திண்டுக்கல்லில் பூட்டு தயாரிக்கும் தொழில் 1900-ம் ஆண்டுவாக்கில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் காலத்திலேயே 50 வகையான பூட்டுகள் வடிவமைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால், இவற்றில் மாங்காய் வடிவிலான பூட்டுகளே திண்டுக்கல் பூட்டின் மகிமையை ஊர்தோறும் பறைசாற்றின.

திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள நாகல் நகர், நல்லம்பட்டி, குடைபாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பூட்டுத் தொழிற்கூடங்கள் செயல்பட்டுவந்தன. தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. திண்டுக்கல் பகுதியில் இரும்பு அதிகமாகக் கிடைத்ததாலேயே இந்தத் தொழிலில் பலரும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது நவீனப் பூட்டுகள் வந்துவிட்டாலும் பாரம்பரியமிக்க திண்டுக்கல் பூட்டுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. திண்டுக்கல் பூட்டு வகைகளில் டெலோ பூட்டின் சாவி தொலைந்துவிட்டால், பூட்டை உடைக்கத்தான் வேண்டும் என்பதிலிருந்தே திண்டுக்கல் பூட்டின் மகிமையை அறிந்துகொள்ளலாம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா

ஊரெல்லாம் பால்கோவா கிடைத்தாலும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவுக்கு நிகராகாது. எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாதது இந்தப் பால்கோவா.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆண்டாள் கோயிலில் பாலையும் வெல்லத்தையும் கலந்து, திரட்டுபாலைப் படைத்து வழிபட்டுவருகிறார்கள். அந்த வழியாகவே ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா நிலைபெற்றதாக நம்பப்படுகிறது. என்றாலும், 1940-களுக்குப் பிறகே ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா புகழ்பெறத் தொடங்கியது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பால் பண்ணைகள் அதிகம். அதிகமாகக் கிடைக்கும் பாலைக் கொதிக்கவைத்து, அதனுடன் சர்க்கரையைக் கலந்து திரட்டி செய்யப்படுவதே ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா. இந்த ஊரில் பல கடைகளிலும் தினந்தோறும் காலை, மாலை இரு வேளைகளில் பால்கோவா சுடசுடச் தயாரிக்கப்படுகிறது.
தொடக்கத்தில் பால்கோவா மட்டுமே தயாரிக்கப்பட்டுவந்தது. தற்போது பால் அல்வா, பால் பேடா, பால் கேக், கேரட் பால்கோவா எனப் பல விதங்களில் பால்கோவா தயாராகிறது.

பழநி பஞ்சாமிர்தம்

அறுபடை வீடுகளில் ஒன்று, பழநி தண்டாயுதபாணி கோயில். முருகனுக்கு அறுபடை வீடுகளிலும் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டாலும், பழநி பஞ்சாமிர்தம் தனித்த பெருமை கொண்டது. பழநியில் முருகனுக்குப் படைக்கப்படும் பஞ்சாமிர்தம், பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பார்த்ததுமே நாவூறவைக்கும் பழநி பஞ்சாமிர்தம் தனித்த ருசி கொண்டது.

இது நோய்களைத் தீர்க்கும் மருத்துவக் குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. அதற்கேற்ப மலை வாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை, பசு நெய், தேன், பேரீச்சம்பழம், ஏலக்காய் ஆகியவற்றைக் கொண்டே பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இவற்றுடன் கற்கண்டு, உலர் திராட்சை ஆகியவையும் சேர்க்கப்பட்டு இதன் ருசி கூட்டப்படுகிறது.
ஒரு சொட்டுத் தண்ணீர்கூட சேர்க்காமல் செய்யப்படுவதே இதன் தனிச் சிறப்பு. பஞ்சாமிர்தத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர் கலந்தாலும் கெட்டுப்போய்விடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x