Published : 17 Sep 2019 12:04 PM
Last Updated : 17 Sep 2019 12:04 PM

அந்த நாள் 49: கதைகளைத் தோற்கடிக்கும் வரலாற்று விசித்திரங்கள்!

“சிந்து சமவெளியில் தொடங்கினோம். அதுக்குப் பிறகு சங்ககாலத் தமிழக நகரங்களான மதுரை (முற்காலப் பாண்டியர்கள்), புகார் (முற்காலச் சோழர்கள்), மாமல்லபுரம், காஞ்சிபுரம் (பல்லவர்கள்), வஞ்சி, முசிறி (முற்காலச் சேரர்கள்), பேரரசர் அசோகரின் ஆட்சி, இடைக்காலச் சோழர்கள், முகலாயர்கள், மதுரை நாயக்கர்கள் எனத் தமிழக-இந்திய வரலாற்றின் முக்கிய ஆட்சிக் காலங்கள், அரசர்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள், அவர்களுடைய வாழ்க்கை நிலை போன்றவற்றைப் பற்றியெல்லாம் இந்தத் தொடரில் பார்த்திருக்கோம், செழியன்.”

“ஆமா, அத்தோட கடைசியா இந்திய வரலாற்றின் முக்கிய கால வரிசையையும் தந்திருக்கியே. குழலி”

“ஆமா. அந்தக் காலவரிசைல தமிழகம் விடுபட்டிருச்சோன்னு பலரும் கேட்டாங்க. விடுபடல, இந்த முறை அதைத் தந்துட்டேன்.

என்ன பிரச்சினைன்னா, இந்திய வரலாறு குறித்துத் தெரிஞ்சுக்க சுருக்கமாகவும் முக்கிய அம்சங்களை யும் தொகுத்துத் தந்திருக்கிற பல புத்தகங்கள் இருக்கு. ஆனா, தமிழக வரலாற்றை அதுபோல தொகுத்துத் தர்ற நல்ல புத்தகங்கள் அதிகமா இல்ல.”

“பொதுவாவே நம்ம ஊர்ல பலருக்கும் வரலாறு மேல ஆர்வம் குறைவாத்தானே இருக்கும், என்னைப் போல”

“இல்ல, எல்லோருக்குமே வரலாற்றைத் தெரிஞ்சுக்கணுங்கிற ஆர்வம் தீவிரமா இல்லேன்னாலும், மனசுக்குள்ள ஓரமா இருக்கத்தான் செய்யுது. வரலாறுன்னா வெறும் எண்கள், ஆண்டுகள், நபர்கள் மட்டும்தான்கிற தவறான கண்ணோட் டம் தமிழகத்துல ஏனோ வலுவாயிடுச்சு. பள்ளி வரலாற்றுப் பாடங்கள்ல இவற்றை மட்டுமே முக்கியத்துவப் படுத்தினது இதுக்கு ஒரு காரணம். உயர்கல்வியிலும் சமூகத்திலும் வரலாறு புறக்கணிக்கப்பட்டதை இந்தக் கண்ணோட் டத்துக்கு இன்னொரு காரணமாச் சொல்ல லாம். ஆனா, வரலாறு இல்லாம வாழ்க்கை இல்ல. அப்புறம் பலரும் தவறா நினைக்கிறதுபோல, நிச்சயமா அது சுவாரசியமற்றதும் இல்ல.”

“அதுக்கு இத்தனை வாரம் நீ சொன்ன வரலாறே சாட்சி”

“கதையைவிட நிஜம் விசித்திரமானதுன்னு சொல்லுவாங்க. அதேபோலக் கதையைவிட விசித்திரமானது, சுவாரசியமானது வரலாறுங்கிறதுல சந்தேகமே இல்லை. வரலாற்றுல நிகழ்ந்த பல சம்பவங்கள் விசித்திரமானவை. அதன் காரணமாத்தான் அவை மீண்டும் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு இன்னைக்கும் அசைபோடப் பட்டுக்கிட்டிருக்கு. இந்தத் தொடர் அதுபோன்ற முக்கியமான, சுவாரசியமான, விசித்திரமான சில சம்பவங்களை மட்டுமே பேசியிருக்கு. வரலாறு ஒரு பெருங்கடல். அதற்குள் இறங்கி நீந்தும்போது பல ஆச்சரியங்கள் உங்களை வந்தடையும். கால் நனைப்பதற்கான ஆர்வம் மட்டும் இருந்தா போதும்.”

“நான் நீந்த ஆரம்பிச்சிட்டேன், குழலி”

“எல்லோரும் ஒரு நாள் நீந்துவாங்க, அலைகளைப் பார்த்துத் தயங்கினா கடைசிவரை கடல்ல நீந்த முடியாது. கரையில உள்ள அலைகளைத் தாண்டிட்டா, அப்புறம் பெருங்கடல் நம்மைத் தாங்கிக்கும், செழியன்”

தமிழகம்: சுருக்கமான காலவரிசை பொது ஆண்டு (பொ.ஆ.-கி.பி.)

300: காஞ்சியில் முற்கால பல்லவர்கள் ஆட்சி.

350: மதுரையில் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு சங்க இலக்கியம் தொகுக்கப்பட்டது.

500: பக்தி இலக்கியக் காலம் தொடங்கியது.

574 - 660: தென்னிந்தியாவில் பல்லவர்களின் எழுச்சி.

600: காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி.

650: காஞ்சி பல்லவர்களை சாளுக்கியர்கள் வீழ்த்தினார்கள்.

680 - 720: இரண்டாம் நரசிம்மவர்ம அல்லது ராஜசிம்ம பல்லவனின் ஆட்சி. இவர் காலத்தில்தான் புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், காஞ்சிபுரம் கைலாச நாதர் கோயில் ஆகியவை கட்டப்பட்டன.

846: பல்லவர்களிடம் இருந்து சோழர்கள் தங்கள் ஆட்சிப் பகுதிகளை மீட்டார்கள்.

888: பல்லவ ஆட்சிக்கு சோழர்கள் முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

899 - 1300: தென்னிந்தியாவில் இடைக்காலச் சோழர்களின் ஆட்சி.

985 - 1014: முதலாம் ராஜராஜ சோழனின் ஆட்சி. தென்னிந்தியா முழுவதும் ஆட்சிப் பகுதியை அவர் விரிவுபடுத்தினார்.

1000: புகழ்பெற்ற மரபுச் சின்னமான தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது.

1250: சோழர்களின் ஆட்சி வீழ்ந்தது.

1370: மதுரையில் இஸ்லாமிய சுல்தான்கள் புரிந்துவந்த ஆட்சியை விஜயநகர அரசர்களான புக்கர், அவருடைய மகன் குமார கம்பணர் வீழ்த்தி தமிழ் நிலப்பகுதிகளைக் கைப்பற்றினார்கள். அதன்பிறகு அவர்களது கட்டுப்பாட்டில் நாயக்கர்களின் ஆட்சி நடைபெற்றது.

1522: சோழமண்டலக் கடற்கரையில் போர்த்துக்கீசியர்கள் கால் பதித்தார்கள். நவீன காலத்தில் தமிழக மண்ணில் கால் பதித்த முதல் ஐரோப்பியர்கள் இவர்கள். சாவோ தோமே (தற்போதைய சென்னை சாந்தோம்) பகுதியில் சிறு துறைமுகத்தை அவர்கள் அமைத்தார்கள்.

(நிறைந்தது)

- ஆதி வள்ளியப்பன்,
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

இந்திய, தமிழக வரலாறு குறித்து அறிவதற்கான சுருக்கமான புத்தகங்கள்:

# A Children's History of India,- Subhadra Sen Gupta, Rupa

# The Puffin History of India, Roshen Dalal, Puffin

# The History of India for Children, Archana Garodia Gupta, Hachette India

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x