Published : 15 Sep 2019 11:00 am

Updated : 15 Sep 2019 11:00 am

 

Published : 15 Sep 2019 11:00 AM
Last Updated : 15 Sep 2019 11:00 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 23: கலகலப்பான காட்டுவழிப் பயணம்

wild-travel

பாரததேவி

கோயிலுக்குச் செல்லும்போது பெண்களுக்கு நிறைய வேலைகள் இருப்பதுபோல் ஆண்களுக்கும் அதற்குமேல் வேலைகள் இருக்கும். ரொம்ப தொலைவு போகும் காளைகளுக்கு வயிறு நிறைய இரைபோடவும் தண்ணீர் விடவும் வண்டிக்குச் சிக்கல் இல்லாமல் இருப்பதற்கு ‘மசுவம்’ போடவும் வண்டியில் பயணம் செய்பவர்கள் மீது மழை படாமல் இருப்பதற்கு மூடாக்குப் போடுவது காளைகளின் கால்களில் தேய்ந்துபோன லாடங்களைக் கழற்றிவிட்டுப் புது லாடங்களை அடிப்பது கோயிலில் பலியிட எந்த ஒச்சமுமில்லாத கிடாய்களைத் தேர்ந்தெடுப்பது. பூஜைக்கான சாமான்களை டவுனில் போய் வாங்கிவருவதுமாக ஆண்களுக்கு நிறைய வேலைகள் இருந்துகொண்டேதான் இருக்கும்.

வேலைகள் மலைபோல் குவிந்திருந்தாலும் எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சியின் தெறிப்பும் சந்தோஷமும் கூடி நிற்கும். உடம்பில் உற்சாகம் எகிறித் துள்ளிக் கொண்டிருக்கும். விடியற்காலை நேரம் பௌர்ணமியை ஒட்டிய நிலா வெளிச்சச் சிதறலில் இருட்டு பயத்தோடு பம்மிக் கிடக்கும். இவ்வளவு நேரமும் இவர்களை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த சேவல்கள் தங்கள் சிறகுகளை மார்பில் அடித்துக்கொண்டு ‘கொக்கரக்கோ’ என்று குரலெடுத்துக் கூவும். “ம்.

முதக்கோழி கூவிருச்சிப்பா! நல்ல சமனம். எல்லாரும் வண்டிய எடுங்க” என்று பெரிய ஆட்கள் சொல்ல முதல் வண்டியின் முன்னால் சூடமேற்றி வைக்கப்படும். ஊர் அம்மனுக்கு மாலை போட்டுத் தேங்காய் உடைத்துச் சூடம் ஏற்றிக் கும்பிட்டவர்களுக்கு ஊர்ப்பெரியவர் நெற்றியிலும் மஞ்சக் காப்பு வைப்பார். பெண்கள் நெற்றியில் மஞ்சக் காப்பு வாங்கியதோடு அடிமடியிலும் மஞ்சக் காப்பைத் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக வேண்டி வாங்கி வைத்துக்கொள்வார்கள்.

சீனியம்மாளின் ஆசை

எல்லோருக்கும் பின்னால் சீனியம்மாள் வந்து கூனிக் குறுகி கொஞ்சம் தயங்கியவாறு நின்றாள். அவள் உண்மையில் வனத்தின் அழகைப் பார்க்கவோ சாமியைப் பக்தியுடன் கும்பிடுவதற்காகவோ போகவில்லை. ‘அரிசின்னு அள்ளிப் பாப்பாருமில்ல, உம்மின்னு ஊதிப் பாப்பாருமில்ல’ என்று சொல்வதுபோல் சீனியம்மாளுக்கென்று எந்தச் சொந்தமும் கிடையாது. வயது அறுபதுக்கு மேலிருக்கும் வேலை செய்தால்தான் அன்றையச் சாப்பாடு. ஏதோ ஊர்க்காரர்கள் இவள் மீது இரக்கப்பட்டு ஊரைச் சேர்த்து ஒரு குடிசை போட்டுக் கொடுத்தார்கள். மழைக்கு ஒழுகாத குடிசை அவளுக்குச் சந்தோசம். அதில்தான் இருக்கிறாள்.

ஆனால், பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் கடித்துக்கொண்டு ஒரே கரைக் கஞ்சியாகக் குடித்ததில் அவள் நாக்கு செத்துப்போய்விட்டது. நெல்லுச் சோற்றுக்காகவும் உப்பும் உறைப்புமான குழம்புக்காகவும் அவள் ஏங்க ஆரம்பித்துவிட்டாள். யாரிடமும் சோறு, குழம்பு என்று கேட்க அவளுக்கு ரோசமாக இருந்தது. இந்த ஏக்கத்திலே செத்துப்போவோமா, அப்படிச் செத்துபோனால் நெல்லுச் சோத்துக்கும் குழம்பு மணக்கிற இடத்துக்கெல்லாம் பேயுருவம் கொண்டு அலைவோமோ என்று அவளுக்குப் பயமாயிருந்தது.

ஆனால், அதற்குள் ‘ஆறேழு கிடாக்களோடு ஊர்க்காரர்கள் குலதெய்வத்தைக் கும்பிடப் போறாங்களாம்’ என்று ஒரு நாள் இவள் களைவெட்டப் போனபோது யாரோ சொன்னார்கள். அவ்வளவுதான் அன்றிலிருந்து இவளுக்கு உறக்கமே இல்லாமல் போய்விட்டது. தினமும் தன்னோடு வேலை செய்யும் ஆட்களிடம் இன்னும் கோயிலுக்குப் போக எத்தனை நாள் இருக்கிறது என்று கேட்பாள். அவர்கள் இத்தனை நாள், இன்ன கிழமை என்று சொன்னால்போதும்.

வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறவள் இரவெல்லாம் தூங்காமல் கோயிலுக்குப் போகும் நாளை விரல்விட்டு எண்ணிக்கொண்டிருப்பாள். இப்படியே அவள் எண்ணியதில் அந்த நாளும் வந்துவிட்டது. அவள் நிலையை எண்ணி அவளுக்கே கூச்சமாக இருந்தது. அவளுக்குத் துணையாக அவள் கையில் ஒரு மண்சட்டி. முதல் வண்டியிலேயே சீனியம்மாள் முதல் ஆளாக ஏறிக்கொண்டாள். வண்டிகள் வரிசையாகப் புறப்பட்டன.

அடைமழைக்கு எங்கிருப்ப?

மேக்காற்று காட்டுப் பூவின் வாசத்தோடு சில்லென்று வீசியது. வானத்து நிலவு மேகங்களைத் தேடி தன்னந்தனியாக உலா வந்துகொண்டிருந்தது. விடியற்காலை இருட்டு, வெளிச்சம் வருவதற்காகக் கலைந்துகொண்டிருந்தாலும் ஆங்காங்கே மரங்களில் அடைந்திருந்த பறவைகள் தங்கள் பாஷைகளில் கிறீச்சிட்டன. இவர்களின் வண்டிச் சத்தத்தைக் கேட்ட ஓரிரண்டு பறவைகள் விடிந்துவிட்டதோ என்று மரத்துக்கு மரம் தாவ, காலாறி கண் மூடிய சின்னஞ்சிறு விலங்குகள் பாதையின் குறுக்கும் மறுக்கும் பதற்றத்தோடு ஓடி மறைந்தன. ஆங்காங்கே உழுதுபோட்ட நிலங்களில் ஆட்டுக்கெடைகளும் மாட்டுக் கெடைகளும் அசை போட்டவாறே படுத்திருக்கக் கெடையைச் சுற்றி மூன்று, நான்கு பேர் என்று காவல் இருந்தார்கள்.

அவர்களில் ஒருவன், “ஆட்டுக்காரா, மாட்டுக்காரா நீ அடை மழைக்கு எங்கிருப்பே?” என்று பாட இன்னொருவன், “மயிலு தோகக்கொண்டு மாடம் கட்டி நானிருப்பேன். குயிலு சிறகெடுத்துக் கூடுகட்டி நானிருப்பேன்” எனப் பாடுவான். முதலாமவன் மீண்டும், “ஆட்டுக்காரா மாட்டுக்காரா அடை மழைக்கு எங்கேயிருப்பே” என்று கேட்க இவனும் சளைக்காமல், “வேடந்தாங்கல் பறவைகூட வீடு கட்டி நானிருப்பேன்” என்று பாட அந்த ராகம் வண்டி ஓட்டுபவர்களுக்கு இனிமையாக இருந்தது.

வண்டிக்குள் இருந்த பிள்ளைகள் எல்லாம் இந்தக் காற்று சுகத்துக்கு உட்கார்ந்திருக்கும் ஆட்கள் மீது தங்கள் கால், கைகளைத் தூக்கிப்போட்டவாறு தூங்கிக்கொண்டிருந்தார்கள். வண்டிக்குள் உட்கார்ந்திருக்கும் பெண்களுக்கு பொறணிப் பேசி முடியவில்லை. கொட்டாவி வரும்போது மட்டும் அவசரமாய் மடிக்குள் இருக்கும் வெற்றிலையை எடுத்து ஆளுக்கு இரண்டாகப் பகிர்ந்து பாக்கோடு, சுண்ணாம்பு தடவிப் போட்டுக்கொண்டு பொறணியைத் தொடர்ந்தார்கள்.

மனம் நிறைக்கும் வனம்

கோயிலுக்கு அருகே வந்துவிட்டதற்கு அறிகுறியாக மலையிலிருந்து விழும் அருவிச் சத்தத்தோடு குளிர்ந்த காற்றும் வீசியது. வானம் வெளுப்பேறிக் கிடக்க பறவைகள் எல்லாம் அந்தக் கருக்கிருட்டுலேயே நாலு திசைகளுக்கும் கூட்டம் கூட்டமாகப் பறக்க ஆரம்பித்தன. சூரியன் கிழக்கே புறப்பட்டுக்கொண்டிருக்க வண்டிகள் எல்லாம் வனத்தடிக்கு வந்து சேர்ந்துவிட்டன. கொஞ்சமாய் மேலேறிக்கொண்டிருந்த சூரியனின் இளவெயிலுக்கு மரத்தின் இலைகளெல்லாம் பொன்தகடுகளாக மாறிக் கொண்டிருக்க மரங்கள் எல்லாம் பொன்விரித்த கிளைகளோடு அடர்ந்து செறிந்து, கொடிகளோடுப் பின்னிக் கிடந்தன. வனங்களுக்கு இந்தப் பொன்னிறம் இன்னும் அழகூட்டியது.

அப்போதிருந்த வனங்கள் எல்லாம் மனிதர்களின் கைபடாமல், கறைபடாமல் இருந்தன. தன்னை அண்டி வந்த விலங்கு களை வளர்த்தன. வனத்துக்குள் நுழைந்து விட்டாலே போதும். விளாம்பழம், புளியம் பழம், மாங்காய், நெல்லிக்காய், பலாப்பழம் என்று மடிகூட்டி பெறக்குபவர்களின் மடி நிறைந்துவிடும். புத்துக்காலோடு போகிறவர்கள் பெரிய குமியாகக் கிடக்கும் யானைச் சாணியில் மிதி மிதியென்று மிதித்துவிட்டு வருவார்கள். பிள்ளைகளின் கடும் இருமலுக்குத் தோல் வாரில் புங்கங்காயைக் கட்டினால் இருமல் மறைந்துவிடும் என்பதற்காகப் புங்கங்காயைப் பெறக்குவார்கள்.

சிலர் ‘இல்லாத பாட்டுக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்பதுபோல் முந்திவீசி இலுப்பப்பூவை அள்ளுவார்கள். தலையிலிருக்கும் கொண்டைக்காக தாழம்பூ மணக்கும் இடம்தேடி நடப்பார்கள். வானுயர மரங்களும் கொடிகளுமாக மலையையொட்டி இருந்த வனங்களெல்லாம் வனங்களாக இருந்தன. இப்போதுள்ள வனங்கள் எல்லாம் வானுயரக் கட்டடங்களாக மாறிவிட்டன. இன்னும் சில வனங்கள் மாறத் தயாராகிக்கொண்டு இருக்கின்றன. வெள்ளி உருகினாற்போல் மலையிலிருந்து விழுந்த அருவிகள் எல்லாம் இப்போது அருவியே இல்லாமல் வெறும் மொட்டைப் பாறைகளாக இருந்தன.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அன்றொரு நாள் இதே நிலவில்காட்டுவழிப் பயணம்கோயில்பெண்கள்சீனியம்மாளின் ஆசைஅடைமழைஆட்டுக்காரான்மாட்டுக்காரான்வனம்மனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author