Published : 21 Sep 2019 11:41 AM
Last Updated : 21 Sep 2019 11:41 AM

தரமான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்

சு. முத்துக்குமார்

வெண்மைப் புரட்சிக்குப் பிறகு நமது நாட்டினப் பசுக்கள் அயல் நாட்டுக் கலப்பினப் பொலிமாட்டின் உயிரணுவைக்கொண்டு கருத்தரித்தலுக்கு உட்படுத்தப்பட்டு கலப்பினப் பசு உருவாக்கப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட கலப்பினப் பசுவின் உற்பத்தித்திறன் உயர்ந்ததன் வாயிலாகப் பால் உற்பத்தியில் உயர்நிலையை நம் நாடு அடைந்தது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பால், அதிக எண்ணிக்கையிலான பசுவிலிருந்து பெறப்படுவதால் அவற்றின் தரம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

இயற்கையாகவே பால் எளிதில் கெட்டுவிடும் தன்மை கொண்டது. இது ஒரு புறம் இருக்க, நமது நாட்டின் உட்புற சாலை வசதிகள், இடைத்தரகர்கள், பால் பதனிடும்/குளிரூட்டும் வசதி இல்லாமை, எளிதில் சந்தைப்படுத்தும் வாய்ப்பு இல்லாமை போன்றவை பாலின் காத்துக்கொள்ளும் திறனைப் பாதிப்பதுடன் அயல்நாட்டுக்குச் சந்தைப்படுத்தும் வாய்ப்பையும் பாதிக்கிறது. ஆகவே கறவை மாடு வளர்க்கும் பண்ணையாளர்கள், கையாள்பவர்கள் ஆகியோர் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி தரமான, தூய்மையான பால் உற்பத்தி செய்து பயன்பெற முடியும்.
தூய்மையான பால் உற்பத்தியில் பால் கறக்கும் இடம், கறவை மாடு, பால் கொள்முதல் செய்யும் இடம், பால் கறப்பவர் ஆகியவற்றின் தூய்மை ஆகிய அம்சங்கள் முக்கியமானவை.

பால் கறக்கும் இடம்/சூழல்

* பால் கறக்கும் இடத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
* பால் கறக்கும் இடத்தைச் சுத்தம் செய்த பிறகு தூசி பறக்காமல் இருக்க நீர் தெளிப்பது அவசியம்.
* பால் கறக்கும் இடத்துக்கு அருகில் எந்த விதப் புகை மூட்டமோ (அ) துர்-நாற்றமோ இருக்கக் கூடாது.
* பால் கறக்கும்போது மாட்டுக்கு ஊறுகாய்ப்புல், அதிக ஈரப்பதம் மிகுந்த தீவனங்கள் போன்றவற்றைக் கொடுப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
* மாட்டுக்கொட்டகையில் போதிய கழிவுநீர்/சாக்கடை வெளியேற வசதி, போதிய வெளிச்சம், காற்றோட்டம் ஆகியவை நிச்சயம் வேண்டும்.
* பால் கேனின் சுத்தத்தை உறுதிசெய்ய வேண்டும்
* தொற்று நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசி போட வேண்டும். மாதம் இருமுறை உண்ணி நீக்கம் செய்ய வேண்டும்.
* பால் வண்டி வரும் நேரத்துக்கு ஏற்றவாறு பால் கறவை நேரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.
* உலர் தீவனம், அடர் தீவனம், பச்சைத் தீவனம் போன்ற ஆரோக்கியமான தீவனம் கொடுப்பதை உறுதிசெய்ய வேண்டும்
* முதல் தர சரிவிகிதத் தீவனம் கொடுப்பதன் மூலம் தரமான பால் உற்பத்தி செய்யலாம்.
* சரியான விகித்தில் தண்ணீர் கொடுக்க வேண்டும், இல்லையேல் எப்போதும் தன்ணீர் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.
* பால் கறந்த பின்பு கன்றைப் பால் ஊட்ட விடுவதைத் தவிர்ப்பதன் மூலம் மடிநோய் வருவதற்கான வாய்பைக் குறைக்கலாம்.
* பூஞ்சைக் காளான் பாதித்த தீவனத்தைக் கொடுப்பதைத்
தவிர்க்க வேண்டும்.
* பால் கறந்து முடித்த அரை மணிநேரத்துக்குள் கொள்முதல் நிலையத்துக்குச் செல்ல வேண்டும். கோடைக்காலத்தில் கறவை மாட்டை நிழலில் கட்டுவது சிறந்தது.

கறவை மாடு

*பால் கறக்கும் முன் மாட்டின் கால், வாலைக் கட்டிவைக்கலாம்.
*பால் மடியை கிருமி நாசியைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் .
* பால்மடியைப் பால் கறக்கும் முன் வெதுவெதுப்பான நீரால் கழுவித் தூய்மையான துணியைக் கொண்டு துடைக்க வேண்டும்.
* பால் காம்பைப் பால் கறந்த பிறகு அயோடின் கரைசலில் நனைக்க வேண்டும்.
* பால் கறந்த பின்பு தீனி வைக்க வேண்டும்.
* நோயுற்ற மாட்டைத் தனியே பிரித்துப் பராமரிக்க வேண்டும்.
* மடிநோய் வந்த மாட்டைக் கடைசியாகக் கறக்க வேண்டும்.

பால் கொள்முதல் செய்யும் இடம்

* பால் கேனைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* பால் மாணி மற்றும் LR-ஜாரைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
*பாலில் கலப்படம் செய்யக் கூடாது.
* பால் சேகரிக்கும் தட்டைக் (டிரே) கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* பால் மாணி, பால் வடிகட்டி ஆகியவற்றைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
* பால் மாதிரியைச் சரியாக எடுத்து அனுப்ப வேண்டும்.
* தாமதம் இல்லாமல் பால் வண்டியை அனுப்ப வேண்டும்.

பால் கறப்பவர்

* பால் கறப்பவர் எந்த விதத் தொற்று நோய்க்கும் ஆட்படாமல் இருப்பது மிகவும் அவசியம்.
* பால் கறப்பவர் நோய் தொற்றைத் தவிர்க்க பாதுகாப்பு ஆடை அணிந்தால் சிறந்த பராமரிப்பாக இருக்கும் (குல்லாய் & முகமூடி )
* பால் கறக்கும்போது புகைப் பிடிப்பது, வெற்றிலை போடுவது ஆகிய செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
* பால் கறப்பவர் தனது கை நகத்தை ஒட்ட வெட்டி, பால் கறக்கும் முன் கையை சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* முழுக்கை முறையில் (Fullhand Method) பால் கறக்க வேண்டும்.
* பாலை 3-5 நிமிடத்துக்குள் மடியில் இருந்து கறந்துவிட வேண்டும்.
* பால் கறக்கும்போது கையை ஈரப்படுத்த பாலில் கையை நனைப்பதோ தூய்மையற்ற எண்ணெயில் நனைப்பதோ கூடாது.

* பால் கறக்கும்போது முதலில் கறக்கும் நான்கு சொட்டுப் பாலைக் (எல்லாக் காம்பிளிருந்தும் ) கீழே விடவேண்டும்.
* வயது குறைந்த மாட்டை முதலில் கறக்க வேண்டும். வயதான மாட்டைக் கடைசியாகக் கறப்பது நல்லது.
* கடைசியாகப் பால் கறக்கும்போது பொருவிரல், ஆள்காட்டி விரல் கொண்டு பால் கறப்பதால் அதிக அளவில் கொழுப்புச்சத்தைப் பெற முடியும்.

கட்டுரையாளர்,
கால்நடை மருத்துவர்,
வேளாண்மை அறிவியல் நிலையத் தொழில் நுட்ப வல்லுநர்
தொடர்புக்கு:
99766 45554.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x