Published : 16 Sep 2019 11:40 AM
Last Updated : 16 Sep 2019 11:40 AM

யு டர்ன் 37: சரிகம - இசை சாம்ராஜ்ஜியம்

நம்மில் ஏராளமானோருக்கு நாட்கள் தொடங்குவது, ``கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா” என்னும் எம்.எஸ். அம்மாவின் குரலில் வரும் வெங்கடேச சுப்ரபாதத்தில்தான். தொடர்வதும், முடிவதும், எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் இசை வெள்ளத்தில். கண்ணதாசன், வைரமுத்து, டி.எம்.எஸ், எஸ்.பி.பி, சுசீலா, ஜானகி, சித்ரா எல்லோருமே நம் குடும்ப அங்கத்தினர்கள். இவர்களை நம் வீடுகளுக்கு அழைத்து வந்து நமக்கு நெருக்கமாக்கியது ``சரிகம” கம்பெனி.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்மொழி போல், இந்திய இசையும் காலம் கடந்தது. வீணை மீட்டும் கலைமகள், தம்பூரா இசைக்கும் நாரதர் எனத் தெய்வங்களையே இசை வடிவங்களாக்கியவை நம் இதிகாசங்கள். நாட்டுப் பாடல்கள், கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி எனப் பலப்பல உருவங்களில் வளர்ந்த இசை, குரு - சிஷ்யப் பரம்பரை என்னும் கல்விமுறை மூலமாக மட்டுமே, வாழையடி வாழையாக வளர்ந்தது, நிலைத்து நின்றது.

1887 வரை இந்த நிலைமைதான். அந்த ஆண்டில், எமிலே பெர்லினர் (Emile Berliner) என்னும் அமெரிக்கா வாழ் ஜெர்மானியர், குரல்களைப் பதிவு செய்யும் கிராமபோன் கருவியைக் கண்டுபிடித்தார். இதனால், இசைப்பதிவுத் தட்டுகள் (Records) பயன்பாட்டுக்கு வந்தன. ஒலிகளைத் தட்டுகளில் பதிவுசெய்து, கிராமபோனில் சுழலவிட்டால், அந்த ஒலிகளை வேண்டும்போதெல்லாம், திரும்பத் திரும்பக் கேட்கலாம். ``கிராமபோன் கம்பெனி” என்னும் பெயரில் பிசினஸ் தொடங்கினார். இது மெயின் கதை. இதில் வந்துசேரப் போகிறது ஒரு கிளைக் கதை, சென்டிமென்ட் கதை, சுவாரஸ்யக் கதை.

1800-களின் பிற்பகுதியில், இங்கிலாந்தில் பிரான்சிஸ் பராட் (Francis Barraud) என்னும் ஓவியர் இருந்தார். அவருக்கு ``மார்க்” என்னும் தம்பி. திடீரென அகால மரணமடைந்த தம்பி சொத்துக்களாக விட்டுப்போனவை, கிராமபோன், தன் குரலில் ஒலிப்பதிவு செய்த ரெக்கார்ட்கள், செல்ல நாய் “நிப்பர்”(Nipper). தன் எஜமானரை இழந்த நிப்பர் எப்போதும் சோகத்தில் உட்கார்ந்திருக்கும். ஒருநாள் பிரான்சிஸ் தன் தம்பியின் குரலை ஒலிபரப்பிக் கேட்டார்.

நிப்பரும் கண்ணீர் விட்டபடியே கேட்டது. இதில் அதற்கு நிம்மதி கிடைக்கிறது என்று தெரிந்த அண்ணன், தம்பி குரலைத் தினமும் ஒலிபரப்பினார். இந்தக் காட்சியை ஓவியமாகத் தீட்டினார். ``ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” என்று பெயர் வைத்தார்.

கிராமபோன் கம்பெனி இந்த ஓவியத்தை விலைக்கு வாங்கினார்கள். தம் ஒலித்தட்டுகளுக்கு ``ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” என்று பெயர் வைத்தார்கள். படத்தை இலச்சினை (Logo) ஆக்கினார்கள். ஒருகாலத்தில் இந்த நாய்க்கு உலகம் முழுக்க ரசிகர் கூட்டம். உங்களுக்கும் இந்தச் செல்லக்குட்டியைத் தெரிந்திருக்கலாம்.

உலக இசை வரலாற்றில் கிராமபோன் மாபெரும் திருப்புமுனை. கலைஞர்களின் குரல்களை மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துப் போகவும், கால வெள்ளத்தில் அழியாமல் காப்பாற்றவும் செய்த எமிலே பெர்லினர் ஒலி உள்ளளவும் மறக்க முடியாத மாமனிதர்.

இந்த மகத்தான தொழில்நுட்பம், கண்டுபிடிக்கப்பட்ட 14 ஆண்டுகளிலேயே இந்தியாவுக்கு வந்துவிட்டது. கிராமபோன் அன்ட் டைப்ரைட்டர் கம்பெனி (Gramaphone and Typewriter Company - சுருக்கமாக GRAMCO) என்னும் பெயரில் கடை விரித்தார்கள். தலைமையகம் கொல்கத்தா. தொழில்நுட்ப நிபுணராக வந்தவர் பிரெட் கின்ஸ்பெர்க் (Fred Ginsberg). சாதாரண ஆளில்லை, எமிலே பெர்லினரின் நேரடி உதவியாளர். இந்திய இசைக்கு பெர்லினர் கொடுத்திருந்த முக்கியத்துவத்துக்கு அடையாளம்.

கொல்கத்தாவில், கவுஹர் ஜான் (Gauhar Jann) என்னும் பெண் கலைஞர் இருந்தார். நடனம், பாடல் இரண்டிலும் அற்புதமானவர். இவருக்கு வங்கம் முழுக்கப் பெரும் ரசிகர் கூட்டம். இவரது கச்சேரியை 1902- ல் கிராம்கோ ஒலிப்பதிவு செய்தார்கள். இந்தியாவின் முதல் ஒலிப்பதிவு இசைத்தட்டு இதுதான். கிராம்கோ ஹெச்.எம்.வி. பிராண்டை இந்தியாவில் பயன்படுத்தும் உரிமையை வாங்கினார்கள். மெள்ள மெள்ள வேரூன்றத் தொடங்கினார்கள்.

இதைக் கண்டு, வியெல் ஓ போன் அன்ட் ராமாகிராஃப் (Viel- O - Phone & Ramagraph), ஓடியன் அன்ட் ரூபி ரிக்கார்டிங் கம்பெனி (Odeon & Ruby Recording Company) ஆகியோர் களத்தில். ஆனால், கிராம்கோவின் துல்லியத்தோடு போட்டிபோட முடியாமல் ஓடி மறைந்தார்கள்.

கிராம்கோ வரலாற்றில் இன்னொரு மைல்கல். இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ``ராஜா ஹரிச்சந்திரா.” 1913 - ல் வெளியானது. இது ஒரு மவுனப் படம். தாதாசாகிப் பால்கே தயாரித்து, இயக்கினார். கேட்ட பெயராக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா?

யூ ஆர் கரெக்ட். இவருக்கு அஞ்சலியாகத்தான், 1969 முதல், இந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு இந்திய அரசு ``தாதாசாகேப் பால்கே” விருது வழங்கி வருகிறது. தமிழ்த் திரையுலகில் இந்த மகுடம் சூட்டப்பட்டவர்கள் - எல்.வி. பிரசாத், நாகி ரெட்டி, நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் திலகம் பாலச்சந்தர் ஆகியோர்.

இந்திய சினிமாவின் மவுனம் கலைத்து முதன் முதலாகப் பேச வைத்தவர் அர்தேஷிர் இரானி. 1922 முதல் மவுனப் படங்கள் இயக்கிய இவர், 1931 - ல் இயக்கிய முதல் பேசும் திரைப்படம். “ஆலம் ஆரா.” இதேபோல், ஹெச்.எம்.ரெட்டி இயக்கத்தில் வெளியான தமிழின் முதல் பேசும் படம் “காளிதாஸ்.” இதைத் தயாரித்தவர் அர்தேஷிர் இரானிதான். இந்தப் படங்களின் இசைத்தட்டுகளை வெளியிட்டவர்கள் கிராம்கோ.

1946. இங்கிலாந்தில் எலெக்ட்ரிக்கல் அண்ட் மியூசிக்கல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Electrical & Musical Industries Limited - சுருக்கமாக EMI) என்னும் நிறுவனம் இருந்தது. இவர்கள் கிராம்கோவை வாங்கினார்கள். ‘கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியா’ என்று பெயர் மாற்றினார்கள். இ.எம்.ஐ. குழுமத்தின் துணை நிறுவனமாக்கினார்கள். அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு அத்தனை மொழி சினிமாக்கள், ஹிந்துஸ்தானி, கர்நாட்டிக் இசைப்பாடல்கள், தெய்வீகப் பாடல்கள் ஆகிய அத்தனை இசைத்தட்டுகளும் கிராமபோன் கம்பெனி சாம்ராஜ்ஜியம்தான்.

1969. அமெரிக்காவின் பாலிடோர் ரெக்கார்ட்ஸ் (Polydor Records) என்னும் கம்பெனி இந்தியாவில் கிளை தொடங்கினார்கள். பீட்டில்ஸ் போன்ற ராக் இசைக் குழுவினர் இளைய தலைமுறையை வெறித்தனமான ரசிகர்களாக்கிக் கொண்டிருந்தார்கள். பாலிடோர் மேற்கத்திய இசையை இந்தியாவில் பரப்பியது. இந்திய இசையில் அவர்கள் முதலில் நுழையாததற்கு இன்னொரு முக்கிய காரணம் - பெரும்பாலான இந்தியக் கலைஞர்கள் கிராம்கோவிடம் ஒப்பந்தத்தில் இருந்தார்கள்.

இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க அவர்கள் தயாராக இல்லை. இதையும் மீறி, பாலிடோர் இசைத்தட்டுகள் விற்பனையில் 40 சதவிகிதம் பிடித்தார்கள். இளைஞர், இளைஞிகளின் மாறும் ரசனையைக் கிராம்கோ உணர்ந்து, மேற்கத்திய இசைத்தட்டுகளில் கால் பதித்திருந்தால், பாலிடோரின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

கண்களை மூடிக்கொண்டிருந்த கிராம்கோ பூனை, கவனிக்காத இன்னொரு நிகழ்வு, தொழில்நுட்ப மாற்றம். 1980-களில் உலகம் ரெக்கார்டுகளிலிருந்து காசெட்களுக்கு மாறிக்கொண்டிருந்தது. கிராம்கோ இதை உணரவேயில்லை. ரெக்கார்டுகள் தயாரிப்பில் கோடிக் கணக்காக முதலீடு செய்துகொண்டிருந்தார்கள். 1980-களின் மத்தியில், இந்திய விற்பனையில் 95 சதவிகிதம் காசெட்டுகள். வெறும் 5 சதவீதமே ரெக்கார்டுகள்.

இதனால், ரெக்கார்டுகள் தயாரிப்பில் கிராம்கோ போட்ட முதலீடு முழுக்க வேஸ்ட். காசெட் தயாரிப்பு தொடங்கினார்கள், இதற்கு மிகக் குறைவான மூலதனமே வேண்டும். ஆகவே, கிராம்கோ காலூன்றுவதற்குள், நாடெங்கும் 500-க்கும் அதிகமான இசைக் காசெட் தயாரிப்பாளர்கள். சினிமா, தெய்வீகப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் என அனைத்தையும் வெளியிட்டார்கள். அதுவும் மலிவு விலையில். பலர் கிராம்கோ ரெக்கார்ட்களைத் “திருட்டு”க் காசெட்களாகக் கொண்டுவந்தார்கள். கிராம்கோ விற்பனை கரைந்தது.

கிராம்கோவின் இசைக் கச்சேரியில், பாலிடோர் வளர்ச்சிக்கு இடம் தந்தது முதல் அபஸ்வரம்; ரெக்கார்டுகளின் சகாப்தம் முடிவதை உணராதது இரண்டாம் அபஸ்வரம். தாலாட்டு முதல் தத்துவப் பாடல்கள் வரை, வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்க, சுவைக்க வைத்த கிராம்கோ ஆர்க்கெஸ்ட்ரா இனிமேல் தருமா இன்னிசை?

1980-ல் ????????????

இந்தக் கேள்விக்குறிகளை இன்னும் குழப்பமாக்க, 1983-ல் வந்தது ஒரு பூஜை வேளைக் கரடி.

(புதிய பாதை போடுவோம்!)
- எஸ்.எல்.வி. மூர்த்தி, slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x