Published : 16 Sep 2019 11:40 AM
Last Updated : 16 Sep 2019 11:40 AM

எண்ணித் துணிக: வாழும் ஆவணம் தயாரா?

இரண்டு வாரமாய் பிசினஸ் மாடல் கேன்வாஸ் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். தொழிலுக்குத் தேவை நல்ல ஐடியா.

அது கிடைத்துவிட்டால் பிள்ளையார் சுழி போட்டு வேகமெடுத்து பயணிக்காமல் எதற்கு இத்தனை ஸ்பீட் பிரேக்கர் என்பவர்களுக்கு. உங்கள் ஸ்டார்ட் அப் என்ற வண்டி சரியான கண்டிஷனில் இருக்கிறதா, போகும் இடத்திற்கு வழி தெளிவாய் தெரியுமா, வண்டியில் பெட்ரோல் முதல் டயரில் காற்று வரை எல்லாம் சரியாய் இருக்கிறதா, பிரேக் பிடிக்கிறதா இல்லை எதையாவது அல்லது யாரையாவது இடித்தால்தான் வண்டி நிற்குமா என்று செக் செய்யாமல் வண்டியை பேஷாய் ஓட்டிச் செல்லலாம். யார் வேண்டாம் என்றார்கள்.

போய் சேர்ந்தால் போதும் என்பவர்களுக்கும் நினைத்த இடத்திற்கு போகவேண்டும் என்பவர்களுக்குமுள்ள வித்தியாசம்தான் பிசினஸ் மாடல் கேன்வாஸ்!

என் தொழில் பற்றி எனக்கு அத்துபடி, எனக்கெதற்கு கேன்வாஸ், அதை எழுதும் நேரத்தில் தொழில் தொடங்கி லாபத்தை ஈட்டத் தொடங்குவேன் என்று கேன்வாஸ் எழுதாமல் காரியத்தில் இறங்கி எதிர்பாராத சிக்கல்களை சந்தித்து, எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் போய் ஸ்டார்ட் அப்புக்கே காரியம் செய்த கதைகள் ஏராளம். அந்த லிஸ்ட்டில் சேர உத்தேசம் இல்லாத
வர்கள் கேன்வாஸ் கிளப்பில் சேர்வது உசிதம்.

பிசினஸ் மாடல் கேன்வாஸ் என்று மட்டுமல்ல, எந்த ஒரு விஷயத்தையுமே ஆற அமர ஆழமாக சிந்தித்து எழுதிப் பார்க்கும் போதுதான் அதைப் பற்றி நமக்கு மொத்தமாய் புரிகிறது. என்ன செய்ய உத்தேசம் அதை எப்படி செய்ய உத்தேசம் என்பதில் தெளிவு பிறக்கிறது. ஒரு விஷயத்தை பற்றி மனதில் நினைக்கும்போது பொத்தாம் பொதுவாக மேலோட்டமாகத்தான் சிந்திக்க முடிகிறது.

அதை அமர்ந்து அதன் விதிகளுக்கேற்ப எழுதிப்பார்க்கும் போது அதிலுள்ள சின்ன விஷயங்களும் பார்ட் பார்ட்டாய் கழண்டு கண்களுக்குத் பளிச்சென்று தெரிகிறது. சின்ன கேப்புகள் கூட ஆம்புலன்ஸ் ரெட் லைட் போல் படீரென்று கண்களில் அடிக்கின்றன. அந்த கேப்பை அடைக்கும் வழிகளும் ஐடியாக்களையும் ஆராய வைக்கிறது. தவறுகளை திருத்திக்கொள்ள முடிகிறது.

பிசினஸ் மாடல் கேன்வாஸ் என்பது ஒரு வாழும் ஆவணம். உங்கள் தொழிலோடு அதுவும் சேர்ந்து வளரும். வளர வேண்டும். நீங்கள் அதை வளர்க்க வேண்டும். மாறும் தொழில் சூழலுக்கேற்ப, வளரும் உங்கள் தொழிலுக்கேற்ப கேன்வாஸை நீங்கள் மாற்றியமைத்து அதை வளர்த்து வந்தால் உங்கள் தொழில் வளரும், தழைக்கும். ஆக, கேன்வாஸ் என்பது சிறந்த வருங்காலத்
துக்கான திட்டமிடும் கருவி. அதிலிருந்து கிடைப்பது சாதாரண டேட்டா அல்ல, சப்ஜாடான இன்சைட் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஸ்டார்ட் அப் என்று மட்டுமல்ல, பெரிய கம்பெனிகள் கூட புதிதாக ஒரு பிராண்டை அறிமுகப்படுத்தும்போது அல்லது தனியாக இன்னொரு பிரிவைத்துவங்கும்போது அதற்கு தனியாய் பிசினஸ் மாடல் கேன்வாஸ் எழுதி அதன்படி செயல்படுவார்கள். உலகின் தலைசிறந்த பன்னாட்டு கம்பெனிகளான பிஅண்ட்ஜி, நெஸ்லே, ஜிஇ போன்றவைகளே கேன்வாஸ் எழுதாமல் அடுத்த பணி பார்க்க மாட்டார்கள் எனும் போது நீங்களும் நானும் அதைச் செய்யாமல் தொழில் தொடங்குவது பாவமில்லையா!

பிசினஸ் கேன்வாஸை எழுதவேண்டும், அதைப் படிப்பவர் பார்த்து பாராட்டவேண்டும் என்று எழுதுவது பஞ்ச மாபாதகம். உங்கள் தொழிலில் பணம் போடுவதா வேண்டாமா என்று முடிவு செய்ய நீங்கள் எழுதும் பிசினஸ் கேன்வாஸை முதலீட்டாளர்கள் படிப்பார்கள் என்றாலும் அவர்களுக்காக மட்டும் கடனே என்று எழுதாதீர்கள்.

உங்கள் ஸ்டார்ட் அப் பற்றி ஒவ்வொரு அங்குலத்தையும் அறிந்துகொள்ளவும் எதைப் பற்றி தெரியும், எவையெல்லாம் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற பட்டியல் அது என்பதை புரிந்துகொண்டு எழுதினால் உங்களுக்கும் உங்கள் ஸ்டார்ட் அப்புக்கும் புண்ணியமாய் போகும்.

திட்டமிட்டால் போதுமா அதை சரியாய் செயல்படுத்துவதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது என்றாலும் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை, சமாச்சாரங்களை முதலிலேயே தெரிந்துகொண்டு செயல்படுத்த தொடங்குவது சிறந்தது இல்லையா. தவறு செய்வதாய் இருந்தால் தொழில் தொடங்க வடிவமைத்த திட்டத்தில் செய்து அதை அப்பொழுதே கண்டுபிடித்து திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைப்பது பெட்டரா அல்லது பணத்தை போட்டுவிட்டு தொழில் சரிந்து போய் தலையில் துண்டு போட்டபிறகு செய்த தவறு உங்களுக்குத் தெரிவது பெட்டரா?

இந்த கேன்வாஸ் சமாச்சாரம் எல்லாம் ‘அமரர் சுஜாதா’ பாஷையில் சொல்வதென்றால் கொஞ்சம் குன்ஸாகத்தான் புரிகிறது, மொத்தமாய் தெரிந்துகொள்ள, முழுசாய் அறிந்துகொள்ள இதை கற்றுத் தரும் வகுப்புகள் இருக்கிறதா என்று கேட்கத் துடிக்கும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. கவலை வேண்டாம், இருக்கவே இருக்கிறது இண்டர்நெட். கையைப் பிடித்து எழுதச் சொல்லித் தரும் ரேஞ்சுக்கு ஏகப்பட்ட வெப்சைட்டுகள் இருக்கின்றன.

கேன்வாஸை இன்னமும் கூட தெரிந்துகொள்ள விரும்புவர்கள் ‘இளம் தொழில்முனைவோர் மையம்’ (Young Entrepreneur School) போன்ற தொழில் அமைப்புகளில் சேரலாம். சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்களின் வளர்ச்சிக்காக துவங்கப்பட்ட அமைப்பு இது. தமிழகமெங்கும் கிளை பரப்பி இளம் தொழிலதிபர்களுக்கு பிசினஸ் அறிவை வளர்த்து அவர்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டி வரும் அமைப்பு. இது போன்ற அமைப்புகளில் சேர்வது ஊக்கம், உத்வேகம், உசிதம்!

பள்ளிக்கூட காலத்தில் பி.டி பீரியட்டில் வேகமாய் ஓடி ஆடி விளையாட காலில் கேன்வாஸ் ஷூ போட்டுக்கொண்டு ஓடியது ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் தொடங்க நினைக்கும் ஸ்டார்ட் அப் என்ற ரேஸில் ஸ்பீட் எடுத்து வேகமாய் ஓடி அனைவரையும் ஓவர்டேக் செய்து வெற்றி இலக்கை அடைய உங்களுக்கு தேவை இன்னொரு கேன்வாஸ் – அது பிசினஸ் மாடல் கேன்வாஸ்!

- சதீஷ் கிருஷ்ணமூர்த்தி,
satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x