

வேளாண்மை தொடர்பான ஆய்வுகளுக்கான மத்திய அரசு நிறுவனமாக இந்தியப் பயிர் பதனத் தொழில் நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.சி.பி.டி.) உள்ளது. இதில் உணவு பதனிடும் பொறியியல் எனும் பாடத்திட்டத்தில் பி.டெக், எம்.டெக், படிப்புகள் உள்ளன. உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எனும் பாடத்தில் எம்.டெக் மற்றும் முனைவர் பட்டம் (பிஎச்.டி) ஆகியவை உள்ளன.
இந்த நிறுவனம் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள 14 நிறுவனங்களோடு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. இதில் படிக்கிற மாணவர்களை அந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறது. இந்தப் பயிற்சிக் காலம் ஆறு முதல் 10 மாதங்கள் வரை இருக்கும். இந்தக் காலகட்டத்தில் ஆயிரம் டாலர்கள் அளவுக்குக் கல்வி உதவித் தொகையும் கிடைக்கச் செய்கிறது.
இங்கே அளிக்கப்படும் நான்காண்டு கால பி.டெக். படிப்புக்கு 40 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதில் சேர்வதற்குப் பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் முதன்மைப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியலில் 55 சதவீதமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு உண்டு. அதில் எடுக்கப்படும் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும். மேலும் தொடர்புக்கு: >www.iicpt.edu.in