Published : 18 Sep 2019 01:13 PM
Last Updated : 18 Sep 2019 01:13 PM

டிங்குவிடம் கேளுங்கள்: காந்தி ஏன் மகாத்மா?

காந்தியும் சாதாரண மனிதர்களைப்போல் தவறுகளைச் செய்திருக்கிறார். ஆனாலும் அவரை ஏன் மகாத்மா என்று அழைக்கிறோம், டிங்கு?

– சங்கீதா, 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருப்பூர்.

சுவாரசியமான கேள்வி. மகாத்மாவாக காந்தி பிறக்கவில்லை. ஒரு சாதாரண மனிதராகத்தான் பிறந்தார். வளர்ந்தார். அதனால் தவறுகளைச் செய்தார். பிற்காலத்தில் தாம் செய்த தவறுகளை நினைத்து வருந்தினார். இனி தவறு செய்யக் கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டார். அதற்கேற்ப வாழ்ந்தும் காட்டினார். எளிய வாழ்க்கை, அகிம்சை போன்றவற்றைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தார்.

பிற்காலத்தில் காந்தியை மகாத்மா என்று மக்கள் ஏற்றுக்கொண்ட பிறகும் தாம் சின்ன வயதில் செய்த தவறுகளை மறைக்காமல், தம் சுயசரிதையில் எழுதினார். இதைச் செய்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்! குற்றம் குறைகளோடு இருந்த சாதாரணமான காந்தி, பிற்காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமேற்று வழிநடத்தினார். உலக நாடுகளுக்கு அகிம்சையின் அடையாளமாகத் திகழ்ந்தார்.

நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் போன்ற உலகத் தலைவர்கள் காந்தியின் வழியைப் பின்பற்றினார்கள். அவர் மறைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அகிம்சைப் போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையை உலகத்தில் விதைத்துக்கொண்டிருக்கிறார். காந்தியை ’மகாத்மா’ என்று அழைப்பது பொருத்தம்தானே, சங்கீதா?

என் வரலாற்று ஆசிரியர் ‘அங்கோர் வாட்’ பற்றி விரிவாக எழுதி வரச் சொல்லியிருக்கிறார். எனக்கு உதவுவாயா, டிங்கு?

– ஆதித்யா, 6-ம் வகுப்பு, ஆதித்யா பிர்லா பப்ளிக் பள்ளி, அரியலூர்.

என்ன இது, ஆசிரியர் கொடுக்கும் வீட்டுப் பாடங்களை எல்லாம் என்னைச் செய்ய வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே! நீங்கள் கேள்வி கேட்டு குறைந்தது ஒரு வாரம் கழித்துதான் மாயாபஜாரில் பதில் வெளிவரும். அதுவரை எப்படி உங்களால் காத்திருக்க முடியும்? ஒருவேளை இந்தக் கேள்வி இந்த வாரம் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? அதனால் பள்ளி தொடர்பான விஷயங்களில் என் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்காதீர்கள், ஆதித்யா.

கம்போடியா நாட்டில் இருக்கும் ’அங்கோர் வாட்’, உலகின் மிகப் பெரிய வழிபாட்டுத் தலமாக இருக்கிறது (163 ஹெக்டேர் பரப்பளவு). 12-ம் நூற்றாண்டில் கெமர் வம்ச மன்னர் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. இது விஷ்ணுவுக்கான கோயிலாக முதலில் இருந்தது. 14-ம் நூற்றாண்டில் புத்தர் கோயிலாக மாற்றம் அடைந்தது.

கெமர் கட்டிடக்கலையின் சிறப்பை எடுத்துக் காட்டும் விதத்தில் கம்பீரமாக இப்போதும் நின்றுகொண்டிருக்கிறது. ’அங்கோர் வாட்’ என்றால் ‘கோயில்களின் நகரம்’ என்று பொருள். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தையும் கும்பகோணத்தையும் ‘கோயில்களின் நகரம்’ என்று அழைக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்!

கண்ணீர் ஏன் சுரக்கிறது, டிங்கு?

- வி. அணீஸ் சங்கர், 8-ம் வகுப்பு, கமலாவதி மேல்நிலைப் பள்ளி, சாகுபுரம்.

கண்கள் இப்படியும் அப்படியும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. கண்கள் இயங்குவதற்கு ஈரப்பசை அவசியம். கண்ணீர் சுரந்துகொண்டே இருப்பதால்தான் கண்கள் உலர்ந்துவிடாமல் இருக்கின்றன. கண்ணீர் ஒரு மசகுபோல் வேலை செய்வதால்தான் நாம் கண்களை மூடித் திறப்பது எளிதாக இருக்கிறது.

காற்றில் வரும் தூசி, கிருமி போன்றவை கண்களில் படும்போது, அந்தப் பாதிப்பிலிருந்து கண்களைக் காப்பாற்றுவதற்காகக் கண்ணீர் சுரந்து, அவற்றை வெளியேற்றுகிறது. கருவிழிக்குத் தேவையான ஆக்சிஜனையும் கண்ணீர்தான் வழங்குகிறது. கண்களின் மேல்புறத்தில் கண்ணீர்ச் சுரப்பி இருக்கிறது. இது எப்பொழுதும் சிறிதளவு கண்ணீரைச் சுரந்துகொண்டே இருக்கிறது.

ஒரு நாள் முழுவதும் சுரந்தாலும் 1 மில்லி அளவு கண்ணீர்தான் சுரக்கிறது. கண்களில் உறுத்தல், வலி, துக்கம் போன்ற உணர்ச்சிகள் ஏற்படும்போது அதிக அளவில் கண்ணீர் சுரக்கிறது. கண்ணீர்ச் சுரப்பிகளில் மட்டுமல்லாமல் விழிவெண்படலத்திலும் இமைகளிலும் உள்ள துணைச் சுரப்பிகளும் சிறிதளவு கண்ணீரைச் சுரக்கின்றன, அணீஸ் சங்கர்.

காலாண்டு விடுமுறையில் 10-ம் வகுப்புக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினால், மாணவர்களுக்கு மன உளைச்சல் வராதா, டிங்கு?

– ம. ரக்‌ஷன் மகாஜன், 10-ம் வகுப்பு, தூய இருதய மேல்நிலைப் பள்ளி, காவல்கிணறு, திருநெல்வேலி.

உங்கள் ஆதங்கம் புரிகிறது, ரக்‌ஷன். கடினமாக உழைத்து தேர்வு எழுதிய பிறகு, சில நாட்கள் விடுமுறை என்பது மிகவும் அவசியமானது. அடுத்து வரப் போகும் அரையாண்டுத் தேர்வுக்குப் படிப்பதற்கு, இந்த விடுமுறை நாட்கள் உற்சாகத்தை அளிக்கும். இதைப் பள்ளிகள் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது பெரும்பாலான பள்ளிகள் பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்கிறோம் என்று தினமும் சிறப்பு வகுப்புகள், விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொண்டிருக்கின்றன.

மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பள்ளிகள் இதைச் செய்கின்றன என்றாலும் சற்று ஓய்வு கொடுப்பது நல்லது. இந்த விடுமுறை மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் அவசியம். கிடைக்கும் நேரத்தில் நன்றாக ஓய்வு எடுங்கள்.

விருப்பமான செயல்களில் ஈடுபடுங்கள். மனதை உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். நண்பர்களுடன் உரையாடுங்கள். விளையாடுங்கள். பாடப்புத்தகம் அல்லாத புத்தகங்களைப் படியுங்கள். ஒரு மாற்றம் கிடைக்கும். மகிழ்ச்சி உண்டாகும். மன உளைச்சல் வரைக்கும் செல்ல மாட்டீர்கள், ரக்‌ஷன் மகாஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x