Published : 15 Sep 2019 11:00 AM
Last Updated : 15 Sep 2019 11:00 AM

நட்சத்திர நிழல்கள் 23: அழகு மகள் அருக்காணி

செல்லப்பா

அழகு, அறிவு, அன்பு எனும் மூன்று பண்புகளும் எப்போதுமே மனிதரைத் தடுமாறச்செய்பவை. எந்த நேரத்தில் எது அவசியம் என்பதை உணர்ந்து தேர்வுசெய்வது சாதாரண மனிதருக்குச் சிக்கலான வேலையாகப் போய்விடுகிறது. பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கு எது தேவை என்பதைச் சரியாக உணர்ந்து தேர்வுசெய்வதில் தவறி விடுகிறார்கள். அழகைக் கடக்க அறிவு வரும்; அறிவைத் தாண்டினால் அன்பு தென்படும்.

ஆனாலும், முதலில் முகத்துக்கெதிரே வந்து நிற்கும் அழகில் மனிதர்கள் மதிமயங்கிவிடுகிறார்கள். அதுவே பெரிதென்று எண்ணி மாய்கிறார்கள். அழகைவிட அறிவு தேவைதான். ஆனால், அவற்றைவிட அவசியமானது அன்பு. அது இன்றியமையாதது என்பதால்தான் ஔவையார்கூடக் கொடிதினும் கொடிது பற்றிக் கூறும்போது அன்பிலாப் பெண்டிரையும் அவர் கையால் இன்புற உண்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே நேரத்தில், பெரும்பாலான அப்படியான சந்தர்ப்பங்களில் மிக எளிதாக உதாசீனத்துக்குள்ளாவதும் அன்பே. நாம் பார்க்கப்போகும் அருக்காணியும் அப்படியான அன்பு சொரியும் மனுஷிதான். இல்லையென்றால், தன் கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதைப் பொறுத்துக்கொண்டு அவனது வீட்டிலேயே பணிப் பெண்ணாகப் வேலை செய்வதில் இன்பம் காண்பாளா? அவளும் புராண காலத்து நளாயினிபோல் தன் கணவனின் இன்பமே தனதின்பம் என்று கருதிய பேதையே.

உள்ளத்தில் நல்ல உள்ளம்

கலைமணியின் கதைக்கு மணி வண்ணன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ (1982) திரைப்படத்தில் அருக்காணியைப் பார்த்திருக்கிறோம். அருக்காணியை மறந்திருந்தால்கூட அவளது வளைந்த சடையை மறந்திருக்க மாட்டோம். அருக்காணி என்றவுடன் அவளது முகம் நினைவில் தோன்றாது அந்தச் சடை தான் சட்டென்று தோன்றும். அந்தச் சடையை யாருமே சட்டைசெய்யவில்லை என்பதைவிட, அதை எல்லோரும் சகட்டு மேனிக்குக் கிண்டல்செய்தார்கள்.

அருக்காணி வெகுளிப் பெண். எல்லாப் பெண்களையும்போல் அவளுக்கும் கல்யாண ஆசை இருக்கிறது. ஆனால், அவளது தோற்றம் பிறரை ஈர்க்கும் வகையில் இல்லை. அவளைப் பெண் பார்க்க வரும் எந்த ஆணுக்கும் அவளைப் பிடிக்கவில்லை. அதை அறிந்தபோது அவளுக்கே சங்கடமாகத்தான் இருந்தது.

இனி, தன்னை யாரும் பெண் பார்க்க வர வேண்டாம் எனத் தந்தையிடம் கூறிவிட்டு, ‘நான் அவ்வளவு அசிங்கமாகவா இருக்கி றேன்’ என வருத்தமாகக் கேட்கிறாள். ஒரு தந்தைக்குத் தன் மகளின் அன்பு மட்டும்தானே தெரியும். ‘உனக்கென்னம்மா ராசாத்தியாக இருக்கிறாய்’ என்கிறார். ‘போங்கப்பா அதையே சொல்லித்தான் என் தோழிகளும் என்னைக் கிண்டல் செய்கிறார்கள்’ எனச் சலித்துக் கொள்கிறாள். ஒரே சொல்தான் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு பொருளைத் தருகிறது.

அம்பிகை நேரில் வந்தாள்

அருகிலிருந்த சுசீந்திரத்தி லிருந்து வந்துசேராத சிவனுக்காக பார்வதிதேவி காத்திருந்ததாக நம்பப்படும் கன்னியா குமரியில் அருக்காணிக்கான சிவன் கிடைத்துவிட்டான். அவன் பெயர் முரளி; ஊர் சென்னை. கண்ணுக்கழகான பெண்ணை மணம் முடிப்பதையே அவன் லட்சியமாகக் கொண்டிருந்தான். என்னவொரு லட்சியம்! முரளியின் தந்தை பூதலிங்கமும் அருக்காணியின் தந்தையும் இருபதாண்டு களுக்கு முன்பு சிலோனிலிருந்து கள்ளத் தோணியில் இந்தியாவுக்கு வந்த நண்பர்கள். ஆகவே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பனைப் பார்த்த உற்சாகத்தில் திருமணத்தையே பேசி முடித்துவிட்டார் பூதலிங்கம்.

தந்தையை எதிர்த்துப் பேச முடியாத முரளி, ஒரு முறைகூடப் பார்த்திராத அருக்காணியின் கழுத்தில் அழுதுகொண்டே மஞ்சள் கயிற் றையும் கட்ட நேர்கிறது. அருக்காணி அழகா யில்லை என்பதே முரளியின் கண்களை உறுத்துகிறது. அவளுடன் ஒன்ற இயலாமல் தவிக்கிறான்; அவளைத் தவிர்க்கி றான். பணி நிமித்தமாக டெல்லி செல்லும் முரளியின் கண்ணில் படுகிறாள் அவனது நிறுவனத்தின் பெங்களூர் கிளையில் பணியாற்றும் ஜூலி. அருக்காணியின் அன்புடை நெஞ்சத்தை அறிய மாட்டாத முரளியை அழகும் அறிவும் தாராளமாகக் கொண்டிருக்கும் ஜூலி கவர்கிறாள். ஒரு பிரம்மச்சாரியாகவே ஜூலியிடம் அறிமுகமாகிறான் முரளி. அவன் தாலி கட்டியவன்தானே, தாலி கட்டிக்கொண்டவனல்லவே.

ஜூலியின் மீது கொண்ட மோகத்தால் பெங்களூருக்கே முரளி மாற்றலாகிச் செல்கிறான். முயற்சி திருவினையாக்கும் என்றார் வள்ளுவர். முரளியின் முயற்சியால் செல்வம் கிட்டியதோ இல்லையோ செல்வி ஜூலி கிட்டினாள். ஆம், ஜூலியை மணமே முடித்துக்கொள்கிறான். இதை அறியாத அருக்காணி, கணவன் பெங்களூரில் வீடு பார்த்துவிட்டுத் தன்னை வந்து அழைத்துச் செல்வான் என்னும் நம்பிக்கையில் பொழுதைப் போக்குகிறாள். பூதலிங்கத்தின் நச்சரிப்பு தாங்க இயலாமல் முரளி அருக்காணியை பெங்களூர் அழைத்துவருகிறான். ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் முரளியும் அருக்காணியும் பிரிகிறார்கள். புருஷனைத் தவறவிட்டவளாக நிற்கிறாள் அருக்காணி.

மனிதன் மாறிவிட்டான்

ஜூலியின் அண்ணன் ஸ்டேன்லி வழியே அவர்களது வீட்டுக்கே புருஷனைத் தொலைத்த அருக்காணி வந்து சேர்கிறாள். ஜூலியை முரளி திருமணம் செய்து கொண்டதை அறிந்து வருந்தும் அருக்காணி, வருத்தத்தை மறந்து அவனைக் காட்டிக்கொடுக்காமல் அங்கேயே பணிப்பெண்ணாக இருக்க அனுமதி கோருகிறாள். அருக்காணியின் புருஷனைக் கண்டுபிடித்து அவனுடன் அருக்காணியைச் சேர்த்துவைத்துவிட வேண்டும் என்று பிரயாசைப்படுகிறாள் ஜூலி.

அந்த வீட்டிலிருக்கும் காலத்தில் ஸ்டேன்லி அருக்காணிமீது பிரியம் காட்டுகிறான். அருக்காணியை அழகு நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவளது சடையை நேராக்குகிறான்; தோற்றத்தையே மாற்றிவிடுகிறான். அவளைக் கைப்பிடித்துக்கொள்ளவும் விரும்புகிறான். ‘என்னை மணந்துகொள் கிறாயா’ என அருக்காணியிடம் கேட்கும் ஸ்டேன்லியை அவள் அறைந்து விடுகிறாள்; அவள் அறைந்தது கூடப் பரவாயில்லை. முரளியும் அறைகிறான். உண்மையில் இதை அறியும்போது முரளி சந்தோஷப்பட்டிருக்கத்தானே வேண்டும். தனக்குப் பிடிக்காத அருக்காணியை ஸ்டேன்லிக்கு மணமுடித்துவைத்து விடலாம்தானே.

அவனது பிரச்சினையும் தீர்ந்துவிடுமே. ஆனால், முரளியிடம் இருப்பது ‘அக்மார்க்’ ஆண் மனம். அதனால் அது தடுமாறுகிறது. மனைவி யிருக்க மற்றொரு பெண்ணை மணந்து கொண்ட அவனால், தானிருக்க மற்றொரு வனை அருக்காணியின் கணவனாகப் பார்க்க முடியவில்லை. அருக்காணியைப் பார்ப்பதற்காக வரும் அவளுடைய தந்தையும் மாமனாரும் அவளை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவளுடைய தோற்றமே மாறிவிடுகிறது. தோற்றம் மட்டும் மாறவில்லை அவளுடைய வாழ்வும் மாறுகிறது.

முரளியும் அவளுடைய நல்ல மனத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறான். தனது தவற்றை உணர்ந்துவிடுகிறான் ஆனால், அதை எப்படிச் சரிசெய்வது என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை. ஒருநாள் முரளியும் அருக்காணியும் ஒருவரையொருவர் ஆதரவுடன் அணைத்துக்கொள்வதைப் பார்த்த ஜூலி அதிர்ச்சியடைகிறாள். பின்னர், தன் கணவனை அருக்காணி அபகரிக்கவில்லை அவளுடைய கணவனைத்தான் தான் கவர்ந்திருக்கிறோம் என்னும் உண்மை அவளுக்குத் தெரியவருகிறது.

அருக்காணியை அவளுடைய கண வனுடன் ஒன்றுசேர்த்துவிட்டு அவர்களது வாழ்விலிருந்து விடைபெறுகிறாள் ஜூலி. ஆணாக இருந்ததால் முரளியால் மனைவியைக் கைவிட முடிகிறது; மீண்டும் கைப்பற்ற முடிகிறது. முதலில் அவன் அருக்காணியைக் கைவிட்டான், இப்போது ஜூலியைக் கைவிட்டிருக்கிறான். ஆண் கடவுள்களே இரண்டு மனைவிகளைக் கொண்டிருக்கும்போது நமது செய்கையில் என்ன தவறு இருக்க முடியும் என்று புரிந்துகொள்கிறார் களோ ஆண்கள்? அந்தப் புரிதலில் மாற்றம் வராதவரை அருக்காணியோ ஜூலியோ அவதிப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதானா?

(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in
படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x