Published : 16 Sep 2019 11:40 AM
Last Updated : 16 Sep 2019 11:40 AM

பிராங்க்பர்ட்டை  கலக்கும் எலெக்ட்ரிக் கார்கள் 

மிகப் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது இந்த ஆண்டுக்கான பிராங்க்பர்ட் வாகனக் கண்காட்சி. வாகன உலகில் ஈடுபாடுள்ள ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிகழ்வுகளில் ஒன்று இது. உலக அளவில் கார்களின் தயாரிப்பு முறை மாறி வருகிற இச்சூழலில், இந்த ஆண்டு கண்காட்சி கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்மனில் உள்ள பிராங்க்பர்ட் நகரில் நடத்தப்படும் வாகனங்களுக்கான கண்காட்சி உலக அளவில் பிரபலம். பொதுவாக ஒவ்வொரு ஆண்டின் செப்டம்பர் மாதத்திலேயே இந்தக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

இந்த வருடமும் அப்படித்தான். செப்டம்பர் 12-ல் ஆரம்பமான இந்த நிகழ்வு செப்டம்பர் 22 வரை நடைபெற உள்ளது. வருடாந்திர நிகழ்வான இக்கண்காட்சியின் சுவாரசியம் என்னவென்றால், ஒற்றைப்படையான ஆண்டுகளில் கார் போன்ற மக்கள் பயன்பாட்டுக்கான வாகனங்களும், இரட்டைப்படை ஆண்டுகளில் லாரி, டிரக் போன்ற வர்த்தகப் பயன்பாட்டுக்கான வாகனங்களின் கண்காட்சியும் நடத்தப்படும். அந்த வகையில், சந்தேகமேயின்றி இந்த ஆண்டு கண்காட்சி, கார்களுக்கானதுதான்.

ஜெர்மனியில் 1897-ம் ஆண்டு இந்தக் கண்காட்சி நிகழ்வு முதன் முதலாக நடத்தப்பட்டது. அப்போது ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இக்கண்காட்சி நடந்தது. 1950-க்கு பிறகு வாகன கண்காட்சி நிகழ்வு ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகருக்கு மாற்றப்பட்டது. முதன் முதலாக இக்கண்காட்சி நடத்தப்பட்டபோது அங்கு பங்கேற்ற மொத்த வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 8.

ஆனால், தற்போது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1,500 வாகன நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றன. அந்த அளவுக்கு இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

தற்போது நடைபெற்று வருவது 68-வது கண்காட்சி. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டு இருந்தாலும். முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் போன்ற மானுடப் பேரழிவு காலகட்டங்களின் ஊடாக பயணித்திருப்பதால், சில கால இடைவெளிகளில் இக்கண்காட்சி நடத்தப்படாமல் இருந்துள்ளது.

ஆனால் சமீபகாலமாக வருடம் ஒருமுறை தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்தக் கண்காட்சிக்கு வருகை தருகின்றனர். இந்த வருடம் 800 நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றன.

இந்த ஆண்டுக்கான நிகழ்வில் அரங்கை நிறைப்பது எலெக்ட்ரிக் கார்கள் என்பது கூடுதல் சிறப்பு. உலக அளவில் பருவநிலை மாற்றம் பெரும் எச்சரிக்கையாக உருவெடுத்துள்ள இந்த காலகட்டத்தில், சூழலை பாதுகாப்பதில் ஒவ்வொரு நாட்டு அரசும் மிகத் தீவிரமான முயற்சிகளில் இறங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. அதன் வெளிப்பாடாக, வாகனத் தயாரிப்பில் கடுமையான கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளன. பலவகையான கார்கள் பங்கேற்று வருகிற இந்நிகழ்வில் கவனத்தை ஈர்த்த கார்களாக சிலவற்றை குறிப்பிட முடியும்.

இந்த ஆண்டு அனைவரையும் வியக்கவைத்த கார்களில் முதன்மையானது போர்ஷே டைகான். ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட போர்ஷே நிறுவனம், அதிவிரைவுக் கார்களைத் தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் கார் டைகான். அங்குலம் அங்குலமாக செதுக்கப்பட்டு இருக்கிறது. டெஸ்லாவின் தயாரிப்புகளுக்கு சவால் விடக் கூடிய அளவுக்கு இந்தக் கார் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக அனைவரையும் கவர்ந்தது மினி கூப்பர் எஸ்இ. முழுவதும் எலக்ட்ரிக் மயப்படுத்தப்பட்டு வெளிவந்துள்ள மினி கூப்பர் எஸ்இ-யின் பேட்டரி 35 நிமிடங்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். மினி கூப்பருக்கான சந்தையே தனி. இதில் மினி கூப்பர் எஸ்இ வாகனப் பிரியர்களைக் கவராமல் இருக்குமா என்ன?

நிகழ்வை ஆக்கிரமித்த கார்களில் முக்கியமானது ஃபோக்ஸ்வேகன் ஐடி 3.

இதுவும் பேட்டரி கார்தான். இதன் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். சந்தை விற்பனைக்கான தயாரிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 150 மற்றும் 204 என இருவகையான ஹார்ஸ்பவரில் வெளிவர உள்ளது.

பல புதிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கி கம்பீரமாக வெளிவந்துள்ளது லேண்ட் ரோவர் டிஃபெண்டர். அதிநவீனமான தொழில் நுட்பங்கள் லேண்ட் ரோவர் டிஃபெண்டரை தனித்துவப்படுத்துகிறது. பாலைவன சவாரிக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுவது லேண்ட் ரோவர்தான். உயரமான சரிவுகளில் ஏறுவதற்கு பெரும்பாலோனரின் தேர்வு லேண்ட் ரோவராக இருந்து வருகிறது.

ஆடி ஆர்எஸ் 6 அவண்ட் அதி துல்லியமான வடிவமைப்புடன் இருக்கிறது. அதன் புறத் தோற்றம், வடிவம் என அனைத்தும் கவர்திழுக்கக் கூடிய அளவில் உள்ளது. 591 ஹார்ஸ்பவரை கொண்டிருக்கும் இது, 3.5 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் அளவிற்கு திறன் கொண்டது.

இந்தக் கண்கட்சியிலேயே சிறந்த அறிமுகம் என்றால் அது லாம்போர் கினி சியான். உடைக்கப்பட்ட கண்ணாடித் துண்டுகள்போல் ஒழுங்கற்ற வடிவத்தில் காட்சி தருகிறது சியான். இதில் சூப்பர் கேப்பாசிட்டர்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பேட்டரி போல் அல்லாமல் இந்த சூப்பர் கேப்பாசிட்டர்ஸ் கார் பேனலில் பொருத்தப்படுகிறது. காருக்குத் தேவையான பவரை இது வழங்குகிறது. 3 வினாடிகளில் 97 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகமாக மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். நிகழ்வு முடிய இன்னும் ஒருவாரம் உள்ளது. அதுவரை இன்னும் பலவகையான கார்களின் அறிமுகங்களை காண பார்வையாளர்கள் கண்காட்சிக்கு ஆவலுடன் படை எடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

1 - ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட போர்ஷே நிறுவனம், அதிவிரைவுக் கார்களைத் தயாரித்து வருகிறது. அந்நிறுவனத் தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் கார் டைகான்.

2 - 3 வினாடிகளில் 97 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகமாக மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.

3 - பல புதிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கி கம்பீரமாக வெளிவந்துள்ளது லேண்ட் ரோவர் டிஃபெண்டர். அதிநவீனமான தொழில் நுட்பங்கள் லேண்ட் ரோவர் டிஃபெண்டரை தனித்துவப்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x