Published : 17 Sep 2019 12:04 PM
Last Updated : 17 Sep 2019 12:04 PM

மனசு போல வாழ்க்கை 14: ‘நான்’ என்று சொல்லுங்கள்!

நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலை நேர்மறையாக இல்லாதபோது எப்படி நல்ல சிந்தனைகளைக் கைக்கொள்வது? வாழ்க்கையே போராட்டமாக இருக்கும்போது தன்னம்பிக்கை நிறைந்த எண்ணங்களை வரவழைப்பது எப்படி? நோயில் கிடக்கையில் ஆரோக்கியமான மனம் எப்படிச் சாத்தியப்படும்? நெருக்கடியில் எதிர்மறை எண்ணங்கள் வருவது இயல்புதானே?

எப்படி எல்லாக் காலமும் நேர்மறையான சிந்தனையோடு செயல்படுவது? எல்லாம் நியாயமான கேள்விகளே. ஆனால், நேர்மறை எண்ணங்களே நேர்மறை உணர்வுகளையும் நேர்மறைச் செயல்களையும் தோற்றுவிக்கும் எனும்போது, நாம் ஏன் எப்போதும் ‘பாசிட்டிவ்’வாக இருக்கக் கற்றுக்கொள்ளக் கூடாது?

எப்போதுமே முடியுமா என்றால் சரியான பயிற்சியை மேற்கொண்டால் முடியும் என்பதுதான் என் பதில். அதற்குப் பல நிரூபிக்கப்பட்ட வழிகள் இருக்கின்றன. அவற்றை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் லூயிஸ் ஹேயின் அஃபர்மேஷன் (Affirmation) முறை.

‘மனசு போல வாழ்க்கை’ முதல் பாகத்தைப் படித்தவர்களை அதிகம் ஈர்த்த சிகிச்சை முறை என்று சொல்லலாம். “இந்தப் பிரச்சினைக்கு என்ன அபர்மேஷன் பயன்படுத்த வேண்டும்?” என்று எனக்கு இன்றும் கேள்விகள் மின்னஞ்சலில் வந்த வண்ணம் உள்ளன. அவ்வளவு வலிமையான மன மாற்றக் கருவி அது.

நிகழ்காலத்தைக் கவனிக்கும் ஆழ்மனம்

ஒரு சிக்கலான கால கட்டத்தில் வேறு வழி தெரியாது ஆசான் ஒருவரிடம் சென்றபோது அவர் எனக்குச் சொல்லிக்கொடுத்த வழிமுறை இது. நம்ப முடியாத அளவு பலன் தந்தது. பின் தனிநபர் சிகிச்சையிலும், குழு பயிற்சிகளிலும் நிறைய கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். இந்த 18 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் பலன் பெற்றனர். கற்றுக்கொள்கையில் மிகவும் எளிதாக இருப்பதால் இந்த வழிமுறையைச் சந்தேகப்பட்டவர்கள் உண்டு. ஆனால், பலன் கண்டபின் அதை அனுபவபூர்வமாக உணர்ந்து ஏற்றுக்கொள்வார்கள்.

‘அஃபர்மேஷனை’ நேர்மறை சுய வாக்கியம் எனலாம். உங்கள் ஆழ்மனதுக்கு நீங்கள் செலுத்தும் செய்தி இது. சரி, இதை வடிவமைப்பது எப்படி? இதற்கு மூன்று ஆதார விதிகள் உண்டு:

‘நான்’ என்று தொடங்க வேண்டும்.

நிகழ் காலத்தில் அமைய வேண்டும்.

நேர்மறை சொல் அல்லது செயல் மூலக்கருவாக இருக்க வேண்டும்.

இதைச் சிறிது விளக்குகிறேன். ‘நான்’ என்ற சொல் உங்களைச் செயல் களம் ஆக்குகிறது. ‘நான் மேடையில் சிறப்பாகப் பேசுகிறேன்’ என்பது தெளிவான அஃபர்மேஷன். மேடையில் சொதப்பாம இருக்கணும் என்ற எண்ணத்துக்கும் இந்த வாக்கியத்துக்குமான வேறுபாட்டைக் கவனியுங்கள்.

நிகழ்ச்சிக்கான பொறுப்பையும் செயல் தீர்மானத்தையும் கையில் எடுக்கிறீர்கள். அதனால் ‘நான்’, ‘என்னுடைய’, ‘எனக்கு’ போன்ற தன்னிலைச் சொற்கள் அவசியம் வேண்டும். நடந்தால் நன்றாக இருக்கும் என்பது பொத்தாம் பொதுவான எண்ணம். ‘நான் நடத்துகிறேன்’ என்பது பொறுப்பான பிரகடனம். அதேபோல் நிகழ்காலத்தில் அமைவது அத்தியாவசியம்.

எதிர்காலம் குறித்து நல்ல எண்ணங்கள் தோன்றுவது இயல்பு. ‘ஒரு நாள் பணக்காரன் ஆவேன்’ போன்றவை. இது வருங்காலத் தேதியிட்ட காசோலைபோல. ஆழ்மனம் இதை அப்பால் தள்ளிவிடும். ‘இங்கு, இப்போது’ என்ற எண்ணத்தைத்தான் ஆழ்மனம் கவனிக்கும். அதனால்தான் வருங்காலத்தை வைத்து வரும் பல கனவுகள் நிறைவேறுவதில்லை.

நிகழ்காலத்தில் ஏதேனும் ஒரு சம்பவம் நடப்பதுபோன்ற கனவைக் காணும்போது அதை ஆழ்மனம் பதிவு செய்துகொள்ளும். ‘உங்கள் காலருகில் பாம்பு!!’ என்று உங்கள் நண்பர் அலறினால் உடனே துள்ளி ஓடுவீர்கள். ஆனால், உங்கள் நண்பர், ‘நாளை உங்கள் காலருகே பாம்பு வரப்போகிறது’ என்றால் ‘அப்படியா?’ என்று அலட்டிக்கொள்ள மாட்டீர் கள். இதுதான் மனத்தின் சூட்சுமமான செயல்பாடு.

மாற்றுக் கையால் எழுத வேண்டியவை

இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், நேர்மறை வார்த்தைகள் அவசியம். எதிர்மறை வார்த்தைகள் இல்லாதிருப்பது மிகவும் அவசியம். சில அற்புதமான சுய வாக்கியங்களை இங்கு உங்களுக்கு அளிக்கிறேன். அவற்றைத் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துங்கள்.

‘நான் என்னை விரும்பி ஏற்றுக்கொள்கிறேன்!’

‘நான் என் நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறேன்.’

‘நான் என் வேலையில் தொடர்ந்து முன்னேறிவருகிறேன்.’

‘நான் என்றும் பாதுகாப்பாக இருக்கிறேன்.’

‘நான் கேட்டவை அனைத்தும் எனக்குக் கிடைக்கின்றன.’

‘நான் என் குடும்பத்தினருடன் நிறைவாக இருக்கிறேன்.’

இதை எப்படிப் பயிற்சி செய்வது? இதில் ஒன்றைத் தினசரிப் பயிற்சிக்கு எடுத்துக்கொள்ளுங்கள். காலை எழுந்தவுடன் ஒரு டயரியில் உங்கள் இடது கையால் 25 முறை அந்த ‘அஃபர்மேஷனை’ எழுதுங்கள். நீங்கள் இடக்கை பழக்கம் உள்ளவர் என்றால் வலது கையால் எழுதுங்கள். மாற்றுக் கையால் எழுதுவது அவசியம். ஒரே நேரம், ஒரே இடம், ஒரே கையேடு என்றால் நல்லது. ‘ஏன் இடது கை?’ என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

(தொடரும்)
- டாக்டர் ஆர் கார்த்திகேயன்,
மனிதவளப் பயிற்றுநர்
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும் மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார் டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.


முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: vetrikodi@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x