Published : 21 Sep 2019 11:17 AM
Last Updated : 21 Sep 2019 11:17 AM

விதை முதல் விளைச்சல் வரை 01: கவனிக்க வேண்டிய மண் வளம்

சொ.பழனிவேலாயுதம், ‘பூச்சி’ செல்வம்

இன்றைக்குக் கிராமத்தில் பரம்பரையாக வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுவரும் உழவர்கள் தவிர, நகர்ப்புறங்களிலிருந்தும் படித்த இளைஞர்கள் வேளாண்மையை முழு நேரத் தொழிலாகவும், அதுவும் இயற்கை வேளாண்மையை நாடி வந்த வண்ணமுள்ளனர்.

இந்நிலையில் வேளாண்மையில் விதை முதல் விளைச்சல்வரை பல்வேறு பயிர்களில் சாகுபடி செய்யும்போது கவனிக்கப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள், ஏற்படும் இடர்ப்பாடுகள், அவற்றை நீக்க எடுக்க வேண்டிய வழிமுறைகள், விளைச்சலைச் சந்தைப்படுத்துதம் வழிமுறைகள் ஆகியவற்றை உழவர்களுக்கு எளிதாக எடுத்துச்சொல்வதே இத்தொடரின் நோக்கம். நிலம், உழவு, விதை, விதைப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம், களையெடுத்தல், பூச்சி-நோய் நிர்வாகம், அறுவடை, அறுவடைக்குப்பின் உள்ள தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் இத்தொடர் அமையும்.

வேளாண்மைக்கு அவசியம் தேவைப்படுவது நிலம், நீர், காற்று, சூரிய வெளிச்சம் ஆகியவை. நிலம் என்பது ஒரு பகுதியில் அமைந்துள்ள மண்தான். மண்ணில் பல வகை உண்டு. செம்மண், கரிசல் மண், வண்டல் மண், மணல் கலந்த குறு மண், சரளை மண், களி மண், களி கலந்த குறு மண் ஆகியவை அவற்றின் இயற்பியல் தன்மையை அல்லது வெளிப்புறத் தோற்றத்தை அடிப்படையாகக்கொண்டு அடையாளம் காண்கிறோம்.

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு குண நலன் உண்டு. ஒவ்வொரு மண்ணிலும் குறிப்பிட்ட பயிர், செழுமையாகவும் சில பயிர்களின் வளர்ச்சி குறைவாகவும் காணப்படும். செம்மண்ணை எடுத்துக்கொண்டால் இம்மண்ணில் ஆண்டுப் பயிர்களான நிலக்கடலை, வாழை போன்றவையும், கொய்யா, மா, எலுமிச்சை போன்ற பல்லாண்டுப் பயிர்களும் நன்கு வளரும். செம்மண் நிலம் நல்ல குணநலன்களைக் கொண்ட செழிப்பான மண். எந்த ஒரு மண் வகையிலும் நுண்ணுயிரிகளின் பங்கு அதிகமாகி அங்கத்தன்மை (கரிமத்தன்மை) 3 சதவீதம்வரை இருந்தால் அந்த மண் வளமான மண்.

அங்கத்தன்மை தற்போது பரவலாகக் குறைவாகக் காணப்படுகிறது. மண் வளத்தைப் பேணாமல் அதிக வேதி உரங்களைத் தேவைக்கு அதிகமாக இடுவது, குறைந்தது மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நிலத்தை ஆழமாக உழாமல் இருப்பதால் கடினப்பாறை உண்டாவது, நிலச்சரிவு, அதிக மழையின் காரணமாக மேல் மண் அடித்துச் செல்லப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்ககத்தன்மை அல்லது கரிம வளம் குறைந்து காணப்படுகிறது. தற்போதைய மண்ணில் சராசரியாக 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையே அங்கத்தன்மையே இருக்கிறது.

என்றாலும், அதிக அளவு இயற்கை உரங்களை நிலத்துக்கு இடுதல், நிலத்தை மூன்று ஆண்டுக்கு ஒருமுறை சட்டிக்கலப்பைக் கொண்டு ஆழமாக உழுதல், புஞ்சை நிலங்களில் ஆட்டுக் கொட்டில்கள் அமைத்தல், நஞ்சை நிலங்களில் தழை உரங்களை வளர்த்துப் பின்னர் அவற்றை மடக்கி உழுதல், மண்புழு உரம், பயிர்க்கழிவு, கோழி எரு, ஊட்டமேற்றிய தொழு உரம், உயிர் உரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவை மண் வளத்தையும் கரிமத்தன்மையும் கூட்டும்.

கரிசல் மண்ணில் மிளகாய் (வற்றலுக்கானது), கொத்தமல்லி, சோளம், மக்காச்சோளம், கம்பு, அனைத்து சிறுதானியங்கள், பல்லாண்டுப் பயிர்களாக சப்போட்டா, கொய்யா, மூலிகைப் பயிர்களான அவுரி போன்றவை நன்கு வளரும். வண்டல் மண், மணல் கலந்த குறுமண் ஆகியவற்றில் நெல், வாழை, கரும்புப் பயிர்கள் நன்கு வளரும். களிமண் களி கலந்த குறு மண், இருபொறை மண் ஆகியவற்றில் காய்கறிப் பயிர்களான சேம்பு, கரணை, சிறுகிழங்கு, இதரப் பயிர்கள் நன்கு வளரும்.

மண்ணின் இயற்பியல் தோற்றத்தின் அடிப்படையிலும், பல்லாண்டுக் காலமாக உழவர்கள் பயிர்செய்து பலன் பெற்றதன் அடிப்படையிலும் இந்த மண்ணில் இந்தப் பயிர் அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடியது. இந்தப் பயிர் குறைவான விளைச்சலைக் கொடுக்கக் கூடியது எனப் பிரித்தறிய முடிகிறது.

சொ. பழனிவேலாயுதம், மதுரை வேளாண்மை துணை இயக்குநராகப் (மாநிலத் திட்டம்) பணியாற்றி வருகிறார். நீர்ப் பற்றாக்குறை உள்ள தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பசுமைக் குடில் மூலம் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டவர். உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் காய்கறி சாகுபடியை ஊக்குவித்து 'தூத்துக்குடி அம்மா பண்ணை பசுமை அங்காடி'யை மாநில அளவில் முன்மாதிரியாக்கியவர்.

‘பூச்சி’ செல்வம் என்று அறியப்படும் நீ.செல்வம், மதுரை வேளாண்மை உதவிய இயக்குநராகப் (பயிர்க் காப்பீடு) பணியாற்றிவருகிறார். மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடக மாநில வேளாண் அலுவலர்களுக்கு வயல்வெளிப் பயிற்சி அளித்தவர். சீனா, தஜிகிஸ்தான், மொசாம்பிக், தான்சானியா ஆகிய நாடுகளின் பருத்தி வயல்வெளி ஆலோசகர்களுக்கு நெதர்லாந்தைச் சோ்ந்த பன்னாட்டு அரசுசாரா நிறுவனம் சார்பில் தொழில்நுட்ப ஆலோசனைப் பயிற்சியளித்தவர்.

இந்தியாவில் பிரபலமான பழங்களில் ஒன்று வாழைப்பழம். சுமார் 20 வகையான வாழைப்பழங்கள் விளைகின்றன. பூவன், கற்பூரவல்லி, நேந்திரம், மொந்தன், தெல்லச் சக்ரா போன்றவை தென் மாநிலங்களில் விளைகின்றன.

கட்டுரையாளர்கள்,
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x