Published : 18 Sep 2019 01:13 PM
Last Updated : 18 Sep 2019 01:13 PM

கதை: குறும்பும் சைக்கிளும்

சூரியனும் சந்திரனும் இரட்டைக் குழந்தைகள். இரண்டு பேரும் சரியான இரட்டை வால்கள். குறும்புகளுக்குப் பெயர் பெற்றவர்கள். இப்போது நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி என்னதான் குறும்பு செய்வார்கள்? இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். காரணத்தைக் கேட்டால் எல்லோருக்கும் சிரிப்பாக இருக்கும். யார் முதலில் குளிப்பது, யார் முதலில் அம்மாவைத் தொடுவது, யார் எவ்வளவு தூரத்துக்குப் பந்தைத் தூக்கி எறிவது, ஒருவரின் பென்சிலை ஒளித்து வைப்பது, அப்பாவின் பைக்கில் ஏறிக்குதித்து விளையாடுவது, அம்மா வளர்க்கும் மீன்களுக்குத் தீனி போடுவது, சாப்பிடாமல் அம்மாவை அலைக்கழிப்பது என்று எண்ணற்ற குறும்புகளைச் செய்வார்கள். உறங்கும்போது மட்டும்தான் கொஞ்சம் அமைதியாக இருப்பார்கள். அப்போதும் ஒருவரை ஒருவர் மிதித்துக்கொண்டோ, காலை மேலே தூக்கிப் போட்டுக்கொண்டோ இருப்பார்கள்.

இரண்டு பேரும் உருவத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள். யாராலும் தனித்தனியாக அடையாளம் காண முடியாது. ஒருவரை இன்னொருவர் குற்றம் சொல்வார்கள். வீட்டிலும் வெளியிலும் ஓர் இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஓடுகிற வழியில் இருக்கும் பொருட்கள் எல்லாம் அவ்வளவுதான். பள்ளிக்கூட்த்தில் மட்டும் அமைதியாகக் குறும்பு செய்வார்கள். சக மாணவர்களின் பைகளை மாற்றி வைத்துவிடுவார்கள். கரும்பலகை அழிப்பானை ஒளித்து வைத்துவிடுவார்கள். பிறர் கொண்டுவரும் மதிய உணவை ருசி பார்த்துவிடுவார்கள்.

தினமும் வீட்டுக்குப் புகார் வந்துகொண்டே இருக்கும். அப்பாவுக்கு இந்த வயதில் குழந்தைகள் குறும்புகள் செய்வது இயற்கைதான் என்று தெரியும். ஆனால், சூரியனும் சந்திரனும் செய்கிற குறும்புகள் கொஞ்சம் அளவுக்கு அதிகம் என்று தோன்றியது. எப்படி இதைக் கட்டுப்படுத்துவது என்று யோசித்தார்.

ஒரு நாள் அலுவலகம் விட்டு வரும்போது இரண்டு உண்டியல்களை வாங்கிவந்தார். சூரியனிடம் ஓர் உண்டியல், சந்திரனிடம் ஓர் உண்டியலைக் கொடுத்தார். உடனே மகிழ்ச்சியில் இருவரும் உண்டியல்களைத் தரையில் போட்டு உடைக்கப் போனார்கள். யார் முதலில் உடைப்பது என்று போட்டி வேறு. தலைக்கு மேல் தூக்கியபோது அப்பாவின் குரல் தடுத்தது.

”யாருக்கு சைக்கிள் வேண்டாமோ அவர்கள் உடைக்கலாம்.”

அவ்வளவுதான். சைக்கிள் என்ற மந்திரச் சொல் அவர்களை அப்படியே நிறுத்தியது. சைக்கிள் அவர்களுடைய பெரிய கனவு. உடனே, ”நான்தான் முதல்ல பணம் சேர்த்து சைக்கிள் வாங்குவேன்” என்று இருவரும் ஒன்றாகக் கத்தினார்கள். அப்பா அமைதிப்படுத்தினார்.

”இல்லை. நல்லா கவனிங்க. சூரியனிடம் இருக்கிறது சந்திரனின் உண்டியல். சந்திரனிடம் இருப்பது சூரியனின் உண்டியல்.”

அப்பா சொன்னதைக் கேட்டதும்தான் இரண்டு பேரும் உண்டியலைப் பார்த்தார்கள். சூரியனிடம் சந்திரனின் உண்டியல் இருந்தது. சந்திரனிடம் சூரியனின் உண்டியல் இருந்தது. அப்பா ஏன் இப்படி மாற்றிக் கொடுத்தார்?

”உங்க ரெண்டு பேரில் யார் குறும்பு செய்தாலும் இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போடணும். யார் உண்டியலில் நிறையப் பணம் சேருதோ அவங்களுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்துருவேன்.”

அப்பா சொன்னதைக் கேட்டு இரண்டு பேரும் விழித்தார்கள்.

”சூரியன் நிறைய குறும்பு செய்தால் சந்திரன் உண்டியலில் நிறைய பணம் சேரும். அவன் சைக்கிள் வாங்கிருவான். சந்திரன் நிறைய குறும்பு செய்தால் சூரியன் உண்டியலில் நிறைய பணம் சேரும். அவன் முதல்ல சைக்கிள் வாங்கிருவான். என்ன புரியுதா?” என்றார் அப்பா.

இருவரும் அமைதியாகத் தலையாட்டினார்கள்.

”நீ எப்படி சைக்கிள் வாங்கறேன்னு பார்க்கறேன்” என்று சூரியனும், ”உன்னை சைக்கிள் வாங்க விட்டால்தானே?” என்று சந்திரனும் சொல்லிக்கொண்டார்கள்.

அன்றிலிருந்து வீட்டில் குறும்பும் சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. முதலில் இரண்டு உண்டியல்களிலும் வேகமாகச் சேர்ந்த பணம், பிறகு மெதுகாகக் குறைந்து, ஒருகட்டத்தில் காசு போடுவதே நின்று போனது.

இப்போது சூரியனும் சந்திரனும் நல்ல நண்பர்கள். அப்பா ஒரு நாள் அலுவலகம் விட்டு வரும்போது சூரியன் அழுதுகொண்டிருந்தான்.

”அப்பா, நான் நடந்து வரும்போது டம்ளர் தண்ணியைத் தெரியாமல் தட்டிவிட்டுட்டேன்.. அதுக்கு உண்டியல்ல காசு போடுன்னு சொல்றான்” என்றான் சூரியன்.

அப்பா இரண்டு பேரையும் தூக்கிக்கொண்டார்.

”செல்லங்களா, குழந்தைகள்னா குறும்பு செய்யணும். ஆனால், அது மத்தவங்களைக் கஷ்டப்படுத்தாமல் இருக்கணும். என்ன சரியா? வெளியே போய்ப் பாருங்க” என்றார் அப்பா.

இருவரும் வேகமாக இறங்கி வெளியே ஓடினார்கள். வாசலில் இரண்டு புத்தம் புதிய சைக்கிள்கள் சூரியனையும் சந்திரனையும் பார்த்துச் சிரித்தன.

- உதயசங்கர

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x